எதிரியிடமிருந்து உலகைக் காப்பாற்ற, ஜேம்ஸ், பறந்து, தவழ்ந்து, ஓடி, சாடி, வழியில் அழகிய இளம் பெண்களின் உடைகளைக் களைந்து, முத்தமிட்டு, அடியாள்களுடன் சண்டையிட்டு, ரத்தம் சிந்தி, உலகு அழிய ஏழு விநாடிகள் இருக்கும்போது(அப்போது தானே, டிஜிடல் கடிகாரம் 007 என்று காண்பிக்கும்!), கடிகாரத்தை நிறுத்தி உலகைக் காப்பாற்றி விடுவார். 80 களில் பதின் வயதினரான நாங்கள், நாற்காலியின் முனையில் நகம் கடித்துக் கொண்டு பார்த்து விட்டு இறுதியில் நிம்மதிப் பெருமூச்சு விடுவோம். மூன்று மாதங்கள் முன்பு, ஐம்பதினாயிரம் இந்தியக் குடும்பங்கள் அப்படிப் பெருமூச்சு விட்டன.

அதற்குக் காரணமான ஜேம்ஸ் பாண்ட் வேறு யாருமில்லை.. உலகிலேயே மிக மோசமான, ஊழல் மலிந்த, தரக்குறைவான அரசியல்வாதிகளால் நடத்தப் படுவதாகச் சொல்லப் படும் நம் இந்திய அரசுதான்.

2009 ஜனவரி மாதம் 7 ஆம் தேதி – இந்தியத் தொழில் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர் ராமலிங்க ராஜு, தான் தன் நிறுவனத்தின் லாபத்தை அதிகரித்துக் காட்டி, மக்களை ஏமாற்றியதாக ஒப்புக் கொண்ட நாள். பங்குச் சந்தையில் அதன் பங்குகள் சர சரவெனச் சரிந்தன. பொதுமக்களும், ஊடகங்களும் தம் பங்குக்கு, ராஜு பற்றிய ஜோக்குகளை உருவாக்கி, பகிர்ந்து, தத்தம் ஜனநாயகக் கடமையை ஆற்றத் துவங்கினர்..

சத்யம் அமெரிக்கப் பங்குச் சந்தையிலும் லிஸ்ட் செய்யப் பட்ட நிறுவனம். அதன் பெரும்பாலான தொழில் அமெரிக்காவில் இருந்து வருவதே. உடனடியாக பிரச்சினை தீர்க்கப் படாவிட்டால், இந்தியாவின் பெருமைகளுள் ஒன்றான கணிணி மென்பொருள் தொழிலின் மதிப்பு உலக அரங்கில் வீழ்வது நிச்சயம். ஐம்பதினாயிரம் குடும்பங்கள் பாதிக்கப் படும். உலகப் பொருளாதாரம் மிகப் பெரும் நெருக்கடியில் உள்ள சமயத்தில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கக் கூடும்..

சொல்லப் போனால், இந்தியத் தொழிலுக்கு ஒரு மாபெரும் நெருக்கடி. தெளிவான குறிக்கோளோடு விரைந்து செயல்படுவதுதான் ஒரே வழி. தாமதம் சத்யத்தின் மரணத்துக்கு வழி வகுக்கும்.

காட்டுத் தீ போலப் பரவத் துவங்கிய ராஜுவின் ஒப்புதல் வாக்குமூலத்தின் சாரத்தை, SEBI யின் தலைவர், தொழில் நிறுவன விவகாரச் செயலர் அலுவலகத்துக்கு அனுப்பிவைத்தார். அத்துறையின் அமைச்சர் ப்ரேம் சந்த் குப்தாவுக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் உடனடியாகத் தகவல்கள் அனுப்பப் பட்டன. மேலும் தகவல்களைத் தோண்டச் சொல்லி, ஹைதராபாத்தில் உள்ள registrar of companies க்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இவையனைத்தும் முதல் இரண்டு மணி நேரத்துக்குள்ளாகவே நடந்தன.

அரசு உடனடியாக சத்யம் நிறுவனத்தின் இயக்குனர் குழுவைத் தாண்டி ஒரு இயக்குனர் குழுவை நியமித்தது. மூன்று நாட்களுக்குள்ளாகவே, HDFCயின் தலைவர் தீபக் பாரிக்கை சத்யம் விவகாரத்தைக் கவனிக்க அழைத்தது அரசு. மென்பொருள்த் தொழில் கூட்டமைப்பின் முன்னாற் தலைவரான கிரண் கார்னிக், செக்யூரிட்டிஸ் அப்பெல்லேட்டின் முன்னால் தலைவர் அச்சுதன் ஆகியோரும் அரசு நியமித்த இயக்குநர் குழுவில் பணியாற்ற ஒப்புக் கொண்டனர். கிரண் கார்னிக், சத்யத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

ராஜுவின் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த நான்காம் நாள் ஞாயிறு மாலை, ஜனவரி 11, அரசு நியமித்த இயக்குநர்களின் முதல் கூட்டம் துவங்கியது. இரவு 9:30 மணிக்குத் துவங்கிய முதல் கூட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. அடுத்த நாள் காலையில், இயக்குநர் கூட்டங்கள் மிக formal ஆகத் துவங்கின. இயக்குநர்கள் மீடியாவின் தொந்தரவுக்குப் பயந்து, தமது தொலைபேசி எண்களை மாற்றிவிட்டு, தொலைத் தொடர்புக்கு அப்பால் சென்று விட்டனர்.

இந்த அவசரத்தில், அரசு செய்ய வேண்டிய கடமைகள் இரண்டு இருந்தன.

  1. சத்யம் நிறுவனத்தை உயிர் பிழைக்கச் செய்வது

  2. ராஜு ஒப்புக் கொண்ட குற்றங்களை விசாரித்து, உண்மையை வெளிக் கொணர்வது

இதில் முதல் கடமை, எதிர்காலம் பற்றியது. இரண்டாவது, போஸ்ட் மார்ட்டம்.

முதல் கடமையை நிறைவேற்ற, அரசு, இன்னும் சில வல்லுநர்களை இயக்குநர் குழுவில் பணியாற்ற அழைத்தது. இந்தியத் தொழில் கூட்டமைப்பின் ஆலோசகர் தருண் தாஸ், பங்குச் சந்தை வல்லுநர்களான மனோகரன் மற்றும் மைனக் முதலியோர். சத்யத்தின் பிரச்சினையைத் தீர்க்க இவர்கள் அனைவரின் பங்களிப்பும் தேவைப்பட்டது. இந்த இயக்குநர் குழுவை அமைக்கும் முடிவு அரசின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்று புகழப் படுகிறது.

இரண்டாவது கடமை சீக்கிரத்தில் முடியப் போவதில்லை – அவை அரசு சார்ந்த தொழில் குற்றங்களை விசாரிக்கும் அமைப்புகளிடத்தில் விடப் பட்டன.

12 ஆம் தேதி, திங்கள் கிழமை, பொறுப்பேற்றுக் கொண்ட இயக்குநர் குழுவின் முதல் பணி – சத்யத்தில் பணி புரிவோருக்கு சம்பளம் கொடுப்பது. 15 ஆம் தேதி அமெரிக்க ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்தாக வேண்டும். இதில் பயங்கர சிக்கல்கள் இருந்தன. ராஜு தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் சுமார் பத்தாயிரம் போலி ஊழியர்கள் இருந்ததாகக் கூறியிருந்தார். அந்த வங்கிக் கணக்கில் பணம் போய்விடக் கூடாது. அது மட்டுமில்லாமல், வரவேண்டிய பாக்கிகள் உண்மையா என்றும் தெரியவில்லை. நிறுவனத்தின் கையிலும் பணமில்லை.

என்ன செய்வது என்று யோசித்து, ஹைதராபாத்தில் உள்ள சத்யத்துக்கு சொந்தமான இரண்டு காம்பஸ்களை வங்கியில் அடமானம் வைத்து, சம்பளத்துக்கானப் பணம் புரட்டலாம் என்று முடிவெடுத்தது இயக்குநர் குழு. ஆனால் அதில் ஒரு சிக்கல். அந்த காம்பஸ்கள் கட்டப் பட்ட நிலம், ஆந்திர அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனத்திடம் இருந்து சலுகை விலையில் வாங்கப் பட்டது. எனவே, அந்த நிறுவனத்திடம் இருந்து நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் தேவைப்பட்டது. இதை வாங்குவதுதான் மிகப் பெரும் சவாலாக இருந்தது. கடைசி நொடி வரை அனைவரின் இதயத்துடிப்பையும் எகிற வைத்தது. ஒரு வழியாக, பணம் புரட்டி சம்பளம் கொடுக்கப் பட்டது.

அடுத்த சவால் – நிறுவனத்தை நடத்துவது. பாஸ்டன் கன்சல்டிங் குருப் என்னும் ஆலோசக நிறுவனம், சத்யத்தை நிர்வகிக்கும் ஆலோசகராக நியமிக்கப் பட்டது. டாடா கெமிக்கல்ஸின் முன்னாள் தலைவர் ஹோமி குஸ்ரோகானும், முருகப்பா குழுமத்தின் முன்னாள் நிதி நிர்வாகத் தலைவர் பார்த்தோ தத்தாவும் ஆலோசகர்களாக நியமிக்கப் பட்டார்கள். இயக்குநர் குழுவிடமிருந்து, சத்யத்தை நிர்வகிக்கும் பொறுப்புகளை இவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

தோள்களிலிருந்து நிர்வாகப் பாரம் இறங்கியவுடன், இயக்குநர் குழு, அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றது. அது சத்யத்துக்கு ஒரு புதுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பது. சத்யம் நிறுவனத்தில் நீண்ட நாள் பணி புரிந்த, அனைவராலும் நேர்மையானவர் என்று ஏற்றுக் கொள்ளப் பட்ட திரு..எஸ்.மூர்த்தி தலைவராக நியமிக்கப் பட்டார்.

புயல் வீசிய அந்தக் காலத்தில் சத்யம் நிறுவன ஊழியர்கள் தம் கடமையில் காட்டிய ஈடுபாடு மிகவும் போற்றப் படுகிறது. அச்சமயத்தில், வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் அளித்த சேவை, வாடிக்கையாளர்களின் அவநம்பிக்கையைப் போக்க உதவியது. கப்பல் மூழ்கத் துவங்குகையில் முதலில் எலிகள் தப்பியோடத் துவங்கும் என்று சொல்வார்கள். மூழ்கத் துவங்கும் நிறுவனத்திலிருந்து ஊழியர்களே முதலில் வெளியேறத் துவங்குவர். ஆனால், இங்கே, அவர்கள் சத்யத்தைத் தாங்கி நின்றனர். சத்யத்தைக் காப்பாற்ற அரசு எடுத்த மின்னல் வேக நடவடிக்கைகள் ஊழியர்களுக்கு தெம்பை அளித்ததே காரணம்.

மூர்த்தியின் தலைமையிலான மேலாண்மைக் குழு முக்கிய வாடிக்கையாளர்களை நேரடியாகச் சந்தித்து, சத்யத்தைக் காப்பாற்ற அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை விளக்கி, அவர்களின் நம்பிக்கையைப் பெறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. பெரும்பாலோனோர், பொறுத்துப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தனர். அந்நிலையில் அவர்கள் வேறொன்றும் செய்வதற்கில்லை.

முக்கிய வாடிக்கையாளர்களைக் கவனிக்கும் பொறுப்பிலிருந்த ஊழியர்களை இயக்குநர் குழு தொடர்பு கொண்டு, அவர்களுக்கு குறைந்த பட்சம் ஒரு ஆண்டு பணி நிரந்தரம் உண்டு என்று உறுதியளித்தது. அனேகமாக எல்லா சீனியர் ஊழியர்களும் இருந்து பார்ப்போம் என்று முடிவெடுத்தனர்.

வாடிக்கையாளர்களும், முக்கிய ஊழியர்களும் சத்யத்தின் மீது நம்பிக்கை வைக்க, மூழ்கும் கப்பலின் ஓட்டைகள் அடைக்கப் பட்டன. கப்பல் இப்போது, பயணிக்கத் துவங்கியது.

இயக்குநர் குழுவின் அடுத்த வேலை துவங்கியது. கப்பலை ஒரு நல்ல முதலாளியிடம் ஒப்படைப்பது. மிகக் கஷ்டமான வேலை. 90 நாட்களுக்குள் நிறுவனத்தை ஒரு நல்ல முதலாளியிடம் விற்றுவிட வேண்டும் என்னும் இலக்கை அரசு நிர்ணயித்திருந்தது. இல்லையெனில், நிறுவனம் தற்காலிக உயிர் பிழைப்பிலிருந்து மடிந்து விடும் அபாயம் இருந்தது.

ஏழாயிரத்து எந்நூறு கோடி பொய் லாபம். பத்தாயிரம் போலி ஊழியர்கள். இவை ராஜு ஒத்துக் கொண்ட குற்றங்கள் மட்டுமே. உண்மை என்னவென்று யாருக்குத் தெரியும்?? 440 ரூபாயிலிருந்து, 6.5 ரூபாய் வரை சரிந்துவிட்டது பங்கு விலை. யார் வாங்குவார் இப்படிப் பட்ட கம்பெனியை??

நிறுவனத்தை விற்கும் ஆலோசனையை வழங்க கோல்ட் மேன் சாக்ஸ் என்னும் புகழ்பெற்ற நிதி நிறுவனமும், அவெண்டிஸ் கேப்பிடல் என்னும் நிறுவனமும் ஜனவரி இறுதியில் நியமிக்கப் பட்டன. இயக்குநர் குழு பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் ஆலோசகர்களை அழைத்து, நிறுவனத்தை விற்பனை செய்யும் நோக்கைத் தெரிவித்தது. இதில் முக்கிய பங்கு வகித்தவர் தீபக் பாரீக். இதை மிக ஜாக்கிரதையாகக் கையாளும் திறன் கொண்டவர் அவர். இந்தியாவில் அனைவரும் மதிக்கும் ஒரு பேங்கர்.

சத்யம் நிறுவனத்தை ஒட்டு மொத்தமாக விற்பனை செய்ய முடிவெடுக்கப் பட்டது. பிரச்சினை என்னவென்றால், என்ன விலை நிர்ணயிப்பது என்பதே. 440 ரூபாயிலிருந்து, 6.5 ரூபாய் ஆகி விட்ட பங்குகளுக்கு, வாங்க முன் வரும் நிறுவனம் என்ன விலை கொடுக்கும் என்பது யாருக்கும் தெரியவில்லை. இயக்குநர்குழு பதைபதைப்போடு இருந்தது. மறைமுக ஏல முறை கையாளப்பட்டது.

மார்ச் மாத இறுதியில், லார்ஸன் அண்ட் டூப்ரோ, ஸ்பைஸ் டெலிகாம், மஹிந்த்ரா, ராஸ், காக்னிஸண்ட் டெக்னாலஜிஸ், ஐகேட் இன்னும் பல நிறுவனங்கள் சத்யம் நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டின. விற்பனை முயற்சியை நேர்மையாக நடக்கிறதா என்பதை மேற்பார்வை செய்து சான்றுரைக்க, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி பரூச்சா நியமிக்கப் பட்டார்.

மறைமுக ஏல நாள் ஏப்ரல் 13 என்று அறிவிக்கப் பட்டது. 12 ஆம் தேதி இயக்குநர்களுக்க்குத் தூக்கம் போயிற்று. சத்யத்தின் பிரச்சினைகள் என்ன்வென்று முழுதும் தெரியாத நிலையில், யாரும் விலை கேட்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற பயம் எல்லோரையும் ஆட்டிப் படைத்தது. இறுதிச் சுற்றில் லார்ஸன் அண்ட் டூப்ரோ, டெக் மஹிந்த்ரா, ராஸ் மற்றும் காக்னிஸண்ட் நால்வரும் இருந்தனர்.

12 ஆம் தேதி இரவு, காக்னிஸண்ட் போட்டியிலிருந்து விலகிக் கொள்ள இயக்குநர்களின் ரத்த அழுத்தம் எகிறியது. எல்லோரும் எதிர்பார்த்த ஏப்ரல் 13ம் வந்தது. தாஜ் ப்ரசிடெண்ட் ஹோட்டல். காலை 9 மணிக்குத் துவங்கியது விற்பனை விழா. முதலில் லார்ஸன் அண்ட் டூப்ரோ வந்து அவர்களின் விலையைச் சொன்னார்கள். பின்னர் டெக் மஹிந்த்ரா. இறுதியில் ராஸ். கிட்டத் தட்ட மூன்று மாதங்கள் இயக்குநர்களின் தூக்கத்தையும், ரத்த அழுத்ததையும் சோதித்த இம்முயற்சி, சுபமாக முடிந்தது. ஒரு பங்குக்கு 56 ரூபாய் விலை கொடுத்திருந்த டெக் மஹிந்த்ரா, தனக்கு அடுத்த படியாக இருந்த லார்ஸன் அண்ட் டூப்ரோ வை விட 26% சதம் அதிகம். சத்யம் நிறுவனத்தை வெள்ளித் தட்டில் வெற்றிலை பாக்கு வைத்து டெக் மஹிந்த்ராவிற்கு அளித்தது இயக்குநர் குழு. அரசும், தொழில் துறைத் தலைவர்களும், சத்யம் ஊழியர்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

சத்யம் விஷயத்தில் அரசின் மிகத் துரிதமான நடவடிக்கை நமது நாட்டிற்குப் புதிது. மின்னல் வேகம் என்பதுகூட குறைவான மதிப்பீடே. அரசின் வேண்டுகோளுக்கிணங்க தமது அலுவல்களை ஒதுக்கிவிட்டு, இப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட அந்த தொழில்த் துறைத் தலைவர்களுக்கு நாடு நன்றிக் கடன் செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறது. தொழில்திறனும், நேர்மையும் வாய்ந்த தலைவர்கள் செயல்படும் விதம் மிக அழகானதோர் நிகழ்வு. பிஸ்மில்லா கானின் ஷெனாய் போல.. எம்.எஸ் அம்மாவின் பஜகோவிந்தம் போல. HDFCயின் தலைவர் தீபக் பாரிக், Nasscomன் முன்னால் தலைவர் கிரண் கார்னிக் இருவரும் உலகின் மிகச் சிறந்த தொழில் துறைத் தலைவர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்கள்

இந்தப் பிரச்சினையின்போது, இன்னுமொரு கோணம் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டது. அது, சத்யம் நிறுவனத்தின் ஆடிட்டர்களின் பங்கு. ஆடிட்டர்கள் மீது மாபெரும் தவறு இருப்பதாகக் கூறப்பட்டது. அது உண்மை. ஆனால், எந்த ஆடிட்டராக இருந்திருந்தாலும் இது நடந்திருக்கும் வாய்ப்புகள் உண்டு.

ஒரு நிறுவனத்தை ஆடிட் செய்யும் நிறுவனம், அதற்கான பயிற்சி பெற்ற ஆடிட்டர்களை அனுப்பவதில்லை. தம்மிடம் ட்ரெய்னியாக இருக்கும் 1-2 வருட அனுபவம் கூட இல்லாத இளம் பட்டதாரிகளையே அனுப்புகிறார்கள் – அவர்கள் பொதுவாக C.A தேர்வு எழுதத் தயாராக இருக்கும் மாணவர்களாக இருப்பார்கள். புத்திசாலிகளாக இருந்தாலும், அவர்கள் வியாபார நுட்பம் அறிந்தவர்களில்லை. கத்துகுட்டிகள். அவர்களும் எல்லா ஃபைல்களையும் புரட்டிப் பார்த்து விட்டு, எந்தெந்த இடங்களில் நிறுவன விதிகள் மீறப்பட்டுள்ளன என்று ஒரு லிஸ்ட் தயார் செய்து கொடுப்பார்கள். 15-20 வருட தொழில் அனுபவம் பெற்ற மேலாளர்கள் இவர்களை மிகச் சுலபமாக ஏமாற்றிவிடுவார்கள்.

இது எப்படி என்றால், சாலையில் செல்லும் வாகனங்கள் சாலை விதிகளை மீறும் போது, காவலர் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது போல். அதை மட்டும் பார்க்கும் காவலர்கள், சாலையில் செல்லும் வாகனங்களில் ஆயுதங்களோ, போதைப் பொருட்களோ கடத்தப் படும் சாத்தியக் கூறுகளைப் பற்றி யோசிக்கும் திறன் பெற்றவர்களில்லை. அதேபோல், இவ்விளைஞர்களும், மிக மேலோட்டமாக, நிறுவன விதிமுறை மீறல்களைப் பற்றி மட்டுமே அறிக்கையாகக் கொடுக்கிறார்கள்.

சத்யம் நிறுவன ஊழலில், இந்த ஆடிட்டர்களின் standard operating procedure ன் inadequacy மிகத் தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் தம் வழிமுறைகளை மாற்றியமைத்து, மேலும் தீவிரமாக நிறுவனங்களைக் கண்காணிக்க வேண்டியது மிக அவசியம். மிக முக்கியத் தகவல்களை, ஆடிட் நிறுவனங்களின் சீனியர் ஆடிட்டர்கள் ஆடிட் செய்ய வேண்டும் – நிறுவனங்களின் நிதிநிலை, இயக்குநர்களின் செயல் பாடுகள் முதலியவற்றை இன்னும் கூர்ந்து ஆராய்ந்து தனியே ஒரு அறிக்கை தயாரிக்க வேண்டும்.

சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீதம், விதிமுறைகளை மீறி அதன் மூலம் நன்மை பெறும் நோக்கத்துடன் செயல்படுகிறார்கள். சமூகக் காவல் நிறுவனங்களான அரசு, காவல் துறை, ராணுவம், சிவில் நிறுவனங்கள் – இவையனைத்துமே reactive. ஒரு பிரச்சினை எழுந்த பின்பு, அதற்கான தீர்வை யோசித்து. வழிமுறைகளைக் கண்டுபிடித்து, பின்பு அவற்றை விதியாக மாற்றுகிறார்கள். ஆனால், விதிமுறைகளை மீறும் deviants மிகப் புத்திசாலிகள். அவர்கள் புதிது புதிதாக, விதிமுறைகளை மீறுவதன் சாத்தியக்கூறுகளை யோசிக்கிறார்கள். ஒரு கிரிமினல் எப்படியெல்லாம் யோசிப்பான் என்று அவனைத் தாண்டி போலிஸ் யோசிப்பது இயலாத காரியமே..

ஒரு ராஜு தவறு செய்ய முடிவெடுத்துவிட்டால், ஒன்றுமே செய்ய இயலாது என்பதே உண்மை. பில் க்ளிண்டனுக்கு வாக்களித்த அமெரிக்கர்களுக்கு, அவர் வெள்ளை மாளிகையின் பணிப் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளக் கூடிய சாத்தியக் கூறுகள் முன்னரே தெரியாதல்லவா…

Advertisements