மும்பையில் புதிதாய் வாங்கிய கார்டன் நிறுவனத்தின் அலுவல்களைக் கவனிக்கச் சொல்லி ஆர்டர் வந்தவுடன் நண்பர் சுதர்ஸன் சொன்னார் – “அந்த நிறுவனத்தின் முதலாளிகளுள் ஒருவர் ஓஷோ பக்தர். அவருடன் நீங்கள் இரண்டு ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும்” கோழி தின்னக் கூலி குடுக்கறாங்கன்னு நெனச்சிகிட்டேன்.

ஓஷோ பற்றி, எனது தோழியின் மூலமாகக் கொஞ்சம் அறிந்திருக்கிறேன். A cup of Tea, walking in zen போன்ற சில புத்தகங்கள் படித்திருந்தேன் அது வரை. அவர் ஒரு deconstructionist என்று சொல்லலாமா என்று தெரியவில்லை – எல்லவற்றையும் உடைத்துப் போடும் ஆசாமி. சாதாரண வாழ்க்கையின் அனைத்து holy cows ஐயும் அடித்து பிரியாணி செய்பவர். திருமணம், மதம், அன்பு எல்லாவற்றின் முரண்களையும் எள்ளி நகையாடுபவர். பேச்சில் இரண்டு பக்கத்துக்கு ஒரு செக்ஸ் ஜோக். ஆனால், உடைக்க முடியாத லாஜிக் அவர் உரையில். அவர் புத்தகங்கள் எதுவும் எழுதியதில்லை. பல்வேறு தலைப்புகளில் அவர் பேசிய உரைகளைத் தொகுத்து, அவர் பக்தர்கள் புத்தகங்களாக வெளியிட்டிருக்கிறார்கள்.

மும்பை போனதும் ஓஷோ பக்தரான கிரண் பாய் ஷா வை சினேகம் பிடித்துக் கொண்டேன். என் டேபிளில் ரமணரின் புகைப் படம் பார்த்ததும் அவருக்கும் என்னைப் பிடித்துப் போக, ஒரு வார இறுதியில் புனே பயணம். உடன் பணிபுரியும் நண்பர்களுக்கு ஒரே சிரிப்பு. என்னமோ காமாத்திபுராவுக்குப் போவது போல் கேலி!

அந்த வெள்ளி இரவு கிரண் பாயின் ஸ்கோடா லாரா நீரில் அன்னம் செல்வது போல் சாலையில் மிதந்தது. மும்பையின் ஆரவாரங்கள் தாண்டியதும், அவர் காரில் ஒரு சி.டி ஒலிக்கத் துவங்கியது. முதலில் அது ஏதோ ஷாயரி (கவிதை) போலத் தோன்றியது. வடக்கே கவிதை வாசிப்பது ஒரு நிகழ்வு. ஏதாவது வாக்கியத்தை, வாசிப்பவர் இரண்டாவது முறை படித்தால் கேட்பவர்கள் “வாஹ்! வாஹ்!!” என்று சொல்ல வேண்டும். இம்சை. ஆனால் இது கவிதையல்ல.. உரை – கொஞ்சம் காது கொடுத்துக் கேட்டதில் மஹாவீரரைப் பற்றிய உரை. முழுக்க முழுக்க இந்தியில் – புரிவது கொஞ்சம் கடினமாக இருந்தாலும், அந்தக் குரல் – மிக மிருதுவாக, பட்டுப் போல் ஒலித்தது. கொஞ்ச நேரத்தில் அக்குரலின் தாலாட்டில் தூங்கிப் போனேன். சற்று நேரம் கழித்து சாலையில் ஒரு திருப்பத்தில் கண் விழிக்க, பட்டுக் குரலோன் இன்னும் பேசிக்கொண்டிருந்தார். அப்போதுதான் பல்ப் எரிந்தது.

கிரண் பாய்.. ஒஷோ?’ என்று வினவினேன் – ‘ஆமாம்’ என்றார் புன்னகையுடன். இரவு கிரண் பாயின் புனே ஃப்ளாட்டில் தங்கல்.

அடுத்த நாள் காலை பகவான் ரஜ்னீஷின் புனே ஆசிரம வரவேற்பறையில் நின்றோம். கிரண் பாய் எனக்கு ஒரு செந்நிற ஆடையைக் கொடுத்து அணிந்து கொள்ளச் சொல்லியிருந்தார். அது ஆசிரமச் சீருடை. உடல் முழுதும் போர்த்திக் கொள்ளும் பாதிரியார் போன்ற உடை. முதலில் ரத்தப் பரிசோதனை – எய்ட்ஸ் இருக்கிறதா என்று பார்ப்பதற்காக. நிறுவனங்கள் தேவையில்லை என்று சொல்வதற்குக் கூட ஒரு நிறுவனம் தேவைப் படும் விந்தையை நினைத்துச் சிரித்துக் கொண்டேன். விதிகள் இல்லை என்பதும் ஒரு விதியே!

அரை மணி நேரத்தில் நீங்கள் செல்லலாம் என்று அனுமதி வந்து விட்டது. ஆசிரமத்துள் கொஞ்சம் தாமதமாகச் சென்றதால், உங்களுக்கு நாளைக்குத் தான் induction. இன்று சும்மா சுத்தி வாருங்கள் என்று சொல்லிவிட்டார்கள். கிரண் பாய் நேரே தியானம் செய்யப் போய்விட, கூட வந்த சந்திரகாந்த் பாய் அழைத்து சென்று ஒவ்வொரு இடமாகக் காட்டினார். கொஞ்ச நேரத்தில் கொட்டாவி வந்து விட்டது – பேசாமல் சனிக் கிழமை ஃபேக்டரியிலேயே இருந்திருக்கலாம் போல் இருந்தது. கஷ்டப் பட்டு மதிய உணவு வரை சமாளித்தேன்.

மதிய உணவுக்குப் பின் எனக்கு ஏற்படும் மிகப் பெரும் ப்ரச்சினை அன்றும். பாலா தளவாய்ப்பேட்டையிலிருந்து வெளியே வந்து விட்டாலும், பாலாவுக்குள் இருக்கும் தளவாய்ப் பேட்டை வெளியே போகாது என்பது எங்கள் அம்மிணியின் மேற்கோள். ஈரேழு புவனங்கள் சென்றாலும் மதிய உணவுக்குப் பின் எனது cpu திறன் குறைந்து கண்கள் சுழற்றும். அன்று கொஞ்சம் அதிகம் சுழற்றியது போலிருந்தது. எப்படிடா இந்த இரண்டு நாள் சமாளிக்கப் போகிறோம் என்று பீதியாக இருந்தது.

பல்லைக் கடித்துக் கொண்டு 4 மணி வரை ஓட்டி விட்டேன் – இரண்டு முறை சொக்க நாதனானதாக ஞாபகம். 4 மணிக்குக் கிரண் பாய் தியான லோகத்திலிருந்து வெளியே வந்தார். “வீட்டுக்குப் போய் டீ சாப்பிடலாமா?” என்றார். “ஆஹா, பேஷா என்ற படியே வெளியே பாய்ந்தோடினேன்.

பிஸ்கட், காரி என்ற பல வஸ்துக்களுடன் டீயும் சாப்பிடுகிறார்கள் குஜராத்திகள். டீ சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் அமைதி. நான் செய்தித் தாளை மேய்ந்தேன் சந்தோஷமாக. கொஞ்ச நேரம் கழித்து, கிரண் பாய் ‘இரவு ஓஷோவின் உரைக்குப் போலாமா?” என்றார். மனதுள் பலியாடு போல் உணர்ந்தேன். தனி மனிதனுக்கு ஒரு சோதனை வந்தால் ஒண்ணும் பண்ண முடியாது. இரவு உரைக்கு வெள்ளையாடை. எகிப்து பிரமிட் போல் அமைக்கப் பட்ட ஒரு பெரிய ஹாலுக்குள் சென்றோம். தியான மண்டபம் செல்லும் வழியில் இரு புறமும் சல சலவெனச் செயற்கையாய் உருவாக்கப் பட்டிருந்த நீர் நிலைகள். அதன் நடுவே நடந்து செல்வது தாஜ் மகாலை நினைவுறுத்தியது.

அந்த இரவு நிகழ்ச்சிக்கு ஒரு வழி முறை உண்டு. முதலில் இசைக் கருவிகளை மீட்டுவார்கள். அதற்கேற்ப பங்கு பெறுவோர் நடனமாடுவார்கள். பெரும்பாலும் தனியே. ஓரிருவர் துணையோடு. ஆனால் அவ்வரங்கில் அது விகல்பமில்லாமல் இருக்கிறது. அவ்விசை மெல்ல மெல்ல உச்ச ஸ்தாயியை அடையும் போது அனைவரும் ஓஷோ என்று கைகளை உயர்த்தி கத்துகிறார்கள். அதன் பின் அனைவரும் பளிங்குத் தரையில் அமர்ந்து கண்களை மூடிக் கொள்கின்றனர். இப்போது இன்னொரு விதமான இசை வருகிறது. இது பெரும்பாலும் சித்தார் போன்ற தனித் தந்தியிசை. நடனத்தில் மெல்ல சூடான உடல் குளிர்வதை உணர முடிகிறது. இசையின் முடிவில், திரையில் ஓஷோ தோன்றுகிறார்.

அன்று அவருக்குக் கிடைத்தவர் மொரார்ஜி தேசாய். யாரோ ஆல்கஹாலிஸம் பற்றிக் கேட்க அதற்கு ஓஷோ சொல்வது – அதை விட அதிகார மோகம் பயங்கரமானது. இங்கே பாருங்கள், இந்த ஆள் மொரார்ஜி, நாட்டின் பிரதமராக இருந்தவர். இப்போது சொல்கிறார் – மக்கள் விரும்பினால், நான் குஜராத்தின் முதல்வராகத் தயார் என்று. (எனக்கு ராஜாஜி நினைவுக்கு வந்தார்). சாராய போதைய விட அதிகார போதை மிக மோசமானது. சாராய விருப்பு நோயெனில், அதிகார போதையை என்ன சொல்வீர்கள்? அன்று அவரிடம் மொரார்ஜி மாட்டிக் கொண்டார்.

அவரது உரை மிக மெதுவாகச் செல்கிறது. குறுக்கெழுத்துக் கற்றவர்கள் அப்படியே நோட்ஸ் எடுத்து விடலாம். அவ்வளவு மெதுவாக உரையாற்றுகிறார். வார்த்தைகள் பிசிறுவதில்லை. ஒரு முறை எடுத்தாளப் பட்ட வார்த்தை மீண்டும் வருவதில்லை. வாக்கியங்களின் நடுவே யோசிப்பதில்லை. அழகான இளையராஜா பாடல்களின் சரணங்களின் நடுவே, interlude ஒன்று நுழைந்து நம்மைத் தம்முடன் அழைத்துச் சென்று பின் மீண்டும் பாடலின் சரணத்துள் கொண்டு சேர்ப்பதைப் போல, ஓஷோ தன் உரையின் நடுவே சற்றே விலகலாய் ஒரு கதை சொல்லி, அனைவரையும் சிரிக்க வைத்து, பின் மீண்டும் உரையின் நோக்கத்துக்கு வருகிறார்.

மென்மையான மனதை வருடும் குரல் ஓஷோவுடையது. மெல்ல மெல்ல முத்துக்கள் பொறுக்கி எடுத்து மாலை கோர்ப்பது போல் அழகான வார்த்தைகளைப் பொறுக்கி அவர் வாக்கியங்களை உருவாக்கும் பாணி ஒரு தேர்ந்த சொற்பொழிவாளருடையது. மொத்த கூட்டத்தினரையும் மெய்மறந்து கேட்கச் செய்யும் திறன் அவரது. குறை என்று பார்த்தால் அவரின் ஆங்கில உச்சரிப்பில் கொஞ்சம் தெரியும் accent.

உட்கார்ந்திருந்து அவர் பேச்சைக் கேட்டவன் அப்படியே தரையில் படுத்து விட்டேன். மெல்ல அவர் குரல் தூரத்தில் கேட்டுக் கொண்டே இருந்தது ரொம்ப சுகமாக இருந்தது. திடீரென மீண்டும் இசை. விழித்துக் கொண்டேன். ஒஷோவின் உரை முடிந்து விட்டிருந்தது. அனைவரும் தத்தம் mats முதலானவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்பினர். பளிங்குத் தரையின் ஜில்லிப்பு உடல் முழுதும் பரவியிருந்தது. மனதின் ஆரவாரங்கள் அடங்கி ஒரு அமைதி வந்திருந்தது. மொத்த கூட்டமும் அமைதியாகக் கலைந்து சென்றது. காற்றில் இலைகளின் சலசலப்பு மட்டுமே..

ஆசிரமத்தை விட்டு வெளியே வந்ததும், கார் மோட்டார் சத்தங்கள். கிரண் பாய் திரும்பிப் பார்த்துக் கேட்டார் “எப்படி இருந்தது?” “ரொம்ப சுகமாய் இருந்தது கிரண் பாய்” என்றேன். அப்படியே நடந்து கிரண் பாயின் ஃப்ளாட்டை அடைந்தோம்

அன்றிரவு கொஞ்சம் பியர் அருந்திவிட்டு, சாப்பிட்டு விட்டுப் படுத்தவுடன் தூக்கம் – முதல் நாள் நள்ளிரவுதான் புனே அடைந்திருந்தோம்.

அடுத்த நாள் guided tour – ஓஷோவின் ஆசிரமங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள், தியான முறைகள், விதிமுறைகள் என்று அரை நாள் வழிகாட்டுகிறார்கள். இந்தியர்களுக்கு என்று சில அதிக விதிகளைத் தனியே சொல்கிறார்கள். பெண்களை உற்றுப் பார்க்காதீர்கள். அவர்களை அவர்களின் அனுமதியின்றித் தொந்தரவு செய்யாதீர்கள் etc etc. தேவை.

மதியம் சாப்பிட்டு முடித்தவுடன் சந்திராகாந்த் பாய் ஓஷோவின் சமாதியில் தியானம் செய்யலாம் என்று அழைத்தார். ஓடினோம். சரியாக மதியம் 1:30 மணிக்குத் துவங்கும் இந்நிகழ்வு 2 மணி வரை நீடிக்கிறது. ஒஷோ ஒரு வெண்மைப் பிரியர் போல. வழியெங்கும் வெண் தரை. சமாதி, அவர் வீட்டினுள்ளேயே இருக்கிறது. வீடெங்கும் அவர் படித்த புத்தகங்கள். ஒரு லட்சம் புத்தகங்களுக்கும் மேல் படித்ததாகச் சொல்லப் படுகிறது.

உள்ளே சென்று ஒரு திண்டில் அமர்ந்தோம். எனது siesta பலவீனம் பற்றி பயமாக இருந்தது. எங்கே தூங்கி அருகிலிருக்கும் ஆசாமி மீது விழுந்து விடுவேனோ என்று பயந்தேன். தொடைகளைக் கிள்ளிக் கொண்டேன். கண்களை மூடிக் கொண்டு தூங்காதே என்று சொல்லிக் கொண்டேயிருந்தேன். ஒரு மணி அடித்தது – தியானம் துவக்கம். மெல்ல மெல்ல அந்த இடத்தின் அமைதி எல்லோரையும் தழுவுவது போல் உணர்ந்தேன். எனக்குத் தெரிந்த ஒரே வகை தியானமான “நான் யார்” என்று நினைக்கத் தொடங்கினேன். பல வருடமாக படித்து படித்து மனப்பாடம் ஆகி உள்ளதே ஒழிய இன்னும் சுய தரிசனத்தின் சுவடு கூடத் தெரிந்ததில்லை. மனம் அமைதியாகி ஒரு நிசப்தம் கூடி வரும் வரைதான் போக முடிந்திருக்கிறது. பக்கத்தில் லேசான குறட்டைச் சத்தம் வரத் துவங்கியது. எப்போதுமே வரிசையில் நமக்குப் பின் நாலு பேர் நிற்பது போல் திருப்தி உலகில் வேறொன்றில்லை. தியான மண்டப மேற்பார்வையாளர் மெல்ல வந்து குறட்டை விடும் ஆளை மெல்லத் தட்டி எழுப்பிவிட்டார். அதன் பின் குரங்கு கிளை தாவிச் சென்று விட்டது. அன்றைய கொடுப்பினை அவ்வளவுதான்.

சற்று நேரத்தில், தியானம் முடிந்ததன் அடையாளமாக மீண்டும் ஒரு மணி அடித்தது. வெளியே வந்ததும் பகலின் வெளிச்சத்தில் கண்கள் கூசியது. அங்கிருந்து ஆசிரம நூலகம். எத்தனை நூல்கள்! கொஞ்ச நேரம் சுற்றி விட்டு எந்தப் புத்தகத்தை எடுப்பது என்று குழப்பம். சட்டென்று, ஒரு டேபிளின் மேல், புத்தகங்களின் அறிமுகம் பற்றிய ஒரு கையேடு இருந்தது தென்பட்டது. ஓவ்வொன்றாகப் புரட்டிப் புரட்டி, அதன் உள்ளடக்கத்தையும் படித்ததில் நான்கு புத்தகங்கள் வாங்கலாம் என்று முடிவாயிற்று. அதற்கு மேல் செலவு செய்ய மனமில்லை.

  1. Wisdom of the sands – on sufi saints
  2. Songs of ecstasy – lectures on Bhaja govindam
  3. The search – lectures on the ten bulls of zen
  4. the books I liked ( தலைப்பு சரியாக நினவில்லை – புத்தகம் இரவல் போய் காணாமல் போய்விட்டது)

அப்புறம் “work as meditation” என்னும் ஒலிப் பேழை. மொத்தத் தேர்வையும் செய்ய ஒரு மணி நேரத்துக்கும் மேலாயிற்று. அந்த வேலை மிக்க மகிழ்ச்சி தருவதாக இருந்தது. பின் சற்று நேரம் மீண்டும் பிரமிட் கோபுரத்தில் சென்று அமைதியாக அமர்ந்திருந்த காலம் முடிவற்றது போல் தோன்றியது. இன்று கால் வலி தவிர மற்ற பிரச்சினைகள் இல்லை.

நாலு மணிக்கு டீ குடிக்க மீண்டும் கிரண் பாய் வீட்டுக்கு நடந்தோம். நேற்று செந்நிற முழு அங்கியை அணிந்து கொண்டு புனேவின் தெருக்களில் நடப்பது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. இன்று பழகிவிட்டது. இறுகப் பிடிக்காத அந்த உடையினூடே காற்று புகுந்து உடல் தழுவுவது சுகமாகவே இருந்தது. இன்று கொஞ்ச நேரம் தேனீரோடு, கிரண் பாய், ஓஷோவை அடைந்த கதை கேட்டேன். கிரண் பாய் ஒரு குஜராத்தி பிஸினஸ் மேன். சமணர். Fiercly competitive. ஆனால் ஒஷோவோ சாதாரண முதலாளியைப் பார்த்து பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பவர். வாழ்க்கையின் முரண்கள் அனைத்தையும் அறிந்து கொள்வது மிகக் கடினம்!

கொஞ்ச நேரம் கழித்து, இரவு உரை கேட்க, வெள்ளுடை அணிந்து புறப்பட்டோம். இன்று கொஞ்சம் கொஞ்சம் உற்சாகமாக இருந்தது. ஏனென்று தெரியவில்லை. ஓஷோ நகைச்சுவை உணர்ச்சி உள்ளவர். அதனால் கூட இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

நிகழ்ச்சி துவங்கியவுடன் இசை வெள்ளம்; நடனம்; எனக்கு நடனமாட வராது என்று நான் நினைத்துக் கொண்டிருப்பதால், நடனமாடுதல் சங்கடமாக இருந்தது. கண்ணை மூடிக் கொண்டேன். மெல்ல மெல்ல கைகளையும் கால்களையும் அசைத்துக் கொண்டேயிருந்தேன். எப்படா முடியும் என்று நினைத்துக் கொண்டே. கொஞ்ச நேரத்தில் இந்த அவஸ்தையும் பழகி விட்டது. மனத்தை அடக்கிக் கொண்டிருந்தால் எங்கே வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது ரமணர் வாக்கு. ரமணர் பற்றி நினைத்து கொண்டே இருந்த போது இசை நின்று அனைவரும் ஓஷோ என்று கத்தினர். அடுத்து சில நிமிட நிசப்தத்துக்குப் பின், சித்தார் இசை வந்தது. சட்டென்று புரிந்தது – இது ஒரு வகை உத்தி. தனது உரைக்கு, சீடர்களைத் தயார் செய்யும் ஒரு உத்தி.

மனம் மெல்ல மெல்ல சமன் அடைந்து, உடல் குளிரத் தொடங்கியது. அழுகை முட்டி நிற்பது போல் ஒரு உணர்வு பொங்கிப் பொங்கி வந்தது. ஒஷோ என்ன பேசினாரென்றே தெரியவில்லை. இருப்பின் ஒவ்வொரு துகளும், நொடியும் சந்தோஷத்தில் திளைக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். கண்ணுள் மீண்டும் மீண்டும் ரமணர்! சம்மணமிட்டு அமர்ந்திருப்பது கஷ்டமாயிருந்ததால், கால் நீட்டிப் படுத்தேன். எப்போது தூங்கினேன் – தெரியவில்லை. திடீரென மீண்டும் இசை வர கண் விழித்தேன். ஒஷோவின் உரை முடிந்திருந்தது.

பிரமிட் அரங்கை விட்டு வெளியே வரும் போது அண்ணாந்து பார்த்தேன். தெளிவான வானம். சல சல வென ஒடும் நீர் நிலைகள். கிரண் பாய்க்காக காத்திருந்தேன். வெளியே வந்த கிரண் பாய், லாலி பாப் கேட்கும் குழந்தை போல் கேட்டார் “பாலாஜீ, இன்னொரு நாள் இருந்துட்டுப் போலாமா?” என்று.

நான் “ரொம்ப சந்தோஷமா” என்றேன். மதுராதிபதே, அகிலம் மதுரம்!

Advertisements