You are currently browsing the monthly archive for July 2009.

எம்.பி.ஏ முடித்தவுடன் பெங்களூரில் வேலை. லௌகீஹ உலகின் உச்சமான மார்க்கெட்டிங் துறையில். வருடம் 1990. அண்ணன் (திருமூர்த்தியென்னும் தங்கம்) தயவில் சதாசிவ நகரில் வாசம். வார இறுதியில் ப்ரிகேட் ரோடில் பியர். இரவுக் காட்சி ஆங்கிலப் படம். பைக். காதலி. தரையில் இருந்து இரண்டு அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த காலம்.

பியரின் தாக்கம் குறைந்த ஒரு ஞாயிறு மாலை, கொஞ்சம் நடந்தால் என்ன என்று தோன்றவே, நடந்தேன். சிறு தொலைவில் மேக்ரி சர்க்கிள் என்னும் இடம் – இடது புறம் ரமண மஹர்ஷி செண்டர் என்று ஒரு பலகை தொங்கியது.. உள்ளே சென்று பார்த்தால், ஒரு தியான மண்டபம். கொஞ்சம் நேரம் உட்கார்ந்திருந்தேன் – யோக சாதகமெல்லாம் முட்டி வலிக்கும் வரைதான். ரமணர் பற்றித் தெரிந்து கொள்ள ஏதேனும் புத்தகம் கிடைக்குமா என்று கேட்டேன் – ஒரு புத்தகம் கொடுத்தார்கள் – அதில் மார்பிள் தரை போன்ற பள பள மொட்டையுடன் ரமணர் முறைத்துக் கொண்டிருந்தார்.. பயந்து போய் புத்தக அலமாரியில் பத்திரமாக வைத்து விட்டேன்.

பின்னர், காதலியே மனைவியான சரித்திரச் சம்பவத்திற்குப் (என்ன கொடுமை சார்!) பிறகு, அவர் திருவண்ணாமலை ஒரு முறை சென்று வந்து, விசிறி சாமியார், ரமணர், அண்ணாமலையார் ப்ரசாதம் இன்ன பிறவெல்லாம் கொண்டு வந்தார். அடேடே இந்த ரமணர் பற்றி எப்போதோ ஒரு புத்தகம் வாங்கினோமே என்று குப்பையைக் கிளர வெளி வந்தது புத்தகம். இரண்டு வரி படித்திருப்பேன் – அதற்குள் ரமணர் தந்தை பெயர் சுந்தரம் அய்யர் என்றிருந்தது.. ஒரு திராவிட ஜீனியஸை வீழ்த்த வரும் ஆரிய சூழ்ச்சியோ என்ற பயத்தில் மீண்டும் அலமாரியில் வைத்து விட்டேன். அப்புறம் ஒரு இரண்டு ஆண்டுகள் ரமணர் புத்தக அலமாரியில் அமர்ந்து கொண்டு முறைத்துக் கொண்டே இருந்தார். “எங்கே போயிடுவே நீ, மவனே” என்று சொல்வது போல் ஒரு பிரமை.

அப்புறம் பலமுறை மனைவியின் வற்புறுத்தலால் பல முறை திருவண்ணாமலை சென்று வந்தோம். அப்பல்லாம், மிக ஜாக்கிரதையாக, கேள்வி கேட்காமல், ரமணர் சிலையைப் பார்த்த உடன், “சாமி காப்பாத்து” என்று வேலையை அவருக்கு delegate செய்து விட்டு, குறைந்த பட்சத் தியாகமாக நெற்றியில் நீறு பூசிக் கொண்டு ஓடிவிடுவேன். அப்போது என்னைக் கவர்ந்த ஒரே விஷயம் அவர் கோவணம் கட்டியிருந்தது. பிள்ளைப் பருவத் தோழர்கள் என்பதற்கு இந்தியில் ஒரு பதம் சொல்வார்கள் “லங்கோட்டியா” என்று. அதாவது லங்கோடு கட்டத் துவங்கிய காலத்திலிருந்து நண்பர்கள் என்பதாய். ரமணர் மீது அப்படி ஒரு ப்ரியம் வந்தது. ஏனெனில், விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால், கோவணம் மீது ஒரு அலாதிப் ப்ரியம்.

அச்சமயம் குமுதத்தில் பாலகுமாரன் “இதற்குத் தானே ஆசைப் பட்டாய் பாலகுமாரா?” என்றொரு கட்டுரைத் தொடர் எழுதி வந்தார். அதில் சிந்து பைரவியில் வரும் “தொம் தொம்” பாட்டு ரெக்கார்டிங்கின் நடுவே இளையராஜா அவருக்கு ரமணர் பற்றி ஒரு புத்தகம் கொடுத்ததாய் எழுதியிருந்தார். ரமணர்தான் ஒரிஜினல் ஜென் குரு.. அவரைப் படிங்க போதும் என்பதுபோல் ஏதோ சொன்னதாக ஞாபகம்.. சபலம் தட்டினாலும், மத சம்பந்தமான புத்தகங்களின் எடை குறித்து மனதில் ஒரு பெரும் பீதி.. நாளைக்குப் பாத்துக்கலாம் நாளைக்குப் பாத்துக்கலாம்னு குடிகாரன் பேச்சு போல் நாட்களைத் தள்ளிக் கொண்டிருந்தேன்.

அப்புறம் ஒரு முறை ரமணாசிரமம் சென்ற போது, ஒரு புத்தகம் வாங்கினோம். அம்மணி உள்ளே தியான லோகத்தில் அமர்ந்திருக்க, நான் வேலையில்லாமல் புத்தகத்தைப் புரட்டினேன். அப்போது ஒரு கேள்விக்கு ரமணர் அளித்த பதில் மிக அட்டகாசமாக இருந்தது.

கேள்வி: தியானம் செய்யும் போது தூக்கம் வருகிறது. என்ன செய்யலாம்?

பதில்: தூங்கி எழுந்த பின் தியானம் செய்யவும்.

இதை விட ஒரு லாஜிக்கலான பதில் இருக்கவே முடியாது. எம்.பி.ஏ உலகில் லாஜிக்தான் ஆக்ஸிஜன். சத்தமின்றி (மன) கதவைத் திறந்து உள்ளே வந்தார் லங்கோட்டியார். இன்னும் சில பக்கங்கள் புரட்டினேன். இன்னொரு சம்பவம் எழுதப் பட்டிருந்தது.

வெகு தொலைவில் இருந்த வந்த ஒரு அம்மையார் ரொம்ப நேரம் ரமணர் சபையில் உட்கார்ந்திருந்தார். ஊருக்குப் போக வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்கு மேல் காத்திருக்க முடியாது. ரமணரின் அருகில் சென்றார்.

சாமி, ஊருக்குப் போகணும். வண்டிக்கு நேரமாச்சு. ஆசி குடுங்க” ன்னு கேட்கிறார்.

கொண்டுட்டுப் போகப் பாத்திரம் கொண்டு வந்திருக்கியா” ன்னு ரமணர் கேட்கிறார். குபீரெனச் சிரிக்க வைத்தது அந்தப் பதில். அதுவரை நகைச்சுவை உணர்வுள்ள ஒரு சாமியாரை அறிந்ததில்லை. கொஞ்சம் ஆர்வம் வந்தது..

ரமணாசிரமத்தின் நூலகத்தின் உள்ளே போனேன். ரமணர் பற்றித் தெரிந்து கொள்ள சில எளிதான புத்தகங்கள் வேண்டுமென்று கேட்டேன். நாலு வெற்றிலைத் தடிமனில் ஒரு புத்தகம் கொடுத்தார். “நான் யார்” என்று தலைப்பிடப்படிருந்தது. அவ்வளவுதானா என்று கேட்டேன். அவ்வளவுதான் என்றார். என்னமோ 54 வருஷமா இங்கே இருந்தாராமே இவ்வளவுதான் சொன்னாரா என்றேன் நம்ப முடியாமல்.

இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கிறார்.. எழுதியிருக்கிறார்.. ஆனால் அவர் சொன்னதின் சாராம்சம் இவ்வளவுதான் என்றார் நூலகர். இத நான் அஞ்சு நிமிஷத்தில படிச்சிடுவேன்.. இன்னும் ஏதாவது புத்தகம் கொடுங்கள் என்றேன் – என் அறியாமையின் உயரம் உணராமல்.

நூலகர் ஆர்தர் ஆஸ்போர்னின் “ramana maharshi and the path of self knowledge” என்னும் புத்தகமும், ராஜாவின் ரமண மாலை என்னும் கேசட்டும் கொடுத்தார். வீட்டுக் வந்து பாட்டுப் போட்டேன். (self knowledge என்னும் வார்த்தைகளைப் பார்த்ததும், புத்தகம் படிக்கும் ஆர்வம், கல்லைக் கண்ட நாய் போல் பின்னங்கால்களுக்குள் வால் செருக ஓடிப் போய்விட்டது). இளையராஜாவின் தாலாட்டில் மெல்ல மெல்ல ரமணர் உள்ளே நுழைந்து, சாய்வு நாற்காலி போட்டு உட்காந்து விட்டார்.

பின்னொரு நாள், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஆஸ்போர்னைத் திறந்தேன். வழுக்கிக் கொண்டு ஓடியது அவர் நடை. காமிக்ஸ் படிப்பது போல் இருந்தது. மதுரையில் ரமணர் தன்னயறிந்த நிகழ்வை ஆஸ்போர்ன் விவரித்த விதம், நான் யார் புத்தகத்தைத் திறக்கத் தூண்டியது.

நான் யார் என்னும் அவர் தத்துவத்தை விவரிக்கும் முன், அவர் தனது assumptions களைச் சொல்கிறார்.

  1. சகல ஜீவர்களும் துக்கமின்றி எப்போதும் சுகமாக இருக்க விரும்புகிறார்கள்.

  2. ஏல்லோருக்கும் தங்கள் மீது மிகப் ப்ரியம் உள்ளது

  3. அந்தப் ப்ரியத்துக்கு சுகமே காரணம்

அடுத்த மூணு நாட்களுக்கு இதை ஒரு மந்திரம் போல் சொல்லிக் கொண்டிருந்தேன். சரிதானே என்று தோன்றிக் கொண்டேயிருந்தது. என்ன ஒரு set of great assumptions.. சந்தோஷமா இருக்கறதுதான் வாழ்க்கையில் மிக முக்கியம்னு என்று ஒரு சாமியார் சொல்றது ரொம்ப சந்தோஷமா இருந்தது.. அதுவரைக்கும் சாமியார்கள் எல்லோருமே நாம் செய்த பாவங்களைப் பற்றியும் அதிலிருந்து விடுபட நாம் செய்ய வேண்டியிருக்கும் பரிகாரங்கள் பற்றிப் பேசி அலுப்பூட்டியிருந்தார்கள். பியரும் சிக்கனும் சாப்பிடுவது பாவம்னா, நரகத்துக்கே போயிடலாம்னு முடிவோடு இருந்தேன்.

ஆனால் லௌகீக வாழ்க்கை என்பது ஒரு விலையோடு வருவது. பியரும், சிக்கனும், ஆங்கிலப் பட இரவுக் காட்சியும் தாண்டி வாழ்க்கையின் சிக்கல்கள் இறுக்கத் தொடங்கிய போது, வலிக்கத் தொடங்கியது. அப்போதுதான் ரமணர் என்னும் மாபெரும் சக்தியின் வலிமை புரிந்தது.. எல்லாவற்றிலும் சந்தோஷத்தையே தேடு என்னும் பாடம் வாழ்க்கையின் எல்லாச் சாக்கடைகளிலிருந்தும் மீட்டெடுத்தது.. பிறவிப் பெரும் பயன் அன்றி வேறென்ன..

தில்லியின் அழுக்குகளைத் தாண்டி, அழகுகளைப் பார்க்க வைத்தது. தில்லிக் குளிரை சந்தோஷமாக வரவேற்க வைத்தது.. பஞ்சாபிக் கம்பெனியின் அரசியலை விலக்கை, பஞ்சாபிகளின் ambitionஐ வியக்க வைத்தது.. ஈரோட்டில் கலர் கலராய் ஓடும் காவிரியைத் தாண்டி, அவ்வூர் மக்களின் விருந்தோம்பலைப் பார்க்க வைக்கிறது.. சீன உணவை ருசிக்க வைக்கிறது. கர்நாடக சங்கீதம் கேட்க வைக்கிறது.. லௌகீக வாழ்க்கையின் ஏமாற்றங்களை “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” என்று ஒரு நகைச்சுவையுடன் வரவேற்க வைக்கிறது. வியாபாரத்தில் தோல்வியைக் கூட, அதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன என்று பார்க்க வைக்கிறது. மனம் வலிக்கத் துவங்கும் போது கண்ணை மூடிக் கொண்டால் போதும், ரமணரின் முகமும், தத்துவமும் வலிக்கும் கணத்தைத் தாண்டிப் போக உதவும் என்னும் நம்பிக்கை மிகப் பெரிய சந்தோஷம் கொடுக்கிறது..

சினிமா என்பது ஒரு விநாடிக்கு 24 ஃப்ரேம்களில் அடைக்கப் படும் புகைப் படங்கள்தான். வாழ்க்கையையும் அப்படி இன்பமான கணங்களிலேயே அடைத்து விட்டால் என்ன என்னும் பேராசைதான் இக்கட்டுரையின் மூலகாரணி. மட்டுமல்லாமல், மதிப்புக்குரிய எழுத்துச் சாதனையாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் “தீதும் நன்றும்” என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் பெரும்பாலும் தன் குமுறல்களை, கோபங்களைச் சொல்லியிருந்தார்கள். வாழ்க்கையின் ஒரு கோணம் அது. இன்னொரு கோணமும் உள்ளது. அது வெறும் இன்பங்களால் ஆனது. அதை பற்றி மட்டுமே எழுதினால் என்ன என்னும் எண்ணம்.. நாஞ்சிலுக்கு எதிர்ப்பாட்டு என்றும் கொள்ளலாம். தொடங்கிவிட்டேன். இரா.முருகனின் “குட்டப்பன் கார்னர் ஷோப்” மாதிரி, “பாலா ஸ்வீட் ஸ்டால்”

வாழ்க்கையின் மீதும், உறவுகள் மீதும் பிடிப்பு இன்னும் போகாததால், மனம் தளரும் கணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்தத் தொடர் எழுத எழுத, பிடிப்பினால் வரும் கசப்புகள் குறைந்து, வாழ்க்கையை மேலும் நிதானமாக அணுகும் பக்குவம் வரக்கூடும் என்னும் நம்பிக்கையும் ஒரு கூடுதல் காரணம். ராம ஜெயம் எழுதுவது போல்.