வீட்டுக்கு வந்து ட்ராக் ஸூட் மாட்டிக் கொண்டு தோசை மாவு வாங்கக் கிளம்பினேன். மும்பையில், அதுவும் போரிவிலியில் தோசை மாவு கிடைக்கிறது என்பது என் போன்ற கல்யாணமாகியும் ப்ரம்மச்சாரிகளுக்கு பெரிய வரம். அது மட்டுமல்லாமல், தோசையுடன் தேங்காய்ச் சட்டினியும் கிடைக்கிறது. சீக்கிரம் போகாவிட்டால், அதற்கு ஒரு பெரிய வரிசை வந்துவிடும். மும்பையில் சாகக் கிளம்பினால் கூட அங்கே ஒரு வரிசை இருக்கும் போல..

போய்ச் சேருவதற்குள் D-மார்ட்டில் வரிசை துவங்கிவிட்டது. வரிசையில் நான் மட்டுமே மதறாஸி. தோசை மாவு D-மார்ட் ரீடயெல் கடையின் வெளியே உள்ளதால் ஒரு சௌகர்யம். தோசை மாவை மட்டும் வாங்கிக் கொண்டு கிளம்பிவிடலாம். உள்ளே போனால் நம்ம சரவணா ஸ்டோர்ஸ் மாதிரிக் கூட்டம் கும்மியடித்துக் கொண்டிருக்கும்.

மும்பையில் D-மார்ட் மிகப் பிரபலமான சங்கிலித் தொடர் ரீடெயில் வணிக நிறுவனம். 15க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. வருடம் முழுதும் தள்ளுபடி விலையில் விற்பனை. சரவணா ஸ்டோர்ஸேதான். இந்நிறுவனம் டமானி (D for Damani) என்னும் மிகப் பெரும் பங்குச் சந்தைக் கரடியால் (Bear) நிறுவப் பட்டது என்று என் சகா ஜதின் பாய் கூறினார். (நான் D for Dawood என்று பாமரத்தனமாக முதலில் கற்பனை செய்திருந்தேன்) மிகப் பெரும் செல்வந்தரான அவர் ஒரு இடத்தில் கடை தொடங்க வேண்டுமென்றால், அது அவரது சொந்த இடமாக இருந்தால்தான் துவங்குவாராம். முலுந்த் என்னும் இடத்தில் ஒரு லட்சம் சதுர அடியில் கடை உண்டு. மிகப் பெரும் கடை, பார்க்கிங் வசதியோடு. இந்தத் தொழிலில், கடை வாடகை (சில இடங்களில் சதுர அடிக்கு மாதம் 100 ரூபாய்க்கும் அதிகம்) மற்றும் பொருள் சேதம் மிகப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விடும்.

மற்ற பொருட்களை நான் ரிலையன்ஸ் ரீடெயிலில் வாங்கிக் கொள்வேன். வழக்கம் போல் அக்கடையில் மொத்தம் 15 பேர் இருந்தனர். அதில் 12 பேர் ஊழியர்கள். இத்தனைக்கும் D-மார்ட்டில் இருந்து ரிலையன்ஸ் கூப்பிடு தூரம். மாடியில் தியேட்டர். ஹாரி பாட்டரின் முதல் படத்தில் ஹாரி ஒரு வகுப்பில் உட்கார்ந்து இருப்பார். அவரது ஆசிரியர் ஸ்னேப், அவரைப் பல கேள்விகள் கேட்பார். ஹாரிக்கு ஒரு கேள்விக்குக் கூட பதில் தெரியாது. இளக்காரமாக ஹாரியைப் பார்த்து “clearly, fame is not everything Mr.Potter” என்று சொல்லுவார். நான் சந்தோஷமாக “clearly, fame is not everything Mr.Ambani” என்று சொல்லிக்கொள்ளுவேன். சீக்கிரமா வேலை முடியுதே..

வீட்டுக்கு வந்து ஸாசேஜ் வறுத்துக் கொண்டு, தோசையோடு சாப்பிட்டேன். அப்புறம் மாதுளை ஒன்று. இப்போதெல்லாம், என்ன சாப்பாடு என்று யோசிப்பதில்லை – எவ்வளவு கார்போ ஹைட்ரேட், ப்ரொட்டீன், ஃபேட் என்ற கணக்கில்தான் சாப்பாடு. நாக்கைக் கன்ஸல்ட் பண்ணிச் சாப்பிடணும்னா, நாலு வேளையும் பட்டினி கிடக்கணும். எங்க ஊரில் ஒரு பழமொழி உண்டு – குதிர காஞ்சா வைக்கோல் சாப்பிடும்னு. ஆனால், வைக்கோல் அவ்வளவு ருசியா இருக்கும்னு எனக்கு அப்போத் தெரியாது.

சாப்பிட்டுட்டு, ஃபேக்டரி நோக்கி மீண்டும் ஒரு நடை பயணம். மிகத் தெளிவாக வந்த முதல் நாளே, ஃபேக்டரியின் எதிரில் உள்ள ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்தில் வீடு தேடிக் கண்டு பிடித்தேன். மும்பையில் பஸ்ஸிலோ, ரயிலிலோ பயணம் செய்து உயிர் வாழ்வதில் பயனில்லை.

பேக்டரியில் இரவு ஸூப்பர்வைசர் ஜெயந்தி பாய் தேனீர் குடித்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் “ஆவோ பாலா சேட்” என்று எழுந்தார் (எனக்கு சிதம்பரம் ஜெயராமனின் – சில முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே பாட்டு நினைவுக்கு வந்தது). தீபாவளி முடிந்து தொழிலாளிகள் பலர் சொந்த ஊருக்குச் சென்றிருந்தார்கள். இன்னும் வரவில்லை. எங்கள் தொழிலும் தீபாவளி முடிந்து ஒரு வாரம் ஈயடிக்கும் – எனவே இன்னும் இரவு ஷிஃப்ட் முழுவதும் இயங்கவில்லை. எனக்கென்னவோ வாங்கும் காசுக்கு முழுதும் தம்மைக் கொடுப்பவர்கள் இவர்கள்தான் என்று தோன்றுகிறது. இங்கே ஒரு அருமையான கலாச்சாரம். எவன் வந்தாலென்ன போனாலென்ன என்று அவரவர் தத்தம் வேலையைப் பார்ப்பது.

ஒரு ரவுண்ட் சுற்றிவிட்டுப் புறப்பட்டேன். “டெய்லி ராத்திரி ஒரு ரவுண்ட் வந்து போ பாலா சேட்! ஹம் கோ மஜா ஆயேகா” என்றார். நிஜமாச் சொல்றாரா இல்ல நக்கலா என்று புரியவில்லை. முகத்தில் ஒன்றும் தெரியவில்லை.

கேட் வெளியே பழக்கடை வைத்திருக்கும் இளைஞன் கடையை மூடிக் கொண்டிருந்தான். அவனருகில் அவனது இளம் மனைவி அவனோடு விளையாட்டுச் சண்டையில் ஈடுபட்டிருந்தாள். பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது. காலையில் 9 மணிக்கு அலுவலகம் வரும்போதே கடை திறந்திருப்பான். அப்போதெல்லாம் அவனை ஒரு குடும்பஸ்தனாகக் கற்பனை செய்ததில்லை. ஆதலினால் காதல் செய்வீர் என்று பாரதி சரியாகத் தான் பாடியிருக்கிறார்.

முன்பனிக்காலம் துவங்கி விட்டது. அதன் அறிகுறியாக, சாலையில் சோடியம் விளக்குகளைச் சுற்றி பனிக் குடைகள். எங்கோ மக்கள் பட்டாசு வெடிக்கிறார்கள். ராக்கெட்கள் பறக்கின்றன. இன்று என்ன விஷேஷம் என்று தெரியவில்லை.

வீடு வந்து சேர்ந்தேன். ஹீட்டர் போட்டு ஒரு குளியல். குளித்து விட்டு ஏதேனும் எழுதலாம்னு உட்கார்ந்தேன்.