குருதிப் புனலில் கமலஹாசன் சொல்வது போல், தமிழ் சினிமா பார்த்து வளர்ந்த கோடிக்கணக்கான பலவீனமான தமிழ் உயிர்களில் நானும் ஒருவன். குக்கிராமத்தில் இருந்து ஈரோடு நகரம் வந்து ஆறாம் வகுப்பு சேர்ந்த போது கேட்கத் துவங்கியது இளையராஜாவின் இசை. கல்லூரி சேர்ந்த காலத்தில் ஒரு நாள், ஒரு காலைக்காட்சி ஒரு புதிய இயக்குனரின் படம் பார்க்கச் சென்றோம் – இளையராஜாவின் இசைக்காக. அங்கே எங்களுக்கு ஒரு இனிய அதிர்ச்சி காத்திருந்தது. அதுவரை, இளையராஜாவின் பாடல்களை யாரும் அவ்வளவு அழகாகவும், இயல்பாகவும் படம் பிடித்திருக்கவில்லை. இளம் பனிக்காற்றாய், மணிரத்னம் இளையராஜாவின் துணையோடு எங்கள் இதயத்தில் நுழைந்தார். படம் பகல் நிலவு.

அடுத்து வந்தது “மெளன ராகம்”. (ஏற்கனவே, சுஜாதாவின், பிரிவோம் சந்திப்போம் புத்தகம் படித்த தாக்கத்தில், எம் பி ஏ படிப்பதென்ற வெறியில் இருந்த எங்களுக்கு, இந்தப் படம் மேலும் வெறியேற்றியது. எம் பி ஏ படிப்பு; உடன் வேலை; ரேவதி மாதிரி மனைவி; வீடு; கார் என கனவுகள் எழுந்து எங்களை ஆட்கொண்டது வேறு விஷயம்). பிண்னணி இசையில் ராஜா ராஜாங்கம் நடத்தி இருந்தார். “மன்றம் வந்த தென்றலுக்கு” பாடல் துவக்கத்தில் எஸ் பி பி யின் ஹம்மிங் துவங்கும் போது, மோகனின் கார், தில்லி ஜனாதிபதி மாளிகை மேட்டிலிருந்து இறங்கத் துவங்கும். இன்று வரை அந்தப் பாடலை எங்கு கேட்க நேர்ந்தாலும், மனத்திரையில், படத்தின் அந்தக் காட்சி ஓடத் துவங்குகிறது. “கொடி அசைந்ததும்” பாடல் போல், இளையராஜாவின் பாட்டுக்கு, மணி படம் பிடித்தாரா, இல்லை மணியின் படப்பிடிப்புக்கு, ராஜா பாடல் அமைத்தாரா? இன்று வரை எனக்கு சந்தேகம். அதே போல், “நிலாவே வா” பாட்டும். இன்றும் எனக்கு, மோகன், நிலா மற்றும் ரேவதி மூவரும் சேர்ந்து வரும் காட்சிகளே நினைவுக்கு வருகின்றன.

நாயகன் படத்தில், ராஜாவின் குரலில் வரும் “தென் பாண்டிச் சீமையிலே” பாட்டு மும்பை வீ டீ ரயில் நிலையத்தையும், கமலின் குரல், அவர் மகனின் இறுதிச் சடங்கையும் மனதில் மீண்டும் மீண்டும் தோற்றுவிக்கின்றன. காவல் நிலையத்தில் கமல் மரண அடி வாங்கும் போது, தூத்துக்குடியை நினைவுறுத்தும் பின்ணணி இசையை நுட்பமாக அமைக்கும் மேதைமை ராஜாவுக்கே உரியது.

மணிரத்னம் “இளைய ராஜா ஒரு ஜீனியஸ் என்று கூறியுள்ளார்”. தமிழ் மொழியின் மிகச் சிறந்த எழுத்தாளரும், விமர்சகருமான சுந்தர ராமசாமியும் அவ்வாறே கூறியுள்ளார்.

விருமாண்டி படத்தில் ராஜா இசையின் இன்னொரு தளத்தில் பிரவேசித்திருப்ப்து நன்றாகத் தெரிகிறது. திருவாசகத்தைப் புரிந்து கொள்ள நமக்கு இன்னும் சில காலம் தேவை.

மணியும், ராஜாவும் கைகோர்த்து இன்னும் 20 ஆண்டுகள் திரைப்படங்கள் செய்து சாதனைகள் புரிய வேண்டும் என்பதே எம் போல் தமிழர் ஆசையும் வேண்டுகோளும்.

Advertisements