இரண்டரை ஆண்டுகள் கழித்து, மீண்டும் ஒரு பனிக்காலத்தில், தில்லி சென்றேன். விமானத்தை விட்டு இறங்கியதும், பனி மூட்டம். ஆங்காங்கே மஞ்சள் நிறம் உமிழும் சோடியம் விளக்குகள். ஊருக்குள் செல்ல டாக்சி இடது புறம் திரும்ப முயல, மனம் அழுதது… “ரைட்ல போ.. ரைட்ல போ..”

வலது புறம் திரும்பினால் வரும் வசந்த் குஞ் (vasant kunj). இரண்டு ஆண்டுகளே வாழ்ந்த இடம், ஆனால் ஏதோ பல ஜன்மங்கள் இருந்தது போல் ஒரு உணர்வு.

அழகான இரு படுக்கை அறைகள் கொண்ட வீடு. பெரிய ஹால். குட்டி பால்கனி. அங்கிருந்து பார்த்தால் தெரியும் நடை பாதை கொண்ட அழகிய பார்க். c 518, வசந்த் குஞ். எங்களுக்கான கார் பார்க். பாரதியின் காணி நிலம் போன்ற ஒரு கனவாய்த் தோன்றுகிறது இன்று.

வெயில் காலம், அனல் பறக்கும். குய்யான் குய்யான் என்று அழுது கொண்டே சென்று ஏர் கூலர் வாங்கி வந்து பொறுத்தி, ஏசி சர்வீஸ் செய்து, வெயில் காலத்தை வரவேற்போம். குட்டி swimming play pool வாங்கி ஒரு சம்மர் ஞாயிறுகளில், குட்டீஸ் விளையாடின.

ஞாயிறு காலைகளில் தம்பி (அருண்), அக்கா (மதுரா) மற்றும் அப்பா (நான்) மூவரும், ரப்பர் பால் கிரிக்கெட் விளையாடுவோம். முடிந்தவுடன், D ப்ளாக்
சென்று சிக்கன் வாங்கி வந்து சமைத்து, சாப்பிட்டு விட்டு, மதியம் ஏசி போட்டுக் கொண்டு, யார் கால், யார் கை என்று தெரியாமல் இசகு பிசகாகத் தூங்குவோம்.

மாலை ஆறு மணி வாக்கில் எழுந்து, சோம்பேறிகளாய்க் கிளம்பி, லோதி ரோட்டில் இருக்கும் ரமண கேந்திரம் செல்வோம். ஐந்து நிமிடம் கூட உட்கார விடாமல் (அம்மா.. அம்மா… எப்பம்மா வீட்டுக்குப் போவோம்?? ) தொணப்பி, உயிரை வாங்கி, வெளியே இழுத்து வந்து விடும் இரண்டும். வெளியே வந்து, பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்குப் போய், சுண்டல் பிரசாதம் வாங்கி (இங்கே நம்ம வீட்டு குரங்குகள் சமத்தா இருக்கும்) சாப்பிட்டு விட்டு, கோவில் கடையில் குமுதம், விகடன், இட்லி மாவு வாங்கிக் கொண்டு, வீடு வந்து சேர்வோம்.

மீண்டும் தொடர்வேன்…

Advertisements