சமணர்களின் ஒரு பண்டிகை. ஷ்ராவண மாதத்தில் சமணர்கள் விரதம் இருந்து பின் ஒரு நாள் ஒருவரை ஒருவர் சந்தித்து “மிச்சாமி துக்கடம்” சொல்லிக் கொள்கிறார்கள். சென்ற காலத்தில் நான் ஏதேனும் வகையில் உன்னைப் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்து விடு என்று அர்த்தம் என்று என் நண்பர் கிரண் பாய் ஷா கூறினார். மன்னிப்புக் கேட்பதும், மன்னித்து விடுவதும் பல நாட் பகையைத் தீர்க்கும் வல்லமை உடையது.

என் வாழ்க்கையின் பல சிறந்த விஷயங்கள் என் துணை விஜி மூலம் எனக்குக் கிடைத்தவை. சமீபத்திய கொடை – ‘INVICTUS’ என்னும் படம். நெல்சன் மண்டேலாவைப் பற்றியது. அவரை பல விதங்களில் மகாத்மாவோடு ஒப்பிடுகிறார்கள். அவரின் மிக முக்கிய பரிமாணம் – தென் ஆப்பிரிக்காவின் அதிபராக இருந்தது.

1994ல் பதவியேற்ற மண்டேலாவின் முதல் வேலை தம் மக்களின் எதிர்பார்ப்பையும், சிறுபான்மை வெள்ளையரின் பயத்தையும் சமாளிப்பது. சாதாரண மனிதர்களின் தளத்தில், இவ்விரு குறிக்கோள்களும் ஒன்றுக்கொன்று முரணானவை.

பதவியேற்ற சில நாட்களில் அவர் ஒரு ரக்பி போட்டியைப் பார்க்க வருகிறார். தென்னாப்பிரிக்காவின் ஸ்பிரிங் பக்ஸ் அணியும், இங்கிலாந்தும் மோதுகின்றன. ரக்பி, வெள்ளையர்களின் அடையாளம். அதன் கொடியும், உடைகளும் அவர்களின் பண்பாட்டுச் சின்னம். கறுப்பர்களுக்கு அது நிறவெறியின் அடையாளம். போட்டியில் கறுப்பர்கள் இங்கிலாந்து அணியை ஆதரிக்கிறார்கள். தங்கள் நாட்டு அணியான ஸ்ப்ரிங் பக்ஸை அல்ல.. மண்டேலாவும் இதை கவனிக்கிறார். அவரும் ஒரு காலத்தில் இப்படிச் செய்தவர்தான். ராபின் தீவுச் சிறையின் வார்டர்களை வெறுப்பேற்ற, ஸ்ப்ரிங் பக்ஸுடன் மோதும் எந்த அணியையும் ஆதரித்தவர். ஆனால், இன்று அவர் அவர்களுக்கும் தலைவர்.

அவர் பதவியேற்ற முதல் நாளிலேயே தன் அலுவலத்தில் வேலை செய்யும் அனைத்து வெள்ளையரையும் அழைத்துச் சொல்கிறார். “நீங்கள் என்னுடன் வேலை செய்ய விரும்ப வில்லையெனில், சென்று விடுங்கள். ஆனால், உங்கள் தோலின் நிறமோ அல்லது நீங்கள் இன்னொரு அரசின் ஊழியர்கள் அதனால் நீங்கள் வெறுக்கப் படுவீர்கள் என்றோ பயமிருந்தால்,, உங்களுக்கு நான் சொல்வதெல்லாம் – பயப்பட வேண்டாம். உங்கள் பங்கு இந்த தேசத்துக்குத் தேவை.. அச்சு அசல் காந்தியின் குரல்..

முதல் நாளே தன் பாதுகாப்புக்காக, அதில் பயிற்சி பெற்ற வெள்ளையர்களை நியமிக்கிறார். உணர்ச்சி வசப்படும் ஷபாலாலா என்னும் தன் கீழ் பணிபுரியும் கறுப்பு பாதுகாப்பு அலுவலரிடம் சொல்கிறார் – “மன்னிப்பு ஒரு மிகப் பெரும் ஆயுதம்.. அது பல நாட் பகையை வெல்லும் சாத்தியம் படைத்த கருவி. என்னைப் பார்க்கும் மனிதர்கள் அனைவரும் என்னுடன் வரும் பாதுகாப்பு அலுவலர்களையும் பார்ப்பார்கள். Reconciliation starts here” என்கிறார்.

இதற்கு மேல் எழுதினால், படம் பார்க்கும் அனுபவம் கெட்டு விடும். அதன் பின்னர் அவர் ஸ்ப்ரிங் பக்ஸ் அணியுடன் தன்னை இணைத்துக் கொண்டு, வெள்ளயர்கள் கறுப்பர்களிடையே உருவாக்கிய இணக்கம் தான் கதை. ஒரு நாடு புதிதாய்ப் பிறந்து பிள்ளை நடை பழகும் காலத்தில், அது கடை பிடிக்க்க வேண்டிய தர்மங்களில் மிக முக்கியமானது, சிறுபான்மையினரை அரவணைத்துச் செல்லுதல். கூர்மையான கத்தியின் மேல் நடக்கும் வித்தை. மகாத்மாக்களுக்கே அது சாத்தியம்.

மார்கன் ஃப்ரீமேன் மண்டேலாவாக நடித்திருக்கிறார். இப்படத்தைப் பற்றி எழுத கூகிளில் மண்டேலா பற்றிப் படிக்கும் போது என்னது மண்டேலா வேறே மாதிரி இருக்கிறார் என்று தோன்றியது ஒரு கணம். ஸ்ப்ரிங் பக்ஸ் அணியின் தலைவர் ப்யானராக வருபவரின் மிக மிதமான இருப்பும் கண்டுணர வேண்டிய ஒன்று. மண்டேலாவின் தலைமைச் செயலர் ப்ரெண்டாவாக நடித்திருப்பவர் மண்டேலாவை “குட் மார்னீங் மண்டீபா” என்று செல்லமாக அழைக்கும் குரல் கேட்காதவர் குழல் இனிது யாழ் இனிதென்பர்..

மிக முக்கியமான ஒரு நல்ல விஷயம்- படத்தின் வசனங்கள் மிக நேராக விஷயத்தை மட்டுமே பேசுகின்றன. மிக எளிதாகவும் உள்ளன. இது ஒரு மிகச் சிறந்த உத்தி என்றே தோன்றுகிறது. மகாத்மாக்களைப் போன்ற எளிமை.

மோகன் தாஸ் என்று துவங்கும் முன்னரே கரகரவென்ன கண்ணீர் விடும் என்போல் முட்டாள் பக்தர்களுக்கு இப்படத்தின் குறைகள் தெரிவது கடினம்..

அட்டன்பரோவின் காந்திக்கு இணையான, ஏன் சில இடங்களில் மேலான படமும் கூட.

Advertisements

வழக்கமாக கார்டன் டீம் கூட்டங்கள் விஜய் மல்லையாவின் குடும்பம் செழித்தோங்க முயற்சி செய்யும்.

இம்முறை, ஒரு மாறுதலுக்காக, திரைப்படம் பார்க்க முடிவெடுத்தோம்.

ஜூன் மாதம் திரை ரசிகர்கள் இரண்டு திரைப்படங்களை எதிர்பார்த்தார்கள். ஒன்று மணிரத்னத்தின் ராவண். இன்னொன்று ப்ராகாஷ் ஜாவின் “ராஜ்நீதி”

ராஜ்நீதி சென்ற வாரம் ரிலீஸ் ஆன படம்.

படம் வெளியாகும் முன்பே, காட்ரீனா கைஃபின் உடை பரபரப்பை ஏற்படுத்தியது.

நஸ்ருதீன் ஷா, நானா படேகர், மனோஜ் பாஜ்பாய், அர்ஜூன் ராம்பால், ரன்பீர் கபூர், காட்ரீனா கைஃப் என்று ஒரு மாபெரும் கூட்டத்தை வைத்து எடுக்கப் பட்ட படம்.

அதிலும், முதல் மூவர் எமகாதகர்கள். ஒருவரை ஒருவர் விழுங்கி விடும் வல்லமை படைத்தவர்கள்.

மகாபாரதம் மூன்று வீசையும், மைக்கேல் கார்லியோனி ஒரு வீசையும் கலந்து பின்னப் பட்ட கதை.

பாரதத்தை மூன்று மணி நேரத்தில் சொல்வது மிகக் கடினமான காரியம்.

படம் முழுதும் வட இந்தியாவில் கங்கை பாயும் ஒரு மாநிலத்தின் அரசியல்.

துரியோதனனாக மனோஜ் பாஜ்பாய் – சிறுமைத்தனத்தையும், குரோதத்தையும் தன் உடல் மொழியோடு கலந்து தன்னை மிகப் பலமாக நிறுவியிருக்கிறார்.

கர்ணனாக அஜய் தேவ்கன். ப்ரகாஷ் ஜாவின் ஆஸ்தான நடிகர். அறிமுகம் நாடகத் தனமாக இருந்தாலும், தன் understated performance மூலமாக தனித்து நிற்கிறார்.  தன் தாயிடம் “நீ செய்த தவற்றை நான் செய்ய மாட்டேன் போய் வா” என்று சொல்லுமிடம் கர்ணன் மீது வழக்கமாக உருவாகும் பரிதாபத்தைத் தாண்டி ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது.

ராஜகுருவாக நானா படேகர்.  குரூரம், தந்திரம், குடும்ப விசுவாசம் மூன்றும் உருவான ஒரு கலவை. முதலில் கொஞ்சம் செயற்கையாய்த் தோன்றினாலும், இறுதியில் சூத்திரதாரியாக விஸ்வரூபம் எடுக்கிறார்.

அர்ஜூன் ராம்பால் –கதாநாயகனின் அண்ணன் – பொறுமையற்ற மூத்தவன். பீமன் என்று சொல்லலாமா? இல்லை காட்ஃபாதரின் மூத்த மகன் சன்னி என்று சொல்லலாமா? தெரியவில்லை. அதுவே இக்கதையின் விசித்திரம். ஒரு புறம் கௌரவர்கள் – இன்னொரு புறம் கார்லியோனி குடும்பம் – இவர்களுக்கிடையே நடக்கும் யுத்தம். எனவே இதில் அறப் பிரச்சினைகள் இல்லை. முழுக்க முழுக்க நாற்காலிக்காக நடக்கும் போர். அழகன். அவனின் அனைத்து பலவீனங்களும், நேர்மையும் சொல்லப் பட்டுள்ளன.

கதாநாயகன் – ரன்பீர் – மைக்கேல் கார்லியோனி –  எதிர்பாராத ஒரு பர்ஃபார்மென்ஸ்.  ஒரு சாக்லேட் கதாநாயகனாக அறியப் பட்ட இவர்தான் சதுரங்கத்தின் மிக முக்கியமான காய். அமெரிக்காவில் படித்துக் கொண்டு, அங்கு ஒரு வெள்ளைப் பெண்ணைக் காதலிக்கும் outsider. தந்தையின் மரணம் அரசியல் சுழுலுக்குள் இழுக்க அதில் வந்து சேர்கிறார். இவரை அனைவரும் அல் பசினோவோடு இணைத்துப் பாராட்டுவதே இவருக்கு மிகப் பெரும் கௌரவம். பாலிவுட்டின் முதல் குடும்பத்தின் லேட்டஸ்ட் வாரிசு. பெயர் சொல்லும் பிள்ளை. Amazing. படம் வெளியான முதல் வாரத்திலேயே இந்தியா டுடேயின் அட்டைப் படத்தில் வரும் அளவுக்குப் பாராட்டுக்கள்.

சுழலில் சிக்கி, விதவையாகி, ப்ரௌன் கலர் சேலை கட்டி அரசியலுக்கு வரும் காட்ரீனா கைஃப் நடிக்கும் முதல் படம். ப்ரகாஷ் ஜாவின் இயக்கத்தில் ஜவுளிக் கடை பொம்மை கூட நடித்து விடும் போல..

நஸ்ருதீன் ஷா – கௌரவத் தோற்றம் –

ஆனால், பாரத்தைச் சொல்லவோ, காட்ஃபாதர் கதையைச் சொல்லவோ மூன்று மணி நேரம் போதாது. அப்படிச் சொல்ல ஒரு ஜீனியஸ் திரைக் கதை வேண்டும். அதுதான் படத்தின் பலவீனம். பொதுக் கூட்டங்கள் மூலமாகவே கதை நகர்கிறது. கதை குறுகிய சந்தில் பறக்கும் ஆட்டோ மாதிரி இருக்கிறது. மிக அற்புதமான F1 ரேஸ் ஓட்டக் கூடிய சாத்தியம் தவற விடப் பட்டிருக்கிறது. சொல்வது எளிது. செய்வது மிகக் கடினம்.

காமிரா மிகச் சரியான பக்க பலம். பொதுக்கூட்டமோ, கங்கையோ.. – கதையினூடே பயணிக்கிறது. குந்தியும் கர்ணனும் சந்திக்கும் காட்சியின் பின்புலமாக கங்கை. இவ்வளவு அழகான செட்டிங்கை, இயக்குநர் பயன்படுத்தத் தவறிவிட்டது போல் இருந்தது. அதே போல் நெருப்பின் தழலினூடே முகங்கள் தெரிய அமைக்கப் பட்டிருக்கும் காட்சிகள் – போரின் இழப்பையும், துயரத்தையும் காமிரா சொல்கிறது கவிதையாக.

படத்தின் ஒலியமைப்பு படத்தின் அடுத்த பலம். அமைதியாகப் புகைத்துக் கொண்டிருக்கும் ரன்பீரின் சிகரெட்டில் இருந்து வெளிப் படும் மெல்லிய உறிஞ்சும் ஒலி முதல், ஒரு வெடிகுண்டு வெடித்துச் சிதறிய கணம் காது சவ்வில் வந்து அறையும் ரீங்காரம் வரை –

ஒரு மிக கடுமையான உழைப்பு ஒரு ஆக்கமாக ஆகும் போது, அதன் மீது மிக்க மரியாதை வருகிறது. காரணம் – அதிலுள்ள நேர்மை

அவசியம் பார்க்கவும். இது ஒரு ஆல் டைம் கிளாசிக்கா என்று சொல்லத் தெரியவில்லை – ஆனால் மிக நல்ல படம்.

தான் ஒரு முஸ்லீம் என்னும் அடையாளம் சுமக்க நேரிடுவதன் துயரங்களைத் தான் ஷாருக் திரைப்படங்களாக எடுக்கிறாரோ என்று தோன்ற வைக்கும் இன்னொரு படம்.  “ச்சக் தே” – இந்தியாவில் முஸ்லீமாக இருப்பதன் தொந்தரவுகளும், இதில் மேற்குலகில் முஸ்லீமாக இருப்பதன் தொந்தரவுகளுமே கதைக் களன்.

ஃபாக்ஸ் என்னும் ஹாலிவுட் நிறுவனம் தயாரித்துள்ள படம். கரண் ஜோஹரும், ஷாருக் கானும் சேர்ந்து.

ஷாருக்கானும் காஜோலும் பல காலம் சென்ற பின்னர் ஜோடி சேரும் படம். கரண் ஜோஹர் பாலிஉட்டின்  மில்ஸ் அண்ட் பூன் படங்கள் செய்யும் இயக்குநர். இவர் படத்தில் வரும் கிளிஷேக்களைத் தொகுத்து ஒரு கலைக்களஞ்சியமே வெளியிடலாம். ரவி கே சந்திரன் என்னும் நட்சத்திர ஒளிப்பதிவாளரும் சேர்ந்த கூட்டணி.

அந்தக் காலத்து நடிகைகள் ஓவர் ஆக்டிங் செய்யும் அழகைக் காண விரும்பும் ரசிகர்கள் 30 ரூபாய் கொடுத்து dvd வாங்கிப் பார்த்துக் கொள்ள முடியும். அவர்களை அழைத்து வந்து இன்றைய படங்களில் நடிக்க வைத்து, நம்மைப் பார்க்க வைப்பதை spca வில் புகார் செய்ய வேண்டும். “நெம்ப” கஷ்டம். படத்தின் முதல் 15 நிமிடங்கள் ரசிகன் படத்துடன் தன்னை இணைத்துக் கொள்ளும் நேரம் – ஜரீனா வஹாப் என்னும் அந்தக் கால இந்தி சரோஜா தேவி அந்த முயற்சியை வெற்றிகரமாக முறியடிக்கிறார். இது படத்துக்கு பெரும் நஷ்டம்.

வெற்றிகரமான நடிகையாக இருந்த காலத்தில் இருந்ததை விட மிக அழகாகத் தன் உடலைப் பராமரித்திருக்கிறார் காஜோல். அழகிய பெரும் கண்களும், துறு துறு ஆளுமையும், ஆஸ்பெர்கர் ஸிண்ட்ரோமினால் பாதிக்கப் பட்டு உணர்வுகளை வெளிப்படையாகக் காண்பிக்கத் தெரியாத ஷாருக் கானுக்கு சரியான complement. ஷாருக்கின் நடிப்பு, dustin hoffman இன் rain man ஐயும், forest gump ஐயும் நினவூட்டுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் , இது ஷாருக்கின் ஒரு கடும் முயற்சி என்றே சொல்ல வேண்டும்.

1993 மும்பை இந்து முஸ்லீம் கலவரம், 9/11 உலக வர்த்தக இரட்டைக் கோபுர நாசம், ஓபாமா என்னும் ஆப்ரோ அமெரிக்க அதிபர் என்னும் உலக சரித்திர ஊசிகளுனூடே நூலாய் கதாநாயகனின் வாழ்க்கையைப் பிணைத்திருக்கிறார். ஆனால் ஒரு ஒத்திசைவான நிகழ்வாய்த் திரைக்கதையில்லை. மூன்று க்ளைமேக்ஸ்களைத் தாண்டி இறுதிக் க்ளைமேக்ஸ் வருவதற்குள், போதும்டா சமி என்றாகிவிடுகிறது.

காட்சிகளைப் படமாக்கிய விதம் மிக நன்றாக இருக்கிறது. இது கரண் ஜோஹரின் பலம். நிகழ்வுகளை, மனதில் தன் உயிர் மந்திராவுடன் ஷாருக் நிகழ்த்தும் உரையாடல்களாக அமைத்திருப்பது மிக அழகான உத்தி. உணர்வுகளை வெளியே சொல்லத் தெரியாமல் அதே சமயம் அதில் தன் மனதைச் சொல்கிறது ஷாருக்கின் குரல். படத்தில் மனதை நெகிழ்த்தும் விஷயம் இவ்வுரையாடல்களே.. ஆனால், படம் முழுதுமே நல்ல காட்சிகளின் தொகுப்பாக இருப்பதுதான் குறை. திரைக்கதையின் திருப்பங்களில், ட்ராபிக் சிக்னல் போர்ட் மட்டும்தான் இல்லை.

பல இடங்களில், இடம் சுட்டிப் பொருள் விளக்கும் உத்தியும், க்ளிஷேக்களும் (கறுப்பர்களோடு சேர்ந்து பாடும் we shall overcome; குரான் மொழிகள் கேட்டு வெறுப்புடன் விலகும் அமெரிக்கர்கள்; கதாநாயகன் – நாட்டில் வெள்ளத்தின் போது ஏழைகளுக்கு உதவுவது – அதன் மூலம் மக்களினூடே அவர் பிரபலமாவது..) இயக்குநரின் திறன் போதாமையைக் காடுகிறதா அன்றி இந்திய சினிமா வர்த்தக நெருக்கடியா என்று தெரியவில்லை – silly.

பிண்ணனி இசை ஆறுதல். படத்தில் பொது ஜனத் தளத்தின் உணர்வுகளைச் சொல்கிறது. மிகவும் அதிகமாக மெலோடிக். ரவி கே சந்திரனின் கேமரா கதையின் ஒட்டத்துடன் செல்கிறது – மிக அற்புதம் என்று சொல்ல முடியாது – ஆனால் சில இடங்களில் லைட்டிங் – ஷாருக் தனியே வீட்டின் ஒரு  அறையில் அமர்ந்திருக்கும் காட்சியின் லைட்டிங் வெகு அழகு. பஸ்ஸில் பயணம் செய்யும் ஷாருக்கை அதன் ஓட்டத்தோடே பிடித்திருப்பதும் அழகு.

கொஞ்சம் கூர்மையான திரைக்கதையோடு இசையையும், காமிராவையும் துணையாய்ச் சேர்த்துக் கொண்டு ஒரு காவியம் படைத்திருக்கலாம். வாய்ப்பு தவற விடப் பட்டிருக்கிறது.

படம் வெளியிடும் முன் திரை ஆளுமைகளை மிரட்டி பொருள் நஷ்டம் ஏற்படுத்தும் உத்தியை சிவ சேனைக் கையாள முயற்சித்தது. மும்பை அதை வெகுவாகக் கண்டு கொள்ளவில்லை என்பது ஆறுதல். அது போன்ற குறுகிய அரசியல் நோக்கங்களுகெதிராக ஒரு ஓட்டுப் போட அவசியம் பார்க்க வேண்டிய படம்.

சமீப காலங்களில் இந்தியத் திரைப் படங்களில் மிக அதிகமாக அமெரிக்கா தென்படுகிறது.. இப்படியே போனால இன்னும் சில வருடங்களில் கே.எஸ். ரவிக்குமார் அமெரிக்காவை வைத்து ஒரு படம் எடுக்கக் கூடும் சாத்தியங்கள் மனதுள் பீதியை வளர்க்கக் கூடியவை.  வெள்ளை மாளிகைப் படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு, வெள்ளி மீசையுடன்,  வெற்றிலை, வெங்கலச் சொம்பு சகிதமாக, முழங்கால் மீது கையை வைத்துக் கொண்டு, சரத்குமார், “ஏண்டா சின்ராசு, பராக் ஓபாமா என்றா சொல்றான்” என்று கேட்பது போல் ஒரு கற்பனை மனதுள் எழுகிறது. Possible..

மும்பையில் புதிதாய் வாங்கிய கார்டன் நிறுவனத்தின் அலுவல்களைக் கவனிக்கச் சொல்லி ஆர்டர் வந்தவுடன் நண்பர் சுதர்ஸன் சொன்னார் – “அந்த நிறுவனத்தின் முதலாளிகளுள் ஒருவர் ஓஷோ பக்தர். அவருடன் நீங்கள் இரண்டு ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும்” கோழி தின்னக் கூலி குடுக்கறாங்கன்னு நெனச்சிகிட்டேன்.

ஓஷோ பற்றி, எனது தோழியின் மூலமாகக் கொஞ்சம் அறிந்திருக்கிறேன். A cup of Tea, walking in zen போன்ற சில புத்தகங்கள் படித்திருந்தேன் அது வரை. அவர் ஒரு deconstructionist என்று சொல்லலாமா என்று தெரியவில்லை – எல்லவற்றையும் உடைத்துப் போடும் ஆசாமி. சாதாரண வாழ்க்கையின் அனைத்து holy cows ஐயும் அடித்து பிரியாணி செய்பவர். திருமணம், மதம், அன்பு எல்லாவற்றின் முரண்களையும் எள்ளி நகையாடுபவர். பேச்சில் இரண்டு பக்கத்துக்கு ஒரு செக்ஸ் ஜோக். ஆனால், உடைக்க முடியாத லாஜிக் அவர் உரையில். அவர் புத்தகங்கள் எதுவும் எழுதியதில்லை. பல்வேறு தலைப்புகளில் அவர் பேசிய உரைகளைத் தொகுத்து, அவர் பக்தர்கள் புத்தகங்களாக வெளியிட்டிருக்கிறார்கள்.

மும்பை போனதும் ஓஷோ பக்தரான கிரண் பாய் ஷா வை சினேகம் பிடித்துக் கொண்டேன். என் டேபிளில் ரமணரின் புகைப் படம் பார்த்ததும் அவருக்கும் என்னைப் பிடித்துப் போக, ஒரு வார இறுதியில் புனே பயணம். உடன் பணிபுரியும் நண்பர்களுக்கு ஒரே சிரிப்பு. என்னமோ காமாத்திபுராவுக்குப் போவது போல் கேலி!

அந்த வெள்ளி இரவு கிரண் பாயின் ஸ்கோடா லாரா நீரில் அன்னம் செல்வது போல் சாலையில் மிதந்தது. மும்பையின் ஆரவாரங்கள் தாண்டியதும், அவர் காரில் ஒரு சி.டி ஒலிக்கத் துவங்கியது. முதலில் அது ஏதோ ஷாயரி (கவிதை) போலத் தோன்றியது. வடக்கே கவிதை வாசிப்பது ஒரு நிகழ்வு. ஏதாவது வாக்கியத்தை, வாசிப்பவர் இரண்டாவது முறை படித்தால் கேட்பவர்கள் “வாஹ்! வாஹ்!!” என்று சொல்ல வேண்டும். இம்சை. ஆனால் இது கவிதையல்ல.. உரை – கொஞ்சம் காது கொடுத்துக் கேட்டதில் மஹாவீரரைப் பற்றிய உரை. முழுக்க முழுக்க இந்தியில் – புரிவது கொஞ்சம் கடினமாக இருந்தாலும், அந்தக் குரல் – மிக மிருதுவாக, பட்டுப் போல் ஒலித்தது. கொஞ்ச நேரத்தில் அக்குரலின் தாலாட்டில் தூங்கிப் போனேன். சற்று நேரம் கழித்து சாலையில் ஒரு திருப்பத்தில் கண் விழிக்க, பட்டுக் குரலோன் இன்னும் பேசிக்கொண்டிருந்தார். அப்போதுதான் பல்ப் எரிந்தது.

கிரண் பாய்.. ஒஷோ?’ என்று வினவினேன் – ‘ஆமாம்’ என்றார் புன்னகையுடன். இரவு கிரண் பாயின் புனே ஃப்ளாட்டில் தங்கல்.

அடுத்த நாள் காலை பகவான் ரஜ்னீஷின் புனே ஆசிரம வரவேற்பறையில் நின்றோம். கிரண் பாய் எனக்கு ஒரு செந்நிற ஆடையைக் கொடுத்து அணிந்து கொள்ளச் சொல்லியிருந்தார். அது ஆசிரமச் சீருடை. உடல் முழுதும் போர்த்திக் கொள்ளும் பாதிரியார் போன்ற உடை. முதலில் ரத்தப் பரிசோதனை – எய்ட்ஸ் இருக்கிறதா என்று பார்ப்பதற்காக. நிறுவனங்கள் தேவையில்லை என்று சொல்வதற்குக் கூட ஒரு நிறுவனம் தேவைப் படும் விந்தையை நினைத்துச் சிரித்துக் கொண்டேன். விதிகள் இல்லை என்பதும் ஒரு விதியே!

அரை மணி நேரத்தில் நீங்கள் செல்லலாம் என்று அனுமதி வந்து விட்டது. ஆசிரமத்துள் கொஞ்சம் தாமதமாகச் சென்றதால், உங்களுக்கு நாளைக்குத் தான் induction. இன்று சும்மா சுத்தி வாருங்கள் என்று சொல்லிவிட்டார்கள். கிரண் பாய் நேரே தியானம் செய்யப் போய்விட, கூட வந்த சந்திரகாந்த் பாய் அழைத்து சென்று ஒவ்வொரு இடமாகக் காட்டினார். கொஞ்ச நேரத்தில் கொட்டாவி வந்து விட்டது – பேசாமல் சனிக் கிழமை ஃபேக்டரியிலேயே இருந்திருக்கலாம் போல் இருந்தது. கஷ்டப் பட்டு மதிய உணவு வரை சமாளித்தேன்.

மதிய உணவுக்குப் பின் எனக்கு ஏற்படும் மிகப் பெரும் ப்ரச்சினை அன்றும். பாலா தளவாய்ப்பேட்டையிலிருந்து வெளியே வந்து விட்டாலும், பாலாவுக்குள் இருக்கும் தளவாய்ப் பேட்டை வெளியே போகாது என்பது எங்கள் அம்மிணியின் மேற்கோள். ஈரேழு புவனங்கள் சென்றாலும் மதிய உணவுக்குப் பின் எனது cpu திறன் குறைந்து கண்கள் சுழற்றும். அன்று கொஞ்சம் அதிகம் சுழற்றியது போலிருந்தது. எப்படிடா இந்த இரண்டு நாள் சமாளிக்கப் போகிறோம் என்று பீதியாக இருந்தது.

பல்லைக் கடித்துக் கொண்டு 4 மணி வரை ஓட்டி விட்டேன் – இரண்டு முறை சொக்க நாதனானதாக ஞாபகம். 4 மணிக்குக் கிரண் பாய் தியான லோகத்திலிருந்து வெளியே வந்தார். “வீட்டுக்குப் போய் டீ சாப்பிடலாமா?” என்றார். “ஆஹா, பேஷா என்ற படியே வெளியே பாய்ந்தோடினேன்.

பிஸ்கட், காரி என்ற பல வஸ்துக்களுடன் டீயும் சாப்பிடுகிறார்கள் குஜராத்திகள். டீ சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் அமைதி. நான் செய்தித் தாளை மேய்ந்தேன் சந்தோஷமாக. கொஞ்ச நேரம் கழித்து, கிரண் பாய் ‘இரவு ஓஷோவின் உரைக்குப் போலாமா?” என்றார். மனதுள் பலியாடு போல் உணர்ந்தேன். தனி மனிதனுக்கு ஒரு சோதனை வந்தால் ஒண்ணும் பண்ண முடியாது. இரவு உரைக்கு வெள்ளையாடை. எகிப்து பிரமிட் போல் அமைக்கப் பட்ட ஒரு பெரிய ஹாலுக்குள் சென்றோம். தியான மண்டபம் செல்லும் வழியில் இரு புறமும் சல சலவெனச் செயற்கையாய் உருவாக்கப் பட்டிருந்த நீர் நிலைகள். அதன் நடுவே நடந்து செல்வது தாஜ் மகாலை நினைவுறுத்தியது.

அந்த இரவு நிகழ்ச்சிக்கு ஒரு வழி முறை உண்டு. முதலில் இசைக் கருவிகளை மீட்டுவார்கள். அதற்கேற்ப பங்கு பெறுவோர் நடனமாடுவார்கள். பெரும்பாலும் தனியே. ஓரிருவர் துணையோடு. ஆனால் அவ்வரங்கில் அது விகல்பமில்லாமல் இருக்கிறது. அவ்விசை மெல்ல மெல்ல உச்ச ஸ்தாயியை அடையும் போது அனைவரும் ஓஷோ என்று கைகளை உயர்த்தி கத்துகிறார்கள். அதன் பின் அனைவரும் பளிங்குத் தரையில் அமர்ந்து கண்களை மூடிக் கொள்கின்றனர். இப்போது இன்னொரு விதமான இசை வருகிறது. இது பெரும்பாலும் சித்தார் போன்ற தனித் தந்தியிசை. நடனத்தில் மெல்ல சூடான உடல் குளிர்வதை உணர முடிகிறது. இசையின் முடிவில், திரையில் ஓஷோ தோன்றுகிறார்.

அன்று அவருக்குக் கிடைத்தவர் மொரார்ஜி தேசாய். யாரோ ஆல்கஹாலிஸம் பற்றிக் கேட்க அதற்கு ஓஷோ சொல்வது – அதை விட அதிகார மோகம் பயங்கரமானது. இங்கே பாருங்கள், இந்த ஆள் மொரார்ஜி, நாட்டின் பிரதமராக இருந்தவர். இப்போது சொல்கிறார் – மக்கள் விரும்பினால், நான் குஜராத்தின் முதல்வராகத் தயார் என்று. (எனக்கு ராஜாஜி நினைவுக்கு வந்தார்). சாராய போதைய விட அதிகார போதை மிக மோசமானது. சாராய விருப்பு நோயெனில், அதிகார போதையை என்ன சொல்வீர்கள்? அன்று அவரிடம் மொரார்ஜி மாட்டிக் கொண்டார்.

அவரது உரை மிக மெதுவாகச் செல்கிறது. குறுக்கெழுத்துக் கற்றவர்கள் அப்படியே நோட்ஸ் எடுத்து விடலாம். அவ்வளவு மெதுவாக உரையாற்றுகிறார். வார்த்தைகள் பிசிறுவதில்லை. ஒரு முறை எடுத்தாளப் பட்ட வார்த்தை மீண்டும் வருவதில்லை. வாக்கியங்களின் நடுவே யோசிப்பதில்லை. அழகான இளையராஜா பாடல்களின் சரணங்களின் நடுவே, interlude ஒன்று நுழைந்து நம்மைத் தம்முடன் அழைத்துச் சென்று பின் மீண்டும் பாடலின் சரணத்துள் கொண்டு சேர்ப்பதைப் போல, ஓஷோ தன் உரையின் நடுவே சற்றே விலகலாய் ஒரு கதை சொல்லி, அனைவரையும் சிரிக்க வைத்து, பின் மீண்டும் உரையின் நோக்கத்துக்கு வருகிறார்.

மென்மையான மனதை வருடும் குரல் ஓஷோவுடையது. மெல்ல மெல்ல முத்துக்கள் பொறுக்கி எடுத்து மாலை கோர்ப்பது போல் அழகான வார்த்தைகளைப் பொறுக்கி அவர் வாக்கியங்களை உருவாக்கும் பாணி ஒரு தேர்ந்த சொற்பொழிவாளருடையது. மொத்த கூட்டத்தினரையும் மெய்மறந்து கேட்கச் செய்யும் திறன் அவரது. குறை என்று பார்த்தால் அவரின் ஆங்கில உச்சரிப்பில் கொஞ்சம் தெரியும் accent.

உட்கார்ந்திருந்து அவர் பேச்சைக் கேட்டவன் அப்படியே தரையில் படுத்து விட்டேன். மெல்ல அவர் குரல் தூரத்தில் கேட்டுக் கொண்டே இருந்தது ரொம்ப சுகமாக இருந்தது. திடீரென மீண்டும் இசை. விழித்துக் கொண்டேன். ஒஷோவின் உரை முடிந்து விட்டிருந்தது. அனைவரும் தத்தம் mats முதலானவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்பினர். பளிங்குத் தரையின் ஜில்லிப்பு உடல் முழுதும் பரவியிருந்தது. மனதின் ஆரவாரங்கள் அடங்கி ஒரு அமைதி வந்திருந்தது. மொத்த கூட்டமும் அமைதியாகக் கலைந்து சென்றது. காற்றில் இலைகளின் சலசலப்பு மட்டுமே..

ஆசிரமத்தை விட்டு வெளியே வந்ததும், கார் மோட்டார் சத்தங்கள். கிரண் பாய் திரும்பிப் பார்த்துக் கேட்டார் “எப்படி இருந்தது?” “ரொம்ப சுகமாய் இருந்தது கிரண் பாய்” என்றேன். அப்படியே நடந்து கிரண் பாயின் ஃப்ளாட்டை அடைந்தோம்

அன்றிரவு கொஞ்சம் பியர் அருந்திவிட்டு, சாப்பிட்டு விட்டுப் படுத்தவுடன் தூக்கம் – முதல் நாள் நள்ளிரவுதான் புனே அடைந்திருந்தோம்.

அடுத்த நாள் guided tour – ஓஷோவின் ஆசிரமங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள், தியான முறைகள், விதிமுறைகள் என்று அரை நாள் வழிகாட்டுகிறார்கள். இந்தியர்களுக்கு என்று சில அதிக விதிகளைத் தனியே சொல்கிறார்கள். பெண்களை உற்றுப் பார்க்காதீர்கள். அவர்களை அவர்களின் அனுமதியின்றித் தொந்தரவு செய்யாதீர்கள் etc etc. தேவை.

மதியம் சாப்பிட்டு முடித்தவுடன் சந்திராகாந்த் பாய் ஓஷோவின் சமாதியில் தியானம் செய்யலாம் என்று அழைத்தார். ஓடினோம். சரியாக மதியம் 1:30 மணிக்குத் துவங்கும் இந்நிகழ்வு 2 மணி வரை நீடிக்கிறது. ஒஷோ ஒரு வெண்மைப் பிரியர் போல. வழியெங்கும் வெண் தரை. சமாதி, அவர் வீட்டினுள்ளேயே இருக்கிறது. வீடெங்கும் அவர் படித்த புத்தகங்கள். ஒரு லட்சம் புத்தகங்களுக்கும் மேல் படித்ததாகச் சொல்லப் படுகிறது.

உள்ளே சென்று ஒரு திண்டில் அமர்ந்தோம். எனது siesta பலவீனம் பற்றி பயமாக இருந்தது. எங்கே தூங்கி அருகிலிருக்கும் ஆசாமி மீது விழுந்து விடுவேனோ என்று பயந்தேன். தொடைகளைக் கிள்ளிக் கொண்டேன். கண்களை மூடிக் கொண்டு தூங்காதே என்று சொல்லிக் கொண்டேயிருந்தேன். ஒரு மணி அடித்தது – தியானம் துவக்கம். மெல்ல மெல்ல அந்த இடத்தின் அமைதி எல்லோரையும் தழுவுவது போல் உணர்ந்தேன். எனக்குத் தெரிந்த ஒரே வகை தியானமான “நான் யார்” என்று நினைக்கத் தொடங்கினேன். பல வருடமாக படித்து படித்து மனப்பாடம் ஆகி உள்ளதே ஒழிய இன்னும் சுய தரிசனத்தின் சுவடு கூடத் தெரிந்ததில்லை. மனம் அமைதியாகி ஒரு நிசப்தம் கூடி வரும் வரைதான் போக முடிந்திருக்கிறது. பக்கத்தில் லேசான குறட்டைச் சத்தம் வரத் துவங்கியது. எப்போதுமே வரிசையில் நமக்குப் பின் நாலு பேர் நிற்பது போல் திருப்தி உலகில் வேறொன்றில்லை. தியான மண்டப மேற்பார்வையாளர் மெல்ல வந்து குறட்டை விடும் ஆளை மெல்லத் தட்டி எழுப்பிவிட்டார். அதன் பின் குரங்கு கிளை தாவிச் சென்று விட்டது. அன்றைய கொடுப்பினை அவ்வளவுதான்.

சற்று நேரத்தில், தியானம் முடிந்ததன் அடையாளமாக மீண்டும் ஒரு மணி அடித்தது. வெளியே வந்ததும் பகலின் வெளிச்சத்தில் கண்கள் கூசியது. அங்கிருந்து ஆசிரம நூலகம். எத்தனை நூல்கள்! கொஞ்ச நேரம் சுற்றி விட்டு எந்தப் புத்தகத்தை எடுப்பது என்று குழப்பம். சட்டென்று, ஒரு டேபிளின் மேல், புத்தகங்களின் அறிமுகம் பற்றிய ஒரு கையேடு இருந்தது தென்பட்டது. ஓவ்வொன்றாகப் புரட்டிப் புரட்டி, அதன் உள்ளடக்கத்தையும் படித்ததில் நான்கு புத்தகங்கள் வாங்கலாம் என்று முடிவாயிற்று. அதற்கு மேல் செலவு செய்ய மனமில்லை.

  1. Wisdom of the sands – on sufi saints
  2. Songs of ecstasy – lectures on Bhaja govindam
  3. The search – lectures on the ten bulls of zen
  4. the books I liked ( தலைப்பு சரியாக நினவில்லை – புத்தகம் இரவல் போய் காணாமல் போய்விட்டது)

அப்புறம் “work as meditation” என்னும் ஒலிப் பேழை. மொத்தத் தேர்வையும் செய்ய ஒரு மணி நேரத்துக்கும் மேலாயிற்று. அந்த வேலை மிக்க மகிழ்ச்சி தருவதாக இருந்தது. பின் சற்று நேரம் மீண்டும் பிரமிட் கோபுரத்தில் சென்று அமைதியாக அமர்ந்திருந்த காலம் முடிவற்றது போல் தோன்றியது. இன்று கால் வலி தவிர மற்ற பிரச்சினைகள் இல்லை.

நாலு மணிக்கு டீ குடிக்க மீண்டும் கிரண் பாய் வீட்டுக்கு நடந்தோம். நேற்று செந்நிற முழு அங்கியை அணிந்து கொண்டு புனேவின் தெருக்களில் நடப்பது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. இன்று பழகிவிட்டது. இறுகப் பிடிக்காத அந்த உடையினூடே காற்று புகுந்து உடல் தழுவுவது சுகமாகவே இருந்தது. இன்று கொஞ்ச நேரம் தேனீரோடு, கிரண் பாய், ஓஷோவை அடைந்த கதை கேட்டேன். கிரண் பாய் ஒரு குஜராத்தி பிஸினஸ் மேன். சமணர். Fiercly competitive. ஆனால் ஒஷோவோ சாதாரண முதலாளியைப் பார்த்து பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பவர். வாழ்க்கையின் முரண்கள் அனைத்தையும் அறிந்து கொள்வது மிகக் கடினம்!

கொஞ்ச நேரம் கழித்து, இரவு உரை கேட்க, வெள்ளுடை அணிந்து புறப்பட்டோம். இன்று கொஞ்சம் கொஞ்சம் உற்சாகமாக இருந்தது. ஏனென்று தெரியவில்லை. ஓஷோ நகைச்சுவை உணர்ச்சி உள்ளவர். அதனால் கூட இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

நிகழ்ச்சி துவங்கியவுடன் இசை வெள்ளம்; நடனம்; எனக்கு நடனமாட வராது என்று நான் நினைத்துக் கொண்டிருப்பதால், நடனமாடுதல் சங்கடமாக இருந்தது. கண்ணை மூடிக் கொண்டேன். மெல்ல மெல்ல கைகளையும் கால்களையும் அசைத்துக் கொண்டேயிருந்தேன். எப்படா முடியும் என்று நினைத்துக் கொண்டே. கொஞ்ச நேரத்தில் இந்த அவஸ்தையும் பழகி விட்டது. மனத்தை அடக்கிக் கொண்டிருந்தால் எங்கே வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது ரமணர் வாக்கு. ரமணர் பற்றி நினைத்து கொண்டே இருந்த போது இசை நின்று அனைவரும் ஓஷோ என்று கத்தினர். அடுத்து சில நிமிட நிசப்தத்துக்குப் பின், சித்தார் இசை வந்தது. சட்டென்று புரிந்தது – இது ஒரு வகை உத்தி. தனது உரைக்கு, சீடர்களைத் தயார் செய்யும் ஒரு உத்தி.

மனம் மெல்ல மெல்ல சமன் அடைந்து, உடல் குளிரத் தொடங்கியது. அழுகை முட்டி நிற்பது போல் ஒரு உணர்வு பொங்கிப் பொங்கி வந்தது. ஒஷோ என்ன பேசினாரென்றே தெரியவில்லை. இருப்பின் ஒவ்வொரு துகளும், நொடியும் சந்தோஷத்தில் திளைக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். கண்ணுள் மீண்டும் மீண்டும் ரமணர்! சம்மணமிட்டு அமர்ந்திருப்பது கஷ்டமாயிருந்ததால், கால் நீட்டிப் படுத்தேன். எப்போது தூங்கினேன் – தெரியவில்லை. திடீரென மீண்டும் இசை வர கண் விழித்தேன். ஒஷோவின் உரை முடிந்திருந்தது.

பிரமிட் அரங்கை விட்டு வெளியே வரும் போது அண்ணாந்து பார்த்தேன். தெளிவான வானம். சல சல வென ஒடும் நீர் நிலைகள். கிரண் பாய்க்காக காத்திருந்தேன். வெளியே வந்த கிரண் பாய், லாலி பாப் கேட்கும் குழந்தை போல் கேட்டார் “பாலாஜீ, இன்னொரு நாள் இருந்துட்டுப் போலாமா?” என்று.

நான் “ரொம்ப சந்தோஷமா” என்றேன். மதுராதிபதே, அகிலம் மதுரம்!

காலையில் 5 மணிக்கு ராஜ்கோட்டுக்கு ஃப்ளைட். 4 மணிக்குப் போகணும். அப்படீன்னா 3 மணிக்கு எழுந்து குளிச்சு ரெடியாகனும்னு ஒரு 9 மணிக்குப் படுத்தால் 10 மணிக்கு என் வாகன ஏற்பாட்டாளர் ரானி ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார். அந்த ஒலி தூக்கத்தைக் கலைத்து விட்டது. கஷ்டப்பட்டு, குட்டிப் பாப்பாவைத் தாலாட்டித் தூங்க வைப்பது போல் மனசைத் தூங்க வைத்தால், அடுத்த எஸ்.எம்.எஸ். ஜெட் ஏர்வேய்ஸ்லிருந்து. காலையில் உமது ஏர்க்ராஃப்ட் பன்னாட்டு விமான தளத்தில் இருந்து புறப்படுவதால், 1.30 மணி முன்னதாக வரவும். மிஸ்டர் நரேஷ் கோயல் அடுத்த முறை எங்கு பார்த்தாலும் உம்ம கொரவளையைக் கடித்துத் துப்பாவிட்டால் என் பெயரை மாற்றிக் கொள்கிறேன்! அத்தோடு அந்த பாழாய்ப்போன தூக்கம் போச்சு. எங்கே இந்தக் குழப்பத்தில் அலாரம் அடிப்பது தெரியாமல் தூங்கி விடுவேனோ என்ற பயத்தில் ஒரு மணிக்கு ஒரு முறை எழுந்து மணி பார்த்து ஒரு வழியாக 2.45க்கு எழுந்தாச்சு. சரியான கு.கு.கோ.கோ என்று திட்டிக்கொண்டேன் ( இதன் முழுவிவரம் கட்டுரையின் இறுதியில்).

ஜெட்வேய்ஸ் அம்மணியிடம் சொல்லி ஜன்னலோர இருக்கை வாங்கிக் கொண்டேன். முதல் முறை ராஜ்கோட் விமானத்தில் செல்வதால் ஒரு ஆர்வம். பனை ஓலையில் செய்த காத்தாடி போன்ற இறகுகள் கொண்ட விமானம். கிளம்பியவுடன் சாப்பாடு கொடுக்க அவசரம். ஏனெனில் 1 மணி நேரத்தில் ராஜ்கோட் வந்துவிடும். நல்ல சாப்பாடு! தொடுவானத்தில் மஞ்சளும் ஆரஞ்சும் கலந்து காலை புலரும் வேளையில் ராஜ்கோட் இறங்கினேன். ரன்வேயின் இறுதி சென்று விமானம் திரும்பியபோது என் ஜன்னலில் பொழுது புலர்ந்தும் மறையாத நிலா. நேற்றிரவு என் ஜன்னல் வழியே வந்த அதே நிலா. (அன்று வந்ததும் அதே நிலா..)

வெளியே வந்து பார்த்தால், என்னை அழைத்துச் செல்ல வேண்டிய துஷார் படேல் வரவில்லை. துஷார் படேலும் அவர் தந்தை தயா பாயும் எனக்கு மிக நீண்ட நாட்களாகத் தெரிந்தவர்கள். தற்போது இந்தியாவிலேயே முதல் முறையாக Buhler நிறுவனத்தின் தொழில் நுட்ப உதவியுடன் வேர்க்கடலை பதனிடும் ஆலையை உருவாக்கி இருக்கிறார்கள். வேர்க்கடலை சாப்பிடும் போது ஒரு கசப்புப் பருப்பு வருமல்லவா?? – அது aflatoxin என்னும் பூஞ்சையால் வருவது. அதை சாப்பிட்டால் cancer வரும் அன்று வெள்ளைத்தோலர்கள் கண்டு பிடித்து இருப்பதால், நம்ம ஊர்க் கடலை ஐரோப்பாவில் செல்லாது. அதற்குக் காரணம் நமது வேர்க்கடலை பதம் செய்யும் தொழில்நுட்பம். புதிய Buhler தொழில்நுட்பத்தில் வேர்க்கடலை பதனிட நீர் உபயோகிப்பதில்லை – எனவே Aflatoxin குறையும். அது மட்டுமல்லாமல், கசப்புப் பருப்பின் நிறம் கண்டு அதை வெளியேற்ற சக்தி வாய்ந்த காமிராத் தொழில் நுட்பம்.

தயாபாய், எவ்வளவு முதலீடு?” என்றேன். 20 கோடி என்றார். எனக்குக் கதி கலங்கி விட்டது. பழைய தொழில் நுட்பத்தில் முதலீடு 15 லட்சம் மட்டுமே. பிஸினஸில் ரிஸ்க் எடுக்கலாம். ரிஸ்க்கையே பிஸினஸா எடுக்கலாமா?? அது குஜராத்திகளால் மட்டுமே முடியும்.

தயாபாய்க்கு என் மீது அபார அன்பு. கொஞ்சம் தொழிற்சாலையைச் சுற்றிப் பார்த்து விட்டு உங்கள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள் என்றார். துஷார் புதிதாய்ப் பிறந்த எருமைக் கன்றுக் குட்டியைப் போல over enthu. “சார், இந்தியாவிலேயே முதன் முறையா இந்த டெக்னாலஜியை நாங்கள் தான் கொண்டு வந்திருக்கிறோம். நான் வேர்க்கடலை வாங்கறவுங்க கிட்டேயெல்லாம் போய்ச் சொன்னேன். ஆனா யாருமே இதற்கான விலை கொடுக்கத் தயாரில்லை” ன்னு வருத்தப் பட்டார்.

தயாபாய் ராஜ்கோட்டின் அருகிலுள்ள கொண்டல் என்னும் ஊரில் மிகப் பெரும் வேளாண் குடும்பத்தில் பிறந்தவர். இன்னும் வேளாண் குடியின் குணநலன்கள் மாறாத மனிதர். Raw. ஆனால் இது போன்ற உயர் தொழில் நுட்பத் தொழிலில் தேவை sophistication. இதற்கான சந்தை ஐரோப்பா மற்றும் இந்தியாவின் நம்கீன் தாயாரிப்பாளர்களும் (ஹல்திராம் மற்றும் நாங்கள்) ரீடெயில் நிறுவனங்களுமே. இத்தொழில்நுட்பத்தில் உருவாகும் கடலையில் moisture குறைவாக இருக்கும், கசப்புப் பருப்பு இருக்காது. அதனால் நம்கீன் தாயாரிக்கும் போது கடலை வறுக்கும் போது பொருளிழப்பு குறைவாக இருக்கும். தரமும் நன்றாக இருக்கும்.

ஆனால், அதில் பதப்படுத்த கடலையை எடுத்துக் கொண்டு வேஷ்டி/பைஜாமா கடலை வியாபாரிகளிடம் சென்று 20 கோடி ரூபாய்த் தொழில் நுட்பத்தைப் பற்றிப் பேசினால் அவர்கள் எவ்வழியாகச் சிரிப்பார்கள் என்று அனுமானிக்க ரொம்ப புத்திசாலித்தனம் தேவையில்லை.

ஆலையைச் சுற்றிவிட்டு வந்தேன். குளிர் நீரும், கால் டம்ளர் தேனீரும் வந்தது. குஜரரத்தின் தேனீர் சுவையானது. தயாபாய் என்னுடைய கருத்துக்களைக் கேட்டுக் கொள்ளத் தயாரானார்.

தயாபாய், ஒரு நாளில் பலமுறை விலை மாறும் வேளாண் கமாடிட்டித் தொழிலில் 20 கோடி துணிந்து முதலீடு செய்ய ஒரு மாபெரும் தைரியம் வேணும். அது உங்களிடம் இருக்கிறது” என்றேன். தசாவதாரம் படத்தில், ஒரு காட்சியில், பல்ராம் நாயிடுவின் உதவியாளர் சொல்லுவார் “நாயுடு சார் can speak 5 languages in telegu” ன்னு. அப்போதொரு புளகாங்கித முக பாவம் காட்டுவார் கமல். அதே போன்ற முக பாவம் தயாபாயிடம்.

ஆனா பாருங்க, இந்தப் பொருள எடுத்துகிட்டு நீங்களே போனா எல்லாரும் இதை மட்டம் தட்டி, விலை குறைப்பாங்க. 20 கோடி செலவு பண்ணிட்டீங்க – இன்னும் கொஞ்சம் செலவு பண்ணி, இதை மார்க்கெட் பண்ண 2 -3 மார்க்கெட்டிங் மானேஜர்ஸ் போடுங்க. அவங்க இந்தத் தொழில் நுட்பத்த ஒரு வீடியோவில் எடுத்துகிட்டுப் போய் இத வாங்கற பெரிய கம்பெனிகள்கிட்ட முதல்ல அறிமுகப் படுத்தட்டும். இதன் சாதகங்களைப் பற்றிப் பேசட்டும். அதே சமயத்தில, கடலைக்கு மிகப் பெரிய மார்க்கெட் ரோட்டர்டாம் – அங்கே துணிந்து ஒரு அலுவலகமும், warehouseம் திறங்க. இந்திய நிறுவனங்களின் தரம் பற்றி மிக மோசமான opinion தான் ஐரோப்பிய நிறுவனங்கள்கிட்ட இருக்கு. அதனால, நீங்க இந்தியாவில் இருந்து அனுப்பறேன்னா நம்ப மாட்டாங்க. ஆனா, ரோட்டர்டாமில் ரெடி ஸ்டாக் இருக்குதுன்னா, நேரில் வந்து டெஸ்ட் பண்ணி வாங்கிக்குவாங்க. நல்ல விலையும் கிடைக்கும்”

ஆப் சஹி போல் ரஹே” என்றார் தயாபாய். துஷார் தயாபாயின் ஒரே மகன். குடும்பத்தின் மூத்த மகனான தயாபாய் இதுவரைக் கூட்டுக் குடும்பமாக இருந்தார். எல்லாத் தம்பிகளையும் தாங்கிய மனிதர். இப்போது தனியாக முதிய வயதில் இவ்வளவு ரிஸ்க் எடுத்து புதிதாய்த் தொழில் துவங்கியிருக்கிறார். “இவரை வெற்றி பெறச் செய் ஆண்டவரே”

கொண்டலில் சாப்பிட ஏதுமில்லை. துஷார் வீட்டுக்குக் கூட்டிச் சென்று உணவளித்தார். துஷாரின் அம்மா, “இவ்வளவு இளைச்சிட்டியே.. சாப்பிடு’ன்னு நெய்யில் குளிப்பாட்டி ஆறு சப்பாத்திகள் போட்டார்கள். அம்மாக்கள் பாரெங்கும் அம்மாக்களே. இன்னும் இரண்டு நாளக்கிக் கவலையில்லன்னு நெனச்சிகிட்டேன்.

இரவு 8 மணிக்கு மீண்டும் ஜெட் ஏர் வேய்ஸ். இந்த வாட்டி சாப்பாடு கிடையாதுன்னு சொல்லிட்டாங்க. காசு கொடுத்து சாப்பாடு வாங்கிக்கணுமாம். வழக்கம்போல் மும்பையில் இறங்குவதில் தாமதம். 10 மணிக்கு வெளியே வந்தால், காலையில் ஏர்போர்ட்டில் ட்ராப் செய்த அதே ட்ரைவர் சுக்லா.  “வேலை நல்ல படியா முடிந்ததா ஸாப்?” “நீங்கள் காலையில் வந்தால் நல்லதே நடக்கும் சுக்லாஜி” – சுக்லாஜி முகத்தில் சிரிப்பு.

(கு.கு.கோ.கோ – கும்பகோணத்தில் குளிக்க, கோயமுத்தூரிலேயே கோவணத்தை அவிழ்க்கும் கோஷ்டி)

 

வீட்டுக்கு வந்து ட்ராக் ஸூட் மாட்டிக் கொண்டு தோசை மாவு வாங்கக் கிளம்பினேன். மும்பையில், அதுவும் போரிவிலியில் தோசை மாவு கிடைக்கிறது என்பது என் போன்ற கல்யாணமாகியும் ப்ரம்மச்சாரிகளுக்கு பெரிய வரம். அது மட்டுமல்லாமல், தோசையுடன் தேங்காய்ச் சட்டினியும் கிடைக்கிறது. சீக்கிரம் போகாவிட்டால், அதற்கு ஒரு பெரிய வரிசை வந்துவிடும். மும்பையில் சாகக் கிளம்பினால் கூட அங்கே ஒரு வரிசை இருக்கும் போல..

போய்ச் சேருவதற்குள் D-மார்ட்டில் வரிசை துவங்கிவிட்டது. வரிசையில் நான் மட்டுமே மதறாஸி. தோசை மாவு D-மார்ட் ரீடயெல் கடையின் வெளியே உள்ளதால் ஒரு சௌகர்யம். தோசை மாவை மட்டும் வாங்கிக் கொண்டு கிளம்பிவிடலாம். உள்ளே போனால் நம்ம சரவணா ஸ்டோர்ஸ் மாதிரிக் கூட்டம் கும்மியடித்துக் கொண்டிருக்கும்.

மும்பையில் D-மார்ட் மிகப் பிரபலமான சங்கிலித் தொடர் ரீடெயில் வணிக நிறுவனம். 15க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. வருடம் முழுதும் தள்ளுபடி விலையில் விற்பனை. சரவணா ஸ்டோர்ஸேதான். இந்நிறுவனம் டமானி (D for Damani) என்னும் மிகப் பெரும் பங்குச் சந்தைக் கரடியால் (Bear) நிறுவப் பட்டது என்று என் சகா ஜதின் பாய் கூறினார். (நான் D for Dawood என்று பாமரத்தனமாக முதலில் கற்பனை செய்திருந்தேன்) மிகப் பெரும் செல்வந்தரான அவர் ஒரு இடத்தில் கடை தொடங்க வேண்டுமென்றால், அது அவரது சொந்த இடமாக இருந்தால்தான் துவங்குவாராம். முலுந்த் என்னும் இடத்தில் ஒரு லட்சம் சதுர அடியில் கடை உண்டு. மிகப் பெரும் கடை, பார்க்கிங் வசதியோடு. இந்தத் தொழிலில், கடை வாடகை (சில இடங்களில் சதுர அடிக்கு மாதம் 100 ரூபாய்க்கும் அதிகம்) மற்றும் பொருள் சேதம் மிகப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விடும்.

மற்ற பொருட்களை நான் ரிலையன்ஸ் ரீடெயிலில் வாங்கிக் கொள்வேன். வழக்கம் போல் அக்கடையில் மொத்தம் 15 பேர் இருந்தனர். அதில் 12 பேர் ஊழியர்கள். இத்தனைக்கும் D-மார்ட்டில் இருந்து ரிலையன்ஸ் கூப்பிடு தூரம். மாடியில் தியேட்டர். ஹாரி பாட்டரின் முதல் படத்தில் ஹாரி ஒரு வகுப்பில் உட்கார்ந்து இருப்பார். அவரது ஆசிரியர் ஸ்னேப், அவரைப் பல கேள்விகள் கேட்பார். ஹாரிக்கு ஒரு கேள்விக்குக் கூட பதில் தெரியாது. இளக்காரமாக ஹாரியைப் பார்த்து “clearly, fame is not everything Mr.Potter” என்று சொல்லுவார். நான் சந்தோஷமாக “clearly, fame is not everything Mr.Ambani” என்று சொல்லிக்கொள்ளுவேன். சீக்கிரமா வேலை முடியுதே..

வீட்டுக்கு வந்து ஸாசேஜ் வறுத்துக் கொண்டு, தோசையோடு சாப்பிட்டேன். அப்புறம் மாதுளை ஒன்று. இப்போதெல்லாம், என்ன சாப்பாடு என்று யோசிப்பதில்லை – எவ்வளவு கார்போ ஹைட்ரேட், ப்ரொட்டீன், ஃபேட் என்ற கணக்கில்தான் சாப்பாடு. நாக்கைக் கன்ஸல்ட் பண்ணிச் சாப்பிடணும்னா, நாலு வேளையும் பட்டினி கிடக்கணும். எங்க ஊரில் ஒரு பழமொழி உண்டு – குதிர காஞ்சா வைக்கோல் சாப்பிடும்னு. ஆனால், வைக்கோல் அவ்வளவு ருசியா இருக்கும்னு எனக்கு அப்போத் தெரியாது.

சாப்பிட்டுட்டு, ஃபேக்டரி நோக்கி மீண்டும் ஒரு நடை பயணம். மிகத் தெளிவாக வந்த முதல் நாளே, ஃபேக்டரியின் எதிரில் உள்ள ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்தில் வீடு தேடிக் கண்டு பிடித்தேன். மும்பையில் பஸ்ஸிலோ, ரயிலிலோ பயணம் செய்து உயிர் வாழ்வதில் பயனில்லை.

பேக்டரியில் இரவு ஸூப்பர்வைசர் ஜெயந்தி பாய் தேனீர் குடித்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் “ஆவோ பாலா சேட்” என்று எழுந்தார் (எனக்கு சிதம்பரம் ஜெயராமனின் – சில முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே பாட்டு நினைவுக்கு வந்தது). தீபாவளி முடிந்து தொழிலாளிகள் பலர் சொந்த ஊருக்குச் சென்றிருந்தார்கள். இன்னும் வரவில்லை. எங்கள் தொழிலும் தீபாவளி முடிந்து ஒரு வாரம் ஈயடிக்கும் – எனவே இன்னும் இரவு ஷிஃப்ட் முழுவதும் இயங்கவில்லை. எனக்கென்னவோ வாங்கும் காசுக்கு முழுதும் தம்மைக் கொடுப்பவர்கள் இவர்கள்தான் என்று தோன்றுகிறது. இங்கே ஒரு அருமையான கலாச்சாரம். எவன் வந்தாலென்ன போனாலென்ன என்று அவரவர் தத்தம் வேலையைப் பார்ப்பது.

ஒரு ரவுண்ட் சுற்றிவிட்டுப் புறப்பட்டேன். “டெய்லி ராத்திரி ஒரு ரவுண்ட் வந்து போ பாலா சேட்! ஹம் கோ மஜா ஆயேகா” என்றார். நிஜமாச் சொல்றாரா இல்ல நக்கலா என்று புரியவில்லை. முகத்தில் ஒன்றும் தெரியவில்லை.

கேட் வெளியே பழக்கடை வைத்திருக்கும் இளைஞன் கடையை மூடிக் கொண்டிருந்தான். அவனருகில் அவனது இளம் மனைவி அவனோடு விளையாட்டுச் சண்டையில் ஈடுபட்டிருந்தாள். பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது. காலையில் 9 மணிக்கு அலுவலகம் வரும்போதே கடை திறந்திருப்பான். அப்போதெல்லாம் அவனை ஒரு குடும்பஸ்தனாகக் கற்பனை செய்ததில்லை. ஆதலினால் காதல் செய்வீர் என்று பாரதி சரியாகத் தான் பாடியிருக்கிறார்.

முன்பனிக்காலம் துவங்கி விட்டது. அதன் அறிகுறியாக, சாலையில் சோடியம் விளக்குகளைச் சுற்றி பனிக் குடைகள். எங்கோ மக்கள் பட்டாசு வெடிக்கிறார்கள். ராக்கெட்கள் பறக்கின்றன. இன்று என்ன விஷேஷம் என்று தெரியவில்லை.

வீடு வந்து சேர்ந்தேன். ஹீட்டர் போட்டு ஒரு குளியல். குளித்து விட்டு ஏதேனும் எழுதலாம்னு உட்கார்ந்தேன்.

எதிரியிடமிருந்து உலகைக் காப்பாற்ற, ஜேம்ஸ், பறந்து, தவழ்ந்து, ஓடி, சாடி, வழியில் அழகிய இளம் பெண்களின் உடைகளைக் களைந்து, முத்தமிட்டு, அடியாள்களுடன் சண்டையிட்டு, ரத்தம் சிந்தி, உலகு அழிய ஏழு விநாடிகள் இருக்கும்போது(அப்போது தானே, டிஜிடல் கடிகாரம் 007 என்று காண்பிக்கும்!), கடிகாரத்தை நிறுத்தி உலகைக் காப்பாற்றி விடுவார். 80 களில் பதின் வயதினரான நாங்கள், நாற்காலியின் முனையில் நகம் கடித்துக் கொண்டு பார்த்து விட்டு இறுதியில் நிம்மதிப் பெருமூச்சு விடுவோம். மூன்று மாதங்கள் முன்பு, ஐம்பதினாயிரம் இந்தியக் குடும்பங்கள் அப்படிப் பெருமூச்சு விட்டன.

அதற்குக் காரணமான ஜேம்ஸ் பாண்ட் வேறு யாருமில்லை.. உலகிலேயே மிக மோசமான, ஊழல் மலிந்த, தரக்குறைவான அரசியல்வாதிகளால் நடத்தப் படுவதாகச் சொல்லப் படும் நம் இந்திய அரசுதான்.

2009 ஜனவரி மாதம் 7 ஆம் தேதி – இந்தியத் தொழில் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர் ராமலிங்க ராஜு, தான் தன் நிறுவனத்தின் லாபத்தை அதிகரித்துக் காட்டி, மக்களை ஏமாற்றியதாக ஒப்புக் கொண்ட நாள். பங்குச் சந்தையில் அதன் பங்குகள் சர சரவெனச் சரிந்தன. பொதுமக்களும், ஊடகங்களும் தம் பங்குக்கு, ராஜு பற்றிய ஜோக்குகளை உருவாக்கி, பகிர்ந்து, தத்தம் ஜனநாயகக் கடமையை ஆற்றத் துவங்கினர்..

சத்யம் அமெரிக்கப் பங்குச் சந்தையிலும் லிஸ்ட் செய்யப் பட்ட நிறுவனம். அதன் பெரும்பாலான தொழில் அமெரிக்காவில் இருந்து வருவதே. உடனடியாக பிரச்சினை தீர்க்கப் படாவிட்டால், இந்தியாவின் பெருமைகளுள் ஒன்றான கணிணி மென்பொருள் தொழிலின் மதிப்பு உலக அரங்கில் வீழ்வது நிச்சயம். ஐம்பதினாயிரம் குடும்பங்கள் பாதிக்கப் படும். உலகப் பொருளாதாரம் மிகப் பெரும் நெருக்கடியில் உள்ள சமயத்தில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கக் கூடும்..

சொல்லப் போனால், இந்தியத் தொழிலுக்கு ஒரு மாபெரும் நெருக்கடி. தெளிவான குறிக்கோளோடு விரைந்து செயல்படுவதுதான் ஒரே வழி. தாமதம் சத்யத்தின் மரணத்துக்கு வழி வகுக்கும்.

காட்டுத் தீ போலப் பரவத் துவங்கிய ராஜுவின் ஒப்புதல் வாக்குமூலத்தின் சாரத்தை, SEBI யின் தலைவர், தொழில் நிறுவன விவகாரச் செயலர் அலுவலகத்துக்கு அனுப்பிவைத்தார். அத்துறையின் அமைச்சர் ப்ரேம் சந்த் குப்தாவுக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் உடனடியாகத் தகவல்கள் அனுப்பப் பட்டன. மேலும் தகவல்களைத் தோண்டச் சொல்லி, ஹைதராபாத்தில் உள்ள registrar of companies க்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இவையனைத்தும் முதல் இரண்டு மணி நேரத்துக்குள்ளாகவே நடந்தன.

அரசு உடனடியாக சத்யம் நிறுவனத்தின் இயக்குனர் குழுவைத் தாண்டி ஒரு இயக்குனர் குழுவை நியமித்தது. மூன்று நாட்களுக்குள்ளாகவே, HDFCயின் தலைவர் தீபக் பாரிக்கை சத்யம் விவகாரத்தைக் கவனிக்க அழைத்தது அரசு. மென்பொருள்த் தொழில் கூட்டமைப்பின் முன்னாற் தலைவரான கிரண் கார்னிக், செக்யூரிட்டிஸ் அப்பெல்லேட்டின் முன்னால் தலைவர் அச்சுதன் ஆகியோரும் அரசு நியமித்த இயக்குநர் குழுவில் பணியாற்ற ஒப்புக் கொண்டனர். கிரண் கார்னிக், சத்யத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

ராஜுவின் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த நான்காம் நாள் ஞாயிறு மாலை, ஜனவரி 11, அரசு நியமித்த இயக்குநர்களின் முதல் கூட்டம் துவங்கியது. இரவு 9:30 மணிக்குத் துவங்கிய முதல் கூட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. அடுத்த நாள் காலையில், இயக்குநர் கூட்டங்கள் மிக formal ஆகத் துவங்கின. இயக்குநர்கள் மீடியாவின் தொந்தரவுக்குப் பயந்து, தமது தொலைபேசி எண்களை மாற்றிவிட்டு, தொலைத் தொடர்புக்கு அப்பால் சென்று விட்டனர்.

இந்த அவசரத்தில், அரசு செய்ய வேண்டிய கடமைகள் இரண்டு இருந்தன.

  1. சத்யம் நிறுவனத்தை உயிர் பிழைக்கச் செய்வது

  2. ராஜு ஒப்புக் கொண்ட குற்றங்களை விசாரித்து, உண்மையை வெளிக் கொணர்வது

இதில் முதல் கடமை, எதிர்காலம் பற்றியது. இரண்டாவது, போஸ்ட் மார்ட்டம்.

முதல் கடமையை நிறைவேற்ற, அரசு, இன்னும் சில வல்லுநர்களை இயக்குநர் குழுவில் பணியாற்ற அழைத்தது. இந்தியத் தொழில் கூட்டமைப்பின் ஆலோசகர் தருண் தாஸ், பங்குச் சந்தை வல்லுநர்களான மனோகரன் மற்றும் மைனக் முதலியோர். சத்யத்தின் பிரச்சினையைத் தீர்க்க இவர்கள் அனைவரின் பங்களிப்பும் தேவைப்பட்டது. இந்த இயக்குநர் குழுவை அமைக்கும் முடிவு அரசின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்று புகழப் படுகிறது.

இரண்டாவது கடமை சீக்கிரத்தில் முடியப் போவதில்லை – அவை அரசு சார்ந்த தொழில் குற்றங்களை விசாரிக்கும் அமைப்புகளிடத்தில் விடப் பட்டன.

12 ஆம் தேதி, திங்கள் கிழமை, பொறுப்பேற்றுக் கொண்ட இயக்குநர் குழுவின் முதல் பணி – சத்யத்தில் பணி புரிவோருக்கு சம்பளம் கொடுப்பது. 15 ஆம் தேதி அமெரிக்க ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்தாக வேண்டும். இதில் பயங்கர சிக்கல்கள் இருந்தன. ராஜு தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் சுமார் பத்தாயிரம் போலி ஊழியர்கள் இருந்ததாகக் கூறியிருந்தார். அந்த வங்கிக் கணக்கில் பணம் போய்விடக் கூடாது. அது மட்டுமில்லாமல், வரவேண்டிய பாக்கிகள் உண்மையா என்றும் தெரியவில்லை. நிறுவனத்தின் கையிலும் பணமில்லை.

என்ன செய்வது என்று யோசித்து, ஹைதராபாத்தில் உள்ள சத்யத்துக்கு சொந்தமான இரண்டு காம்பஸ்களை வங்கியில் அடமானம் வைத்து, சம்பளத்துக்கானப் பணம் புரட்டலாம் என்று முடிவெடுத்தது இயக்குநர் குழு. ஆனால் அதில் ஒரு சிக்கல். அந்த காம்பஸ்கள் கட்டப் பட்ட நிலம், ஆந்திர அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனத்திடம் இருந்து சலுகை விலையில் வாங்கப் பட்டது. எனவே, அந்த நிறுவனத்திடம் இருந்து நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் தேவைப்பட்டது. இதை வாங்குவதுதான் மிகப் பெரும் சவாலாக இருந்தது. கடைசி நொடி வரை அனைவரின் இதயத்துடிப்பையும் எகிற வைத்தது. ஒரு வழியாக, பணம் புரட்டி சம்பளம் கொடுக்கப் பட்டது.

அடுத்த சவால் – நிறுவனத்தை நடத்துவது. பாஸ்டன் கன்சல்டிங் குருப் என்னும் ஆலோசக நிறுவனம், சத்யத்தை நிர்வகிக்கும் ஆலோசகராக நியமிக்கப் பட்டது. டாடா கெமிக்கல்ஸின் முன்னாள் தலைவர் ஹோமி குஸ்ரோகானும், முருகப்பா குழுமத்தின் முன்னாள் நிதி நிர்வாகத் தலைவர் பார்த்தோ தத்தாவும் ஆலோசகர்களாக நியமிக்கப் பட்டார்கள். இயக்குநர் குழுவிடமிருந்து, சத்யத்தை நிர்வகிக்கும் பொறுப்புகளை இவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

தோள்களிலிருந்து நிர்வாகப் பாரம் இறங்கியவுடன், இயக்குநர் குழு, அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றது. அது சத்யத்துக்கு ஒரு புதுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பது. சத்யம் நிறுவனத்தில் நீண்ட நாள் பணி புரிந்த, அனைவராலும் நேர்மையானவர் என்று ஏற்றுக் கொள்ளப் பட்ட திரு..எஸ்.மூர்த்தி தலைவராக நியமிக்கப் பட்டார்.

புயல் வீசிய அந்தக் காலத்தில் சத்யம் நிறுவன ஊழியர்கள் தம் கடமையில் காட்டிய ஈடுபாடு மிகவும் போற்றப் படுகிறது. அச்சமயத்தில், வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் அளித்த சேவை, வாடிக்கையாளர்களின் அவநம்பிக்கையைப் போக்க உதவியது. கப்பல் மூழ்கத் துவங்குகையில் முதலில் எலிகள் தப்பியோடத் துவங்கும் என்று சொல்வார்கள். மூழ்கத் துவங்கும் நிறுவனத்திலிருந்து ஊழியர்களே முதலில் வெளியேறத் துவங்குவர். ஆனால், இங்கே, அவர்கள் சத்யத்தைத் தாங்கி நின்றனர். சத்யத்தைக் காப்பாற்ற அரசு எடுத்த மின்னல் வேக நடவடிக்கைகள் ஊழியர்களுக்கு தெம்பை அளித்ததே காரணம்.

மூர்த்தியின் தலைமையிலான மேலாண்மைக் குழு முக்கிய வாடிக்கையாளர்களை நேரடியாகச் சந்தித்து, சத்யத்தைக் காப்பாற்ற அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை விளக்கி, அவர்களின் நம்பிக்கையைப் பெறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. பெரும்பாலோனோர், பொறுத்துப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தனர். அந்நிலையில் அவர்கள் வேறொன்றும் செய்வதற்கில்லை.

முக்கிய வாடிக்கையாளர்களைக் கவனிக்கும் பொறுப்பிலிருந்த ஊழியர்களை இயக்குநர் குழு தொடர்பு கொண்டு, அவர்களுக்கு குறைந்த பட்சம் ஒரு ஆண்டு பணி நிரந்தரம் உண்டு என்று உறுதியளித்தது. அனேகமாக எல்லா சீனியர் ஊழியர்களும் இருந்து பார்ப்போம் என்று முடிவெடுத்தனர்.

வாடிக்கையாளர்களும், முக்கிய ஊழியர்களும் சத்யத்தின் மீது நம்பிக்கை வைக்க, மூழ்கும் கப்பலின் ஓட்டைகள் அடைக்கப் பட்டன. கப்பல் இப்போது, பயணிக்கத் துவங்கியது.

இயக்குநர் குழுவின் அடுத்த வேலை துவங்கியது. கப்பலை ஒரு நல்ல முதலாளியிடம் ஒப்படைப்பது. மிகக் கஷ்டமான வேலை. 90 நாட்களுக்குள் நிறுவனத்தை ஒரு நல்ல முதலாளியிடம் விற்றுவிட வேண்டும் என்னும் இலக்கை அரசு நிர்ணயித்திருந்தது. இல்லையெனில், நிறுவனம் தற்காலிக உயிர் பிழைப்பிலிருந்து மடிந்து விடும் அபாயம் இருந்தது.

ஏழாயிரத்து எந்நூறு கோடி பொய் லாபம். பத்தாயிரம் போலி ஊழியர்கள். இவை ராஜு ஒத்துக் கொண்ட குற்றங்கள் மட்டுமே. உண்மை என்னவென்று யாருக்குத் தெரியும்?? 440 ரூபாயிலிருந்து, 6.5 ரூபாய் வரை சரிந்துவிட்டது பங்கு விலை. யார் வாங்குவார் இப்படிப் பட்ட கம்பெனியை??

நிறுவனத்தை விற்கும் ஆலோசனையை வழங்க கோல்ட் மேன் சாக்ஸ் என்னும் புகழ்பெற்ற நிதி நிறுவனமும், அவெண்டிஸ் கேப்பிடல் என்னும் நிறுவனமும் ஜனவரி இறுதியில் நியமிக்கப் பட்டன. இயக்குநர் குழு பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் ஆலோசகர்களை அழைத்து, நிறுவனத்தை விற்பனை செய்யும் நோக்கைத் தெரிவித்தது. இதில் முக்கிய பங்கு வகித்தவர் தீபக் பாரீக். இதை மிக ஜாக்கிரதையாகக் கையாளும் திறன் கொண்டவர் அவர். இந்தியாவில் அனைவரும் மதிக்கும் ஒரு பேங்கர்.

சத்யம் நிறுவனத்தை ஒட்டு மொத்தமாக விற்பனை செய்ய முடிவெடுக்கப் பட்டது. பிரச்சினை என்னவென்றால், என்ன விலை நிர்ணயிப்பது என்பதே. 440 ரூபாயிலிருந்து, 6.5 ரூபாய் ஆகி விட்ட பங்குகளுக்கு, வாங்க முன் வரும் நிறுவனம் என்ன விலை கொடுக்கும் என்பது யாருக்கும் தெரியவில்லை. இயக்குநர்குழு பதைபதைப்போடு இருந்தது. மறைமுக ஏல முறை கையாளப்பட்டது.

மார்ச் மாத இறுதியில், லார்ஸன் அண்ட் டூப்ரோ, ஸ்பைஸ் டெலிகாம், மஹிந்த்ரா, ராஸ், காக்னிஸண்ட் டெக்னாலஜிஸ், ஐகேட் இன்னும் பல நிறுவனங்கள் சத்யம் நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டின. விற்பனை முயற்சியை நேர்மையாக நடக்கிறதா என்பதை மேற்பார்வை செய்து சான்றுரைக்க, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி பரூச்சா நியமிக்கப் பட்டார்.

மறைமுக ஏல நாள் ஏப்ரல் 13 என்று அறிவிக்கப் பட்டது. 12 ஆம் தேதி இயக்குநர்களுக்க்குத் தூக்கம் போயிற்று. சத்யத்தின் பிரச்சினைகள் என்ன்வென்று முழுதும் தெரியாத நிலையில், யாரும் விலை கேட்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற பயம் எல்லோரையும் ஆட்டிப் படைத்தது. இறுதிச் சுற்றில் லார்ஸன் அண்ட் டூப்ரோ, டெக் மஹிந்த்ரா, ராஸ் மற்றும் காக்னிஸண்ட் நால்வரும் இருந்தனர்.

12 ஆம் தேதி இரவு, காக்னிஸண்ட் போட்டியிலிருந்து விலகிக் கொள்ள இயக்குநர்களின் ரத்த அழுத்தம் எகிறியது. எல்லோரும் எதிர்பார்த்த ஏப்ரல் 13ம் வந்தது. தாஜ் ப்ரசிடெண்ட் ஹோட்டல். காலை 9 மணிக்குத் துவங்கியது விற்பனை விழா. முதலில் லார்ஸன் அண்ட் டூப்ரோ வந்து அவர்களின் விலையைச் சொன்னார்கள். பின்னர் டெக் மஹிந்த்ரா. இறுதியில் ராஸ். கிட்டத் தட்ட மூன்று மாதங்கள் இயக்குநர்களின் தூக்கத்தையும், ரத்த அழுத்ததையும் சோதித்த இம்முயற்சி, சுபமாக முடிந்தது. ஒரு பங்குக்கு 56 ரூபாய் விலை கொடுத்திருந்த டெக் மஹிந்த்ரா, தனக்கு அடுத்த படியாக இருந்த லார்ஸன் அண்ட் டூப்ரோ வை விட 26% சதம் அதிகம். சத்யம் நிறுவனத்தை வெள்ளித் தட்டில் வெற்றிலை பாக்கு வைத்து டெக் மஹிந்த்ராவிற்கு அளித்தது இயக்குநர் குழு. அரசும், தொழில் துறைத் தலைவர்களும், சத்யம் ஊழியர்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

சத்யம் விஷயத்தில் அரசின் மிகத் துரிதமான நடவடிக்கை நமது நாட்டிற்குப் புதிது. மின்னல் வேகம் என்பதுகூட குறைவான மதிப்பீடே. அரசின் வேண்டுகோளுக்கிணங்க தமது அலுவல்களை ஒதுக்கிவிட்டு, இப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட அந்த தொழில்த் துறைத் தலைவர்களுக்கு நாடு நன்றிக் கடன் செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறது. தொழில்திறனும், நேர்மையும் வாய்ந்த தலைவர்கள் செயல்படும் விதம் மிக அழகானதோர் நிகழ்வு. பிஸ்மில்லா கானின் ஷெனாய் போல.. எம்.எஸ் அம்மாவின் பஜகோவிந்தம் போல. HDFCயின் தலைவர் தீபக் பாரிக், Nasscomன் முன்னால் தலைவர் கிரண் கார்னிக் இருவரும் உலகின் மிகச் சிறந்த தொழில் துறைத் தலைவர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்கள்

இந்தப் பிரச்சினையின்போது, இன்னுமொரு கோணம் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டது. அது, சத்யம் நிறுவனத்தின் ஆடிட்டர்களின் பங்கு. ஆடிட்டர்கள் மீது மாபெரும் தவறு இருப்பதாகக் கூறப்பட்டது. அது உண்மை. ஆனால், எந்த ஆடிட்டராக இருந்திருந்தாலும் இது நடந்திருக்கும் வாய்ப்புகள் உண்டு.

ஒரு நிறுவனத்தை ஆடிட் செய்யும் நிறுவனம், அதற்கான பயிற்சி பெற்ற ஆடிட்டர்களை அனுப்பவதில்லை. தம்மிடம் ட்ரெய்னியாக இருக்கும் 1-2 வருட அனுபவம் கூட இல்லாத இளம் பட்டதாரிகளையே அனுப்புகிறார்கள் – அவர்கள் பொதுவாக C.A தேர்வு எழுதத் தயாராக இருக்கும் மாணவர்களாக இருப்பார்கள். புத்திசாலிகளாக இருந்தாலும், அவர்கள் வியாபார நுட்பம் அறிந்தவர்களில்லை. கத்துகுட்டிகள். அவர்களும் எல்லா ஃபைல்களையும் புரட்டிப் பார்த்து விட்டு, எந்தெந்த இடங்களில் நிறுவன விதிகள் மீறப்பட்டுள்ளன என்று ஒரு லிஸ்ட் தயார் செய்து கொடுப்பார்கள். 15-20 வருட தொழில் அனுபவம் பெற்ற மேலாளர்கள் இவர்களை மிகச் சுலபமாக ஏமாற்றிவிடுவார்கள்.

இது எப்படி என்றால், சாலையில் செல்லும் வாகனங்கள் சாலை விதிகளை மீறும் போது, காவலர் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது போல். அதை மட்டும் பார்க்கும் காவலர்கள், சாலையில் செல்லும் வாகனங்களில் ஆயுதங்களோ, போதைப் பொருட்களோ கடத்தப் படும் சாத்தியக் கூறுகளைப் பற்றி யோசிக்கும் திறன் பெற்றவர்களில்லை. அதேபோல், இவ்விளைஞர்களும், மிக மேலோட்டமாக, நிறுவன விதிமுறை மீறல்களைப் பற்றி மட்டுமே அறிக்கையாகக் கொடுக்கிறார்கள்.

சத்யம் நிறுவன ஊழலில், இந்த ஆடிட்டர்களின் standard operating procedure ன் inadequacy மிகத் தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் தம் வழிமுறைகளை மாற்றியமைத்து, மேலும் தீவிரமாக நிறுவனங்களைக் கண்காணிக்க வேண்டியது மிக அவசியம். மிக முக்கியத் தகவல்களை, ஆடிட் நிறுவனங்களின் சீனியர் ஆடிட்டர்கள் ஆடிட் செய்ய வேண்டும் – நிறுவனங்களின் நிதிநிலை, இயக்குநர்களின் செயல் பாடுகள் முதலியவற்றை இன்னும் கூர்ந்து ஆராய்ந்து தனியே ஒரு அறிக்கை தயாரிக்க வேண்டும்.

சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீதம், விதிமுறைகளை மீறி அதன் மூலம் நன்மை பெறும் நோக்கத்துடன் செயல்படுகிறார்கள். சமூகக் காவல் நிறுவனங்களான அரசு, காவல் துறை, ராணுவம், சிவில் நிறுவனங்கள் – இவையனைத்துமே reactive. ஒரு பிரச்சினை எழுந்த பின்பு, அதற்கான தீர்வை யோசித்து. வழிமுறைகளைக் கண்டுபிடித்து, பின்பு அவற்றை விதியாக மாற்றுகிறார்கள். ஆனால், விதிமுறைகளை மீறும் deviants மிகப் புத்திசாலிகள். அவர்கள் புதிது புதிதாக, விதிமுறைகளை மீறுவதன் சாத்தியக்கூறுகளை யோசிக்கிறார்கள். ஒரு கிரிமினல் எப்படியெல்லாம் யோசிப்பான் என்று அவனைத் தாண்டி போலிஸ் யோசிப்பது இயலாத காரியமே..

ஒரு ராஜு தவறு செய்ய முடிவெடுத்துவிட்டால், ஒன்றுமே செய்ய இயலாது என்பதே உண்மை. பில் க்ளிண்டனுக்கு வாக்களித்த அமெரிக்கர்களுக்கு, அவர் வெள்ளை மாளிகையின் பணிப் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளக் கூடிய சாத்தியக் கூறுகள் முன்னரே தெரியாதல்லவா…

எம்.பி.ஏ முடித்தவுடன் பெங்களூரில் வேலை. லௌகீஹ உலகின் உச்சமான மார்க்கெட்டிங் துறையில். வருடம் 1990. அண்ணன் (திருமூர்த்தியென்னும் தங்கம்) தயவில் சதாசிவ நகரில் வாசம். வார இறுதியில் ப்ரிகேட் ரோடில் பியர். இரவுக் காட்சி ஆங்கிலப் படம். பைக். காதலி. தரையில் இருந்து இரண்டு அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த காலம்.

பியரின் தாக்கம் குறைந்த ஒரு ஞாயிறு மாலை, கொஞ்சம் நடந்தால் என்ன என்று தோன்றவே, நடந்தேன். சிறு தொலைவில் மேக்ரி சர்க்கிள் என்னும் இடம் – இடது புறம் ரமண மஹர்ஷி செண்டர் என்று ஒரு பலகை தொங்கியது.. உள்ளே சென்று பார்த்தால், ஒரு தியான மண்டபம். கொஞ்சம் நேரம் உட்கார்ந்திருந்தேன் – யோக சாதகமெல்லாம் முட்டி வலிக்கும் வரைதான். ரமணர் பற்றித் தெரிந்து கொள்ள ஏதேனும் புத்தகம் கிடைக்குமா என்று கேட்டேன் – ஒரு புத்தகம் கொடுத்தார்கள் – அதில் மார்பிள் தரை போன்ற பள பள மொட்டையுடன் ரமணர் முறைத்துக் கொண்டிருந்தார்.. பயந்து போய் புத்தக அலமாரியில் பத்திரமாக வைத்து விட்டேன்.

பின்னர், காதலியே மனைவியான சரித்திரச் சம்பவத்திற்குப் (என்ன கொடுமை சார்!) பிறகு, அவர் திருவண்ணாமலை ஒரு முறை சென்று வந்து, விசிறி சாமியார், ரமணர், அண்ணாமலையார் ப்ரசாதம் இன்ன பிறவெல்லாம் கொண்டு வந்தார். அடேடே இந்த ரமணர் பற்றி எப்போதோ ஒரு புத்தகம் வாங்கினோமே என்று குப்பையைக் கிளர வெளி வந்தது புத்தகம். இரண்டு வரி படித்திருப்பேன் – அதற்குள் ரமணர் தந்தை பெயர் சுந்தரம் அய்யர் என்றிருந்தது.. ஒரு திராவிட ஜீனியஸை வீழ்த்த வரும் ஆரிய சூழ்ச்சியோ என்ற பயத்தில் மீண்டும் அலமாரியில் வைத்து விட்டேன். அப்புறம் ஒரு இரண்டு ஆண்டுகள் ரமணர் புத்தக அலமாரியில் அமர்ந்து கொண்டு முறைத்துக் கொண்டே இருந்தார். “எங்கே போயிடுவே நீ, மவனே” என்று சொல்வது போல் ஒரு பிரமை.

அப்புறம் பலமுறை மனைவியின் வற்புறுத்தலால் பல முறை திருவண்ணாமலை சென்று வந்தோம். அப்பல்லாம், மிக ஜாக்கிரதையாக, கேள்வி கேட்காமல், ரமணர் சிலையைப் பார்த்த உடன், “சாமி காப்பாத்து” என்று வேலையை அவருக்கு delegate செய்து விட்டு, குறைந்த பட்சத் தியாகமாக நெற்றியில் நீறு பூசிக் கொண்டு ஓடிவிடுவேன். அப்போது என்னைக் கவர்ந்த ஒரே விஷயம் அவர் கோவணம் கட்டியிருந்தது. பிள்ளைப் பருவத் தோழர்கள் என்பதற்கு இந்தியில் ஒரு பதம் சொல்வார்கள் “லங்கோட்டியா” என்று. அதாவது லங்கோடு கட்டத் துவங்கிய காலத்திலிருந்து நண்பர்கள் என்பதாய். ரமணர் மீது அப்படி ஒரு ப்ரியம் வந்தது. ஏனெனில், விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால், கோவணம் மீது ஒரு அலாதிப் ப்ரியம்.

அச்சமயம் குமுதத்தில் பாலகுமாரன் “இதற்குத் தானே ஆசைப் பட்டாய் பாலகுமாரா?” என்றொரு கட்டுரைத் தொடர் எழுதி வந்தார். அதில் சிந்து பைரவியில் வரும் “தொம் தொம்” பாட்டு ரெக்கார்டிங்கின் நடுவே இளையராஜா அவருக்கு ரமணர் பற்றி ஒரு புத்தகம் கொடுத்ததாய் எழுதியிருந்தார். ரமணர்தான் ஒரிஜினல் ஜென் குரு.. அவரைப் படிங்க போதும் என்பதுபோல் ஏதோ சொன்னதாக ஞாபகம்.. சபலம் தட்டினாலும், மத சம்பந்தமான புத்தகங்களின் எடை குறித்து மனதில் ஒரு பெரும் பீதி.. நாளைக்குப் பாத்துக்கலாம் நாளைக்குப் பாத்துக்கலாம்னு குடிகாரன் பேச்சு போல் நாட்களைத் தள்ளிக் கொண்டிருந்தேன்.

அப்புறம் ஒரு முறை ரமணாசிரமம் சென்ற போது, ஒரு புத்தகம் வாங்கினோம். அம்மணி உள்ளே தியான லோகத்தில் அமர்ந்திருக்க, நான் வேலையில்லாமல் புத்தகத்தைப் புரட்டினேன். அப்போது ஒரு கேள்விக்கு ரமணர் அளித்த பதில் மிக அட்டகாசமாக இருந்தது.

கேள்வி: தியானம் செய்யும் போது தூக்கம் வருகிறது. என்ன செய்யலாம்?

பதில்: தூங்கி எழுந்த பின் தியானம் செய்யவும்.

இதை விட ஒரு லாஜிக்கலான பதில் இருக்கவே முடியாது. எம்.பி.ஏ உலகில் லாஜிக்தான் ஆக்ஸிஜன். சத்தமின்றி (மன) கதவைத் திறந்து உள்ளே வந்தார் லங்கோட்டியார். இன்னும் சில பக்கங்கள் புரட்டினேன். இன்னொரு சம்பவம் எழுதப் பட்டிருந்தது.

வெகு தொலைவில் இருந்த வந்த ஒரு அம்மையார் ரொம்ப நேரம் ரமணர் சபையில் உட்கார்ந்திருந்தார். ஊருக்குப் போக வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்கு மேல் காத்திருக்க முடியாது. ரமணரின் அருகில் சென்றார்.

சாமி, ஊருக்குப் போகணும். வண்டிக்கு நேரமாச்சு. ஆசி குடுங்க” ன்னு கேட்கிறார்.

கொண்டுட்டுப் போகப் பாத்திரம் கொண்டு வந்திருக்கியா” ன்னு ரமணர் கேட்கிறார். குபீரெனச் சிரிக்க வைத்தது அந்தப் பதில். அதுவரை நகைச்சுவை உணர்வுள்ள ஒரு சாமியாரை அறிந்ததில்லை. கொஞ்சம் ஆர்வம் வந்தது..

ரமணாசிரமத்தின் நூலகத்தின் உள்ளே போனேன். ரமணர் பற்றித் தெரிந்து கொள்ள சில எளிதான புத்தகங்கள் வேண்டுமென்று கேட்டேன். நாலு வெற்றிலைத் தடிமனில் ஒரு புத்தகம் கொடுத்தார். “நான் யார்” என்று தலைப்பிடப்படிருந்தது. அவ்வளவுதானா என்று கேட்டேன். அவ்வளவுதான் என்றார். என்னமோ 54 வருஷமா இங்கே இருந்தாராமே இவ்வளவுதான் சொன்னாரா என்றேன் நம்ப முடியாமல்.

இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கிறார்.. எழுதியிருக்கிறார்.. ஆனால் அவர் சொன்னதின் சாராம்சம் இவ்வளவுதான் என்றார் நூலகர். இத நான் அஞ்சு நிமிஷத்தில படிச்சிடுவேன்.. இன்னும் ஏதாவது புத்தகம் கொடுங்கள் என்றேன் – என் அறியாமையின் உயரம் உணராமல்.

நூலகர் ஆர்தர் ஆஸ்போர்னின் “ramana maharshi and the path of self knowledge” என்னும் புத்தகமும், ராஜாவின் ரமண மாலை என்னும் கேசட்டும் கொடுத்தார். வீட்டுக் வந்து பாட்டுப் போட்டேன். (self knowledge என்னும் வார்த்தைகளைப் பார்த்ததும், புத்தகம் படிக்கும் ஆர்வம், கல்லைக் கண்ட நாய் போல் பின்னங்கால்களுக்குள் வால் செருக ஓடிப் போய்விட்டது). இளையராஜாவின் தாலாட்டில் மெல்ல மெல்ல ரமணர் உள்ளே நுழைந்து, சாய்வு நாற்காலி போட்டு உட்காந்து விட்டார்.

பின்னொரு நாள், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஆஸ்போர்னைத் திறந்தேன். வழுக்கிக் கொண்டு ஓடியது அவர் நடை. காமிக்ஸ் படிப்பது போல் இருந்தது. மதுரையில் ரமணர் தன்னயறிந்த நிகழ்வை ஆஸ்போர்ன் விவரித்த விதம், நான் யார் புத்தகத்தைத் திறக்கத் தூண்டியது.

நான் யார் என்னும் அவர் தத்துவத்தை விவரிக்கும் முன், அவர் தனது assumptions களைச் சொல்கிறார்.

  1. சகல ஜீவர்களும் துக்கமின்றி எப்போதும் சுகமாக இருக்க விரும்புகிறார்கள்.

  2. ஏல்லோருக்கும் தங்கள் மீது மிகப் ப்ரியம் உள்ளது

  3. அந்தப் ப்ரியத்துக்கு சுகமே காரணம்

அடுத்த மூணு நாட்களுக்கு இதை ஒரு மந்திரம் போல் சொல்லிக் கொண்டிருந்தேன். சரிதானே என்று தோன்றிக் கொண்டேயிருந்தது. என்ன ஒரு set of great assumptions.. சந்தோஷமா இருக்கறதுதான் வாழ்க்கையில் மிக முக்கியம்னு என்று ஒரு சாமியார் சொல்றது ரொம்ப சந்தோஷமா இருந்தது.. அதுவரைக்கும் சாமியார்கள் எல்லோருமே நாம் செய்த பாவங்களைப் பற்றியும் அதிலிருந்து விடுபட நாம் செய்ய வேண்டியிருக்கும் பரிகாரங்கள் பற்றிப் பேசி அலுப்பூட்டியிருந்தார்கள். பியரும் சிக்கனும் சாப்பிடுவது பாவம்னா, நரகத்துக்கே போயிடலாம்னு முடிவோடு இருந்தேன்.

ஆனால் லௌகீக வாழ்க்கை என்பது ஒரு விலையோடு வருவது. பியரும், சிக்கனும், ஆங்கிலப் பட இரவுக் காட்சியும் தாண்டி வாழ்க்கையின் சிக்கல்கள் இறுக்கத் தொடங்கிய போது, வலிக்கத் தொடங்கியது. அப்போதுதான் ரமணர் என்னும் மாபெரும் சக்தியின் வலிமை புரிந்தது.. எல்லாவற்றிலும் சந்தோஷத்தையே தேடு என்னும் பாடம் வாழ்க்கையின் எல்லாச் சாக்கடைகளிலிருந்தும் மீட்டெடுத்தது.. பிறவிப் பெரும் பயன் அன்றி வேறென்ன..

தில்லியின் அழுக்குகளைத் தாண்டி, அழகுகளைப் பார்க்க வைத்தது. தில்லிக் குளிரை சந்தோஷமாக வரவேற்க வைத்தது.. பஞ்சாபிக் கம்பெனியின் அரசியலை விலக்கை, பஞ்சாபிகளின் ambitionஐ வியக்க வைத்தது.. ஈரோட்டில் கலர் கலராய் ஓடும் காவிரியைத் தாண்டி, அவ்வூர் மக்களின் விருந்தோம்பலைப் பார்க்க வைக்கிறது.. சீன உணவை ருசிக்க வைக்கிறது. கர்நாடக சங்கீதம் கேட்க வைக்கிறது.. லௌகீக வாழ்க்கையின் ஏமாற்றங்களை “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” என்று ஒரு நகைச்சுவையுடன் வரவேற்க வைக்கிறது. வியாபாரத்தில் தோல்வியைக் கூட, அதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன என்று பார்க்க வைக்கிறது. மனம் வலிக்கத் துவங்கும் போது கண்ணை மூடிக் கொண்டால் போதும், ரமணரின் முகமும், தத்துவமும் வலிக்கும் கணத்தைத் தாண்டிப் போக உதவும் என்னும் நம்பிக்கை மிகப் பெரிய சந்தோஷம் கொடுக்கிறது..

சினிமா என்பது ஒரு விநாடிக்கு 24 ஃப்ரேம்களில் அடைக்கப் படும் புகைப் படங்கள்தான். வாழ்க்கையையும் அப்படி இன்பமான கணங்களிலேயே அடைத்து விட்டால் என்ன என்னும் பேராசைதான் இக்கட்டுரையின் மூலகாரணி. மட்டுமல்லாமல், மதிப்புக்குரிய எழுத்துச் சாதனையாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் “தீதும் நன்றும்” என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் பெரும்பாலும் தன் குமுறல்களை, கோபங்களைச் சொல்லியிருந்தார்கள். வாழ்க்கையின் ஒரு கோணம் அது. இன்னொரு கோணமும் உள்ளது. அது வெறும் இன்பங்களால் ஆனது. அதை பற்றி மட்டுமே எழுதினால் என்ன என்னும் எண்ணம்.. நாஞ்சிலுக்கு எதிர்ப்பாட்டு என்றும் கொள்ளலாம். தொடங்கிவிட்டேன். இரா.முருகனின் “குட்டப்பன் கார்னர் ஷோப்” மாதிரி, “பாலா ஸ்வீட் ஸ்டால்”

வாழ்க்கையின் மீதும், உறவுகள் மீதும் பிடிப்பு இன்னும் போகாததால், மனம் தளரும் கணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்தத் தொடர் எழுத எழுத, பிடிப்பினால் வரும் கசப்புகள் குறைந்து, வாழ்க்கையை மேலும் நிதானமாக அணுகும் பக்குவம் வரக்கூடும் என்னும் நம்பிக்கையும் ஒரு கூடுதல் காரணம். ராம ஜெயம் எழுதுவது போல்.

தமிழில் தலைப்பு வைத்தால்தான் வரிவிலக்கு என்னும் கலைஞரின் கொள்கையை எதிர்த்துத் துவங்குகிறது இக்கட்டுரை. (பைசா பொறாத உன் எழுத்துக்கு ஏதுடா வரி? எதுக்குடா விலக்கு என்று என் மனசாட்சி கட்டபொம்மு போல் தன் கோரைப் பற்களைக் காட்டி உறுமிய போது பயந்து, விட்டு விடலாம் என்று தான் நினைத்தேன். “போற போக்குல கலைஞரத் திட்டறதுதான் த.கூ.ந.உலகில் பிரபலமாக எளிய வழி” என்று என் சென்னை நண்பி கூறிய முதுமொழி நினைவுக்கு வரவே விட்டு விட்டேன்).

கூடலூரில் ஒரு தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் என் நண்பர் மனோகரன் சமீபத்தில் ஒரு வசைச் சொல் கண்டுபிடித்திருப்பதாகச் சொன்னார். அதை அவர் பிரயோகிக்கும் போதெல்லாம் தேன் பாயும் இன்பம் கிடைக்கிறதென்றும் சொன்னார். “போடாங்… இன்வெஸ்ட்மெண்ட் பேங்கர்.. வெல்த் மேனேஜர்..” என்பதே அது. கேப்மாறி என்னும் தூயதமிழ் வசைக்கு மாற்றாக இதைப் பிரயோகிக்கலாமென்று கூறிய அவர், இது பற்றி த.கூ.ந உலகுக்கு (கெட்ட வார்த்தை இல்லீங்க.. தமிழ் கூறும் நல்லுலகு என்பதின் சுருக்கம்) எடுத்தியம்புமாறு என்னைப் பணித்தார்

இன்வெஸ்ட்மெண்ட் பேங்கர்ஸ், ஃபைனான்சியல் கன்சல்டண்ஸ், வெல்த் மேனேஜர்ஸ், ஸ்டாக் அனலிஸ்ட்ஸ் என்று பல பெயர்களில் உலவும் இந்த உயிரினங்கள் MBA, CA போன்ற வியாபாரப் படிப்புகளை மிகப் பெரும் கல்வி நிறுவனங்களில் படித்து முடித்தவர்கள். இவர்கள் சாதாரணமாக, கிராமப் புறங்கள், நகர குடிசைகள், ரேஷன் கடைகள், சரவணா ஸ்டோர்ஸ் போன்ற எளிய, நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதிகளில் தென்படுவதில்லை. ஹேமா மாலினியின் கன்னங்கள் (நன்றி: திரு. லாலு பிரசாத் யாதவ்) போன்று பட்டுப் போல் வழுக்கிச் செல்லும் சாலைகளும், மேம்பாலங்களும் அமைந்த மாநகரங்களில், கண்ணாடி மாளிகைகளில், குளிரூட்டப் பட்ட அறைகளில் அதிகம் தென்படுவர். இவர்கள், உயர்தர கிண்ணங்களில், உயர்விலை மதுக்களை அருந்தி (சாரு போன்றவர்கள் விதி விலக்கு), சொகுசான உணவுகளை உண்டு, உயர் நாற்றக் கு. விடுவது சாதாரண மனிதனுக்குத் தெரியாது என்பதற்காக, இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுவதா?? சென்றிடுவீர் எட்டுத் திக்கும் என்றோதிய பாரதியின் எள்ளுப் பேரனல்லவா??

அமெரிக்காவில் ஒரு ஊரின் எல்லையில் ஒரு விவசாயி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது சாலை வழியே சென்ற ஒரு BMW கார் அவரருகில் நின்றது. அதிலிருந்து ஒரு மிக ஸ்மார்ட்டான ஒரு இளைஞன் வெளிப் பட்டான். த்ரீ பீஸ் ஸூட் அணிந்திருந்தான். “அய்யா உங்கள் மந்தையில் எத்தனை ஆடுகள் உள்ளன என்று ஒரு நிமிடத்தில் எண்ணித்தரவா?” என்று கேட்டான். விவசாயியும் ஒத்துக் கொண்டார். சரியாகச் சொல்வதற்கு ஒரு ஆடு கூலியாகக் கேட்டான். அதற்கும் அவர் ஒத்துக் கொண்டார்.

தனது காரில் இருந்து ஒரு லேப் டாப் கம்ப்யூட்டரை எடுத்தான். அத்துடன் ஸாட்டிலைட் தொலைபேசியை இணைத்து, வானத்தில் சுற்றும் தொலை தொடர்புக் கோளுடன் தொடர்பு கொண்டு, அத் தொடர்புக் கோளின் கண்கள் உதவியுடன் ஒரு நிமிடத்தில் “மொத்தம் 1674 ஆடுகள்” என்று பதில் சொன்னான். அதிசயித்துப் போன விவசாயி, நீயே ஒரு ஆட்டை எடுத்துக் கொள் என்று கூறினார். அவன் ஆட்டை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது “நீ பிஸினெஸ் கன்ஸல்டண்ட் தானே?” என்று கேட்டார். அசந்து போனான் இளைஞன். “எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?” என்று கேட்டான்.

“மூன்று குறிப்புகள் உதவின. முதலில் நான் கேட்காமலேயே என் தொழிலுக்குள் வந்தாய். பிறகு எனக்குத் தேவையில்லாத விஷயத்தை, மிகப் ப்ரயத்னம் செய்து கண்டு பிடித்தாய். மூன்றாவதாக ஆட்டுக் குட்டி என்று நினைத்துக் கொண்டு, என் நாய்க்குட்டியைத் தூக்கிக் கொண்டு போகிறாய். நீ வேறென்னவாக இருக்க முடியும்??”

அடுத்ததாக, நம்ம ஊர்க் கதை! தமிழ் நாட்டில் ஒரு ஊரில் ஒரு கோவில் காளை வசித்து வந்தது. கோவில் காளைகள் பற்றித் தான் நமக்குத் தெரியுமே.. யாருடைய தோட்டத்திலும் மேயலாம். விருப்பம் போல் எந்த மாட்டுடனும் உறவு கொண்டு இன விருத்திக்குப் பாடு படலாம். (கோவில் காளைகள்தான் இப்போது அரசியலில் ஈடுபடுகின்றனவா என்று கேட்டால் எனக்குக் கெட்ட கோபம் வரும்). ஒரு நாள், ஒரு தோட்ட வேலியைத் தாண்டிக் குதிக்கும் போது, இடுக்கில் மாட்டி அதன் விரைகள் சேதமாகி விட்டன. அதன் பின்னர், தனது விதியை நினைத்து வருந்தி வெறும் உணவு மட்டும் சாப்பிட்டு வந்தது.

ஒரு நாள், தூரத்தில், ஒரு காளை, மாட்டைப் புணர முயற்சி செய்து கொண்டிருந்ததைக் கண்டது. இது உடனே ஸ்தலத்துக்கு விரைந்து சென்று, “ஆ.. அப்படிச் செய்.. இப்படிச் செய்” என்று சத்தம் போட்டது. இதனால் எரிச்சலுற்ற அந்தக் காளை, நமது கோவில் மாட்டைப் பார்த்து, “இப்படி வெட்டி வர்ணனைக்கு பதில், நீயே வந்து முயற்சி செய்யலாமே” என்று கேட்டது. அதற்கு நம் கோவில் மாடு, “ஸாரி.. நான் இப்ப கன்ஸல்டெண்ட்” என்று பதில் சொன்னதாம்!!

மூன்றாவதும் நம்ம ஊர்க்கதையே. மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் (management institutes), கோடை காலப் பயிற்சி என்று ஒன்று உண்டு. மாணவர்கள் எம்.பி.ஏ கல்வியை முடித்த பின் பணிபுரியச் செல்லும் நிறுவனங்களில், ஒரு வருடம் முன்பாகவே சென்று ஒன்றிரண்டு ப்ராஜக்ட்ஸ் செய்வார்கள். அந்த வருடம், ஒரு நிறுவனத்தில் மிகக் குறைந்த கிரேடுகள் பெற்றிருந்த ஒரு மாணவனுக்கு, கிராமத்தில்தான் ப்ராஜக்ட் கிடைத்தது.

கிராமத்தை அடைந்த அவன், முதலில் ஒரு மளிகைக் கடை முதலாளியைச் சந்தித்தான். மிக மும்முரமாக மளிகைக் கடை வேலை செய்து கொண்டிருந்த அவர் அவ்வப்போது, எழுந்து, தன் கடையின் பின்னால் இருந்த செக்கில் சுற்றிக் கொண்டிருந்த மாடுகளையும் விரட்டிக் கொண்டிருந்தார். அதாவது, ஒரே சமயத்தில் இரண்டு தொழில்கள் – எம்.பி.ஏ மொழியில் சொல்வதானால் multi tasking.

நம் மாணவனுக்குப் புல்லரித்துவிட்டது. மிகப் பெரும் வணிகத் தத்துவத்தை ஒரு சாதாரண மளிகைக் கடை முதலாளி கடை பிடிக்கிறாரே என்று. “அய்யா, எப்படி ஒரே சமயத்தில் இரண்டு தொழில்களையும் பார்த்துக் கொள்கிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர். “மாடுகளின் கழுத்தில் மணி கட்டியிருக்கின்றேன். மாடுகள் செக்கைச் சுற்றி வரும் வரை மணிகள் அசையும், ஒலியும் கேட்கும். அவை நிற்கும் போது, மணியோசையும் நின்று விடும். மணியோசை நின்றவுடன், நான் சென்று, சாட்டையைச் சொடுக்குவேன், அவை மீண்டும் நகரத் துவங்கிவிடும். அவ்வளவுதான்” என்றார்.

“பிரமாதம்” என்று வியந்த மாணவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. “ஒரு வேளை, மாடுகள் ஒரே இடத்தில் நின்று கொண்டே, சும்மா கழுத்தை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தால்??” “மாடுகள் நிச்சயம் அப்படிச் செய்யாது” என்றார் ம.க.மு. “எப்படி அவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டான் மாணவன். “ஏன்னா, அவை எம்.பி.ஏ படிக்கவில்லை” என்றார் ம.க.மு.

இப்படியாக, “ஊரான் ஊரான் தோட்டத்திலே, ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா.. காசுக்கு மூணு விக்கச் சொல்லி காயிதம் போட்டானாம் வெள்ளக் காரன் “ என்ற கதையாக, உழைப்பவன் உழைப்பைக் கடைந்து, வெண்ணெய் எடுத்துச் செல்வதே வணிகமும் ஆலோசனையும் என்றறிக. “மணி எவ்வளவு?” என்று கேட்டால், உங்கள் கையில் உள்ள கடிகாரத்தைக் கழற்றி, மணி பார்த்துச் சொல்லிவிட்டு, கடிகாரத்தைக் காணிக்கையாகக் கொண்டு செல்வோரே ஆலோசகர் என்றும் சொல்வர் பெரியோர்!

எனவே “நோவாமல் நோம்பி கும்புடுவது” என்னும் தத்துவத்தை வாழ்க்கை முறையாக வைத்துக் கொள்ள விரும்பும் அன்பர்கள், தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல், CAT, GMAT போன்ற தேர்வுகளெழுதி, மிகப் பெரும் மேலாண்மைக் கல்விக் கோயில்களின் கர்ப்பக் க்ருகத்துக்குள் நுழைந்துவிட்டால், பின்னர் வாழ்வு “மனம் போல் மாங்கல்யம்” என்று அறிந்து, அவ்வழி செல்வீர்களாக!!

இறுதியாக, பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆகச் சிறந்த விதிமுறைகள் இரண்டைச் சொல்லி, இக்கட்டுரையை முடிக்கிறேன்.

வி.எண்:1: பங்குச் சந்தைச் சாலையில், வாடகைக் காரில் செல்லும் போது, காரின் ஓட்டுனர் பங்குச் சந்தையைப் பற்றிப் பேசினால், உங்கள் பங்குகளை உடனே விற்று விடவும்.

வி.எண்:2: பங்குச் சந்தைச் சாலையில், உங்கள் வாடகைக் காரின் ஓட்டுனர் முன்னால் பங்குச் சந்தை ஆலோசகர் என்றறியும் போது, பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் துவங்கவும்.

சென்னை மாநகரில் ப்ளாட் வாங்கும் போது, அதை விற்ற நிறுவனம், ஒரு இனிய அதிர்ச்சி கொடுக்கும் என்று நான் கனவிலும் நினைக்க வில்லை. இடுக்கண் வரும் போதெல்லாம் என்னை மகிழ்விக்கும் மாமருந்தாக அது திகழ்கிறது.

எனது வீடு உருவாகும் தருணங்களில், அடிக்கடி பார்வையிடச் செல்வேன். அப்போது, பல்வேறு நிறங்களில் சுற்றுப் புரங்களில் உலவிக் கொண்டிருந்த அந்த வயதான உயிரினங்களைக் கவனிக்க வில்லை. பிற்காலத்தில், அவையனைத்தும் ஒன்று கூடி, ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி, இப்படி ஒரு நிறுத்தமில்லாக் கொண்டாட்டத்தைக் (non stop entertainment என்பதைத் தான் தமிழில் சொன்னேன்) கொடுக்கும் என்பது அப்போது என் சிற்றறிவுக்கு எட்ட வில்லை. அபார்ட்மெண்ட் அஸோஸியேஷன் என்னும் மாபெரும் ஸ்தாபனத்தின் தூண்கள் இவை.

பொதுவாக இந்த உயிரினங்கள் தனியார் அல்லது பொது நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவை. மூப்பு மற்றும் வியாதிகள் காரணமாக இருக்கும் எரிச்சலை, மற்றவர்கள் மீது திணிப்பதை தமது நிறுவனப் பொறுப்பின் ஒரு பகுதியாக நினைப்பவை. தம் பேரக் குரங்குகள் தவிர மற்ற குரங்குகள் யாவும், மனித குலத்தின் எதிரிகள் என்பதே இவற்றின் நம்பிக்கை. மற்ற குரங்குகளும், இந்நம்பிக்கைத் தீயில் நெய் வார்க்கும் விதமாக, இந்தக் கிழங்களுக்கு, செல்லப் பெயர் இட்டு அழைப்பது, கேட்குந்தோறெல்லாம் காதில் தேன் பாயும்! இந்தக் குழுவில் சேர்த்துக் கொள்ளப்படாத வயதான உயிரினங்கள், எதிர்க்கட்சியாகத் திறம்படச் செயல்படும். இந்த இரண்டு குழுக்களிலும் சேராத ஒன்றிரண்டு விமர்சக உயிரினங்களும் உண்டு. தாம் உயிர் வாழ்வது கூட கடவுளின் பிரச்சினைதான் என்பதை உரக்க விவாதித்துச் சண்டையிட்டு நிறுவி, சாலையில் எச்சில் துப்பிச் செல்லும்.

கல் தோன்றி, முள் தோன்றி, டெக்னாலஜி தோன்றாக் காலத்தில் கட்டப்பட்ட எனது பழைய வீட்டில், சண்டையிடும் வாய்ப்புகள் குறைவு. அஸோஸியேஷனின் வருடாந்திர மற்றும் விஷேஷ நாட்களில் கூட்டப் படும் கூட்டங்களில் மட்டுமே சண்டை சாத்தியம். அந்த விஷேட நாளுக்காக, எதிர்க்கட்சி உயிரினங்கள் தம்மைத் தயார் செய்து கொள்ளும் வழிமுறைகளைப் பின்பற்றினால், இந்தியாவுக்கு ஓரிரண்டு ஒலிம்பிக் மெடல்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. வாலினங்கள் சாலையில் உணவுக்காக அடித்துக் கொள்வது போன்ற சாத்வீகக் கூட்டங்கள் அவை. ஆனால், இங்கே சண்டையிடும் உயிர்களுக்கு வாலில்லை என்பது முக்கிய வேற்றுமை. பணியாற்றிய காலங்களில், அதிகாரிமார்களுக்கு ஆட்டிய வேகத்தில், ஓய்வு பெரும் முன்பே வால் கழன்று விழுந்து விடுவதே முக்கிய காரணம். கையெழுத்துப் பதிவேட்டில் கையொப்பமிட்டுவிட்டு உடன் ஓடி விடுவதே உயிர் காக்கும் வழி என்பது போல், ஃப்ளாட்டில் குடியிருக்கும் மற்ற உயிர்கள் பின்னங்கால் பிடறியில் இடிபட ஓடிவிடும்.

ஆனால் என் புதிய வீடு அப்படியில்லை. Technology has improved so much என்பதால், இங்கே ஆன் லைன் அஸோஸியேஷன். எல்லாம் இணைய தளத்தில் நிகழ்கிறது. ஒவ்வொருவரின் கருத்தும் சுடச்சுட இணையத்தில் வெளியாகிறது. தாழ்ப்பாளுக்குப் பின்புலமாக, பாதுகாப்புச் சங்கிலி பொருத்தப் பட்ட வீடுகளுக்குள் இருந்து வெளியாகும் துணிவு மிக்க கருத்துக்கள் புறநானூற்றுப் பாடல்களை நினைவூட்டுபவை. இவர்கள் வெளியேற்றும் சூடான கருத்துக்கள், வளி மண்டலத்தில் மேலெழும்பி, ஓசோன் மண்டலத்தை தாக்குவதே, அதில் ஓட்டை விழுவதற்கு முக்கிய காரணம் என்று புஷ்ஷும், அவர்தம் வெளியுறவு அல்லக்கை காண்டிலீஸாவும் முடிவுக்கு வந்திருப்பதாக CBI வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உண்மை போல் தோன்றுகிறது. நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பெட்ரோல் விஷயத்தில் போல் கோட்டை விட்டு விடக் கூடாது.

புது வீட்டு ஆன் லைன் அஸோஸியேஷனில் இப்போது புதிதாக இரண்டு உலகை (உலகு என்றால் தென் சென்னை என்னும் பூகோளப் பகுதி என்று அறியவும்) உலுக்கும் விவகாரங்கள் எழுந்துள்ளன. முதலாவது அங்கே நிறுவப்பட்டிருக்கும் நீச்சல் குளம். வீடு வாங்கும்போதே, பில்டர் சொன்னார், “சார் நீச்சல் குளம் கட்ட பிளான் இருக்கு, ஆனால், சிலர் அது வேண்டாம், அபார்ட்மெண்ட் விலையில் குறைச்சுக்கோங்கோன்னு சொல்றாங்க. நீங்க என்ன சொல்றீங்க??” கட்டாயம் நீச்சல் குளம் வேண்டுமென்று சொல்லிவிட்டேன். (டேய், மாமிகளை, டூ பீஸில் பாக்க அலையாதே! பாத்து கிலியடிச்சிருச்சின்னா, அப்புறம், பாடிகாட் முனீஸ்வரன் கோயிலுக்கு நேர்ந்துக்க வேண்டி வரும்னு நண்பர் ஜெயபிரகாஷ் சொன்னதைப் பொருட்படுத்தவில்லை. புறநானூற்றுப் பரம்பரை; எதையும் தாங்கும் இதயம்; பார்த்து விடுவோம் எனச் சூளுரைத்தேன்!! மேலும், நம்மைப் பாத்து மற்றவர்களுக்கும் கிலியடிக்குமல்லவா?? தானிக்கு தீனி சரியாப் போயிந்தி!!). இப்போது, பிரச்சினை என்னவென்றால், நீச்சல் குளத்தில் குளச் சீருடை என்னவென்பதே. துரதிருஷ்டவசமாக, இது பற்றிய விதிகளை எந்த மறைகளும் கூறுவதில்லை. அதனால், அஸோஸியேஷனின் முக்கிய தூண்களே இந்த மாபெரும் கடமையைச் செய்ய வேண்டியிருக்கிறது. அவர்களும் வருத்தப் பட்டுப் பாவம் சுமக்கத் தயாராகி, ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் குளங்களின் நீச்சல் விதிகளைச் சுட்டு ஒரு விதிமுறைப் பட்டியலை உருவாக்கி வெளியிட்டார்கள். அது வெளியாகிய, இரண்டாவது நிமிடத்தில், எதிர்க்கட்சியிலிருந்து எதிர்ப்பு வந்துவிட்டது இணையத்தில்!

ஆண்கள், மிகச் சிறிதான ஜட்டி மற்றுமே அணிவார்கள். அதைப் பார்த்து பெண்மகவுகள் சங்கோஜப் படலாம். எனவே அவர்கள் லூஸான பெரிய அரை டிரவுசர் போன்ற ஆடை அணியலாம். பெண்கள் non-transparent ஆன உடைகளை அணியலாம் என்று மாற்று யோசனைகள் எதிர்க்கட்சியின் தரப்பில் இருந்து கூறப்பட்டது. இது வெளியான இரண்டாவது நிமிடத்தில், முற்போக்கு மகளிர் தரப்பிலிருந்து கண்டன அறிக்கை வெளியானது. நீச்சல் குளங்களில், நீச்சல் உடைகளே அணிய வேண்டுமென்றும். தேவையின்றி உடை விதிகளை மாற்றினால், அவரவர் இஷ்டத்திற்கு விதிகள் தளர்த்தப் படும் என்று. சரியென்றே தோன்றுகிறது. பின்னே பதினாறு முழப் புடைவையும், இரட்டை வேஷ்டியும் நீச்சலுடைகளாக மாறிவிட்டால், நீச்சல் குளம், மொகஞ்சதாராவின் “public bath” ஆகிவிடாதா?? இதற்கு ஆதரவாக முற்போக்கு ஆண்கள் தரப்பிலிருந்து உடனே ஒரு அறிக்கை வந்துவிட்டது. “நீச்சல் குளத்தில் நீச்சலுக்கு மட்டுமே அனுமதி! சமுதாய ஒழுக்கக் காவல் விதிமுறைகளுக்கு இங்கே இடமில்லை”. பெண் மகவுகளை டூ பீஸ் உடையில் பாக்கும் பாக்கியத்தைக் கெடுத்து விடுவார்கள் போலிருக்கிறதே என்று துக்கத்தில், கண்களில் நீர் தளும்பிவிட்டது. காலைக் கடன் கழித்து, உடல் தூய்மை செய்து கொள்ளவே நீரின்றித் துயருறும் ஏழை மக்கள் நிரம்பிய சென்னை மாநகரத்தில், இப்படி ஒரு luxury தேவையா என்று இறுதியில், தமிழ் சினிமா போலீஸ் போல, மாநகர அரசியல் காவலர்கள் நுழைந்துவிடுவார்களோ என்று இப்போது கூடுதல் பயம் வேறு.

அல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமானும், மயிலைச் சுடலையாண்டி கபாலீஸ்வரனும் எழுந்தருளி, நீச்சல் குளச் சச்சரவைத் தீர்த்து வைக்கவேண்மென்று வேண்டிக் கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை பராபரமே!

உலகைக் உலுக்கும் அடுத்த விஷயம் கார் ஓட்டுனர்கள். இவர்கள் செய்யும் அக்கிரமங்களைப் பட்டியலிட்டு ஒரு அறிக்கை வெளியாகியது. அதைப் படிக்க நேர்ந்தால், பின் லேடன், சதாம் ஹுஸேன், நீலப் பட டாக்டர், paedophiles, maniacs, எம்.என், நம்பியார், அம்ஜத்கான் என உலகின் அனைத்து நிஜ/நிழல் வில்லன்களும் ஒரே இடத்தில், மாதம் நாலாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலை செய்யும் அதிசயம் உங்களுக்குத் தெரியும். அவர்கள் செய்கின்ற அக்கிரமங்களுடன், அவர்கள் செய்யப் போகும் அக்கிரமங்களையும் ரூம் போட்டு யோசிக்கும் அஸோஸியேஷனின் கடமை உணர்வை என்ன சொல்ல?? ஒருவேளை, நீச்சல் குளத்தை ஒளிந்திருந்து பார்த்து விட்டால்??? CBI/RAW போன்ற நிறுவனங்கள் தமது சென்னை அலுவலகங்களை மூடிவிட்டு, அவ்வேலைகளை, இது போன்ற அஸோஸியேஸன்களிடம் outsource செய்து விடலாம். கார் ஓட்டுனர்கள் செய்யும் இத்தகைய அக்கிரமங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள் பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் வெளி நாட்டினர்களும், கொலஸ்ட்ரால் அதிகமான மென்பொருள் விற்பன்னர்களுமே என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், அஸோஸியேஷன் விவகாரங்களின் ஈடுபட்டு, உடல் பொருள் ஆவியை அதற்காக, ஆன்லைனில் செலவழிக்கும் வயோதிக வாலிபர்களின் இல்லங்களில் நம்பவியலாத அளவில் வாழ்க்கைத்தரம் முன்னேறியிருப்பதாக அவர்கள் குடும்பத்தில் வசிக்கும் மனைவி, மக்கள் கூறுகிறார்கள். “அத மெதுவாக் கையப் புடிச்சுக் கூட்டிட்டுப் போயி, ஆன் லைனில் இறக்கி விட்டாப் போதும், திரும்பி வரவே வராது… காலையில எந்திரிச்சதும், பல் வெளக்கினியா?? காப்பி குடிச்சியா?? மூச்சா போனியா?? ஷர்ட் அயர்ன் பண்ணினியா?? என்பது போன்ற கரையான் அரிப்பில் இருந்து பர்மனண்ட் விடுதலை. அது பாட்டுக்கு கம்ப்யூட்டர் ஸ்க்ரீனப் பாத்து சைலண்டா குரைச்சிட்டிருக்கும்” என்கிறார் ஒரு விடுதலை விரும்பி. “அதுல கொஞ்சம் ரிஸ்க்கும் இருக்கு… பலான சைட்டுக்கெல்லாம் போயிட்டு, அதன் தடங்களை எப்படி அழிக்கிறதுன்னு தெரியாம முழிக்கிறார். அத எப்படிச் சொல்லித் தரதுன்னு நாங்க முழிக்கிறோம்” என்கிறது ஒரு விடலைத் தந்தையின் பேரிளம்பெண்.

சென்னை மாநகரத்தில் மக்கள் தொகை அதிகமாகி, பூங்காக்கள், மரம் அடர்ந்த வசிக்குமிடங்கள் எல்லாம் மறைந்து விட்டால், மக்கள் பொழுது போக்க என்ன செய்வார்கள் என்றெல்லாம் ஒரு காலத்தில் முட்டாள்தனமாகக் கவலைப் பட்டிருக்கிறேன். மரம் வைத்தவன் தண்ணி ஊற்றுவான் என்னும் உலக உண்மை தெரியாமல்…

Advertisements