பெய்ஜிங் விமான நிலையத்தில், சுங்க அதிகாரியின் முன் நின்று கொண்டிருந்தேன். உற்றுப்பார்த்தார். கழுத்து வலிக்காகப் பட்டை அணிந்திருந்தேன். கழற்றட்டுமா என்று கேட்டேன். வேண்டாம் என்று தலையசைத்து, போய் வா என்றார் புன்னகையுடன். ஆச்சரியமாக இருந்தது. சுங்க அதிகாரிகள் வழக்கமாக, தேசப்பாதுகாப்பு தன் தோள்களில் மட்டுமே சுமத்தப்பட்டிருப்பது போன்ற பாவனையுடன் தென்படுவார்கள். நான் இதுவரை பயணம் செய்த பாலைவன மற்றும் கிழக்காசிய நாடுகளில், இந்தியச் சுங்கச் சீட்டென்றால், இளப்பமாக நடத்தப் படுவதை அனுபவித்த எனக்கு, இது இன்ப அதிர்ச்சி. அலுவலகப் பயணம்- உடன் ஒரு சகா. இது போன்ற இன்ப அதிர்ச்சிகள் பயணம் முழுதும் கிடைத்தன.

சில தொந்திரவுகளும் இருந்தன – துவக்கத்தில். முதல் நாள் காலை தான் கவனித்தேன். அறையில், காப்பி சாஷே இல்லை. எனக்கு இடி விழுந்தாற் போல் ஆயிற்று. சென்னை வாசியானதில் இருந்து, எனக்குக் காலையில் ஆய் போக காப்பியும், ஹிண்டு பேப்பரும் வேணும். ஹிண்டு பேப்பரை இண்டர் நெட்டில் பிடித்தேன். ஆனால் காப்பி??? போனை எடுத்தேன்.. “ரூம் செர்வீஸ்??” அதட்டினேன். மறுபுரம் இருந்து கடவுளின் குரல் கேட்டது – புரியவில்லை. கொஞ்ச நேரம் மன்றாடிய பின் ஞானம் பிறந்தது. உடையணிந்து கொண்டு, வரவேற்பறைக்குச் சென்றேன். “எனக்குக் காப்பி வேணும்..” என்றேன். மைதா மாவில் செய்து, கண்கள் மட்டும் பொருத்தப் பட்டது போல் இருந்த அந்த வரவேற்பறைப் பெண் சிரித்தாள். புரியவில்லை. எரிச்சலுடன் “காப்பி, காப்பி..” என்றேன். மீண்டும் சிரிப்பு. இப்போது புரிந்தது. “No English???” என்றேன். உதட்டில் இருந்த புன்னகை இப்போது முகம் முழுதும் பரவியது. “No English!!!” என்றாள் உற்சாகத்துடன். இடுக்கண் எனக்கு. பின் அரை மணி போராடி, காப்பி சாஷேயைப் பெற்றுக் கொண்டு அறைக்குத் திரும்பிய பின் இன்னொரு உண்மையைக் கண்டு பிடித்தேன். சர்க்கரை சாஷே இல்லை. இந்த முறை, கண்ணீர் விடும் நிலைக்குச் சென்று விட்டேன். “பாஸ், இந்தப் பெண்களிடம், செக்ஸ் என்னும் வார்த்தையைச் சொல்லிப் புரிய வைப்பதற்குள் குழந்தை பெற்று விடலாம்” என்றார் சகா. உண்மை என்று பட்டது. ஆனால், இந்த அளவு தொந்திரவு கொடுக்காமல் வயிறு ஒத்துழைத்ததை இங்கு நன்றியுடன் குறிப்பிட்டாக வேண்டும்.

ஆனால், பெய்ஜிங் விட்டு, சிறு நகரங்கள் சென்ற போது புரிந்தது – காப்பி கிடைக்காது என்று. வேறு வழியின்றி, பச்சைத் தேயிலை குடிக்க வேண்டியிருந்தது, சர்க்கரையின்றி. இங்குதான், காப்பியின்றி, ஹிண்டு இன்றி ஆய் போகாதென்னும், சென்னை மூட நம்பிக்கை ஒழிந்தது. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா…

சீனப் பயணம் துவங்கும் போது, உணவைப் பற்றி ஒரு பயத்துடன் தான் சென்றேன். அசைவம் தான் எனினும், பாம்பையும் பல்லியையும் எப்படிச் சாப்பிடுவது?? சொல்லப் போனால், சீனாவைப் பற்றி சரியான தகவல்களே நம்மிடம் இல்லை. அதனால், அங்கு சென்று வந்த நண்பர்களின் opinions தான் வழிகாட்டியாக இருந்தன. சைவ நண்பர்கள் “செத்தடா மவனே” என ஆசி வழங்கினர். சிலர், “மெக்டொனால்ட்ஸ் இருக்கு மச்சி, சாக மாட்டே..” என்று நம்பிக்கையூட்டினர். ஆனால், அங்கு எனக்குக் கிடைத்தது நல்ல உணவு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் பற்றிய ஒரு மிகப் பெரிய விழிப்புணர்வும் கூட. எனக்கு நமது உணவைப் பற்றிய ஒரு அசட்டுப் பெருமிதம் உண்டு. அது எவ்வளவு தவறு என்பதை பயண முடிவில் உணர்ந்தேன்.

சைனாவில், தேனீர் அருந்துவது ஒரு மிகப் புதிய அனுபவமாக இருந்தது. நான் வியாபார நிமித்தமாகச் சந்தித்த ஒவ்வொரு மனிதரின் மேசையிலும், நீர் கொதிக்க வைக்கும் மின்சார கொதிப்பான் இருந்தது, பேசிக் கொண்டே நீரைக் கொதிக்க வைக்கிறார்கள். பின், மேசையின் இழுப்பறையிலிருந்து பச்சைத் தேயிலையை எடுத்து கொதிக்கும் நீரில் போடுகிறார்கள். தேனீர் தயார்! எவ்வளவு எளிதாக இருக்கிறது. “வாழ்க்கை மிக எளிது. அதை மனுஷப் ப்ரயத்தனம் சிக்கலாக்கி விடுகிறது” என்று மறைந்த காஞ்சிப் பெரியவர் சொன்னது நினைவுக்கு வந்தது. நம் ஊரில், இரண்டு டீ குடித்தால், மதிய உணவு கெட்டு விடும். சுவை பழகும் வரை, முயற்சி செய்ய வேண்டியிருந்தது. பத்து நாட்களுக்குப் பிறகு, ஒவ்வொரு சந்திப்பிலும், தேனீரை மனம் எதிர்பார்க்கத் துவங்கியது. தேனீரும் நாப்பழக்கம்!

ஆனால், மதிய இரவு உணவுப் பழக்கங்கள் – இதற்கு நேர்மாறாக இருந்தன. நிறைய உணவு வகைகள். நிதானமாக, ஒரு குழுவாகச் சாப்பிடுகிறார்கள். வெளியே அழைத்துச் செல்லும் போது, கார் ஓட்டுனரையும் உடன் ஒரே மேசையில் உட்கார வைத்து உணவு உண்கிறார்கள். நான் பார்த்த வரையில், சைனாவில் கம்யூனிஸம் இந்த ஒரு இடத்தில் தான் இருந்தது. தேனீருடன் துவங்குகிறது உணவு. முதலில், சூப் – அதன் சுவையும் மணமும் பழகும் வரை மிகக் கடினம். அப்புறம், மாமிச வகைகள். கொஞ்சம் காய்கறிகள். எல்லாமே வேகவைத்தவைகள். வறுத்த உணவுப் பண்டங்கள் மிகக் குறைவு. இல்லையென்றே சொல்லவேண்டும். சில இடங்களில் மட்டுமே, சாப்பிட்டு முடிந்ததும், இனிப்பு பரிமாறப்பட்டது. எண்ணெய், பால், சர்க்கரை இவை மூன்றும் சீன உணவில் மிகக் குறைவு. சீனர்களின் ஆரோக்கியத்துக்கும், இந்தியாவில், மிக அதிகமாக இதய நோய் இருப்பதற்கும் காரணம் இவையே. நமது உணவுப் பழக்கங்களை நமது நாக்கு தீர்மானிக்கிறது. நாக்கை விலக்கி, மூளையைப் பயன்படுத்த வேண்டியது நமது இன்றைய மிக முக்கியத் தேவை.

சீனர்கள் உண்ணும் உயிரினங்கள் பற்றிய கிண்டல்களை ஒதுக்கி, அந்த உணவுப் பழக்கங்களின் அறிவியல் அடிப்படைகளை நோக்கினால், நாம் நமது தற்போதைய உணவுப் பழக்கங்களில் இருந்து மாறவேண்டிய அவசியம் புரியும். எண்ணெயில் குளிப்பாட்டப் படும் நமது உணவு வகைகள் எமனின் வாகனங்கள். அப்போலோ போன்ற மருத்துவத் தொழில் நிறுவனங்களின் காமதேனுகள்.

19 நாட்கள் பயணம் முடிந்து, இந்தியா வந்ததும், என்னை உற்றுப் பார்த்த என் மனைவி சொன்னாங்க “you look better” . கிருஷ்ணமாச்சார்யா யோக மந்திரத்தில், எனது ஆசிரியர் ஆனந்தும் அதையே சொன்னார்.

Advertisements